Friday, 4 September 2015

தனி ஒருவன்... விமர்சனம் அல்லதனிஒருவன் படத்தில் இரண்டு விஷயங்கள் என்னை கவர்ந்தன. ஒன்று obviously நயன்தாரா, மற்றது நம்ம ஈழத்து பொண்ணு கரீஷ்மா ரவிச்சந்திரன் பாடிய காதல் கிரிக்கட் பாடல்.  கரீஷ்மாவின் குரலில் துள்ளல் இசையில் அமைந்த இந்த பாடல் புதுமை, இனிமை, இளமை.

தனி ஒருவன் படத்தில் இரண்டு விஷயங்கள் மனதில் பதிந்ததன. ஒன்று வில்லனாய் நடித்து அசத்திய முன்னாள் கனவுநாயகன் அரவிந்தசாமி மற்றது "உன் எதிரியை சொல் உன்னை சொல்கிறேன்" என்ற Theme. 


நமது இனத்தின் முதன்மை எதிரியாம் சிங்கள பெளத்த பேரினவாதத்தை விட்டுவிட்டு கூட்டமைப்பு தொட்டு, இந்தியா, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஜநா வரை திட்டி தீர்த்து தாக்கி மகிழும் எனதருமை நண்பர்களிற்கு  "உன் எதிரியை சொல் உன்னை சொல்கிறேன்" என்ற Theme, சமர்ப்பணம். 


அரவிந்தசாமி தளபதியில் அர்ஜுனனாக அறிமுகமாகி இன்று தனிஒருவனில் அபிமன்யுவாக அவதாரம் எடுத்துள்ளார், பாத்திரங்கள் மாறினாலும் அவரின் தனித்துவம் மாறவில்லை. கோட்டு சூட்டு போட்டு ஸ்டைலாக English கதைத்துகொண்டு வில்லன் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியின் நடிப்பு இயல்பானது ஆனால் வித்தியாசமானது. 


எந்தவித வில்லத்தனமான செய்கைகளுமில்லாமல் ஒரு கதாநாயகனிற்குரிய mannerism வெளிப்பட இயல்பாக படுபாதக செயல்களை அசால்டாக செய்த அரவிந்தசாமியின் கதாபாத்திரம் ஏனோ இலங்கையின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை ஞாபகப்படுத்தியது. 
தனி ஒருவனில் சித்தார்த் அபிமன்யுவின் கதாபாத்திரத்தின் மூலகரு ரணில் விக்கிரமசிங்காவோ என்று எண்ண தோன்றுகிறது. 


ரணில் முதல்முதலாக வில்லனாகியது, நாங்கள் படிக்கிற காலத்தில். 80களில் கல்வியமைச்சராக இருந்த போது பாடத்திட்டத்தில் புரட்சி செய்கிறேன் என்று வெளிக்கிட்டு O/Lல் ஒப்படை (அதான் assignment) முறையை அறிமுகப்படுத்தினார். கம்பியூட்டரும் கூகிளும் இல்லாத காலத்தில் ஒப்படை எப்பிடி வெற்றி பெறும் ? அடுத்த ஆண்டே ரணிலின் இந்த "மாற்றம்" ஆட்டம் கண்டு முடிவிற்கு வந்தது....வில்லன் என்ட்ரி


ஆகஸ்ட் 4, 2000ல் சந்திரிக்கா கொண்டுவந்த பிராந்திய (regions) அதிகார பரவலாக்கம், வடகிழக்கு இடைக்கால சபை, விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட அரசியல்யாப்பு யோசனைகளை எதிர்த்து பாராளுமன்றத்திலிருந்து ஆவேசமாக வெளிநடப்பு செய்து, சிங்கள பெளத்த பேரினவாத குரல்களிற்கு ஜிங்கிச்சா போட்டவர் ரணில்... என்ன ஒரு வில்லத்தனம்.


அடுத்த வருஷம் ஆட்சிகட்டிலேறி நோர்வே அணுசரணையில் தலைவருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை, ஒஸ்லோ பிரகடனம் என்று காய் நகர்த்தி கொண்டே மற்ற பக்கத்தால் புலிகளிற்கெதிராக ஒரு சர்வதேச வலைப்பின்னலை சாமர்த்தியமாக பின்னி, கருணாவை பிரித்து புலிகளிற்கு ஆர்ப்பாட்டமில்லாமல் ஆப்படித்தது ரணில் தான்...வில்லாதி வில்லனடா


Genocide, Crimes against humanity, war crimes மற்றும் crimes of aggression என்ற நான்கு சர்வதேச குற்றங்களை புரிந்த அங்கத்துவ நாடுகள் அவற்றை விசாரிக்க தவறும் பட்சத்தில் அந்த குற்றங்களை International Criminal Courtஇல் விசாரிக்கும் Rome declarationல் 1 July 2002ல் 123 நாடுகள் கைச்சாத்திட்டன. ரணிலின் அரசு அன்று அந்த பிரகடனத்தில் கைச்சாதிடாது விட்டதன் விளைவு அடுத்துவரும் கிழமைகளில் வெளிவர இருக்கும் ஐநாவின் போர்குற்ற விசாரணை அறிக்கையில் தெரியும், இன்னுமொரு நசிக்கிடா வில்லன் செயல்...அமுசடக்கி வில்லன்


2005 சனாதிபதி தேர்தலில், ஓஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்தை உதாசீனம் செய்து புலிகள் முடித்த டீலால் தோற்ற ரணிலிற்கு  அலரி மாளிகை திரும்ப 10 வருஷங்களும் தமிழ் மக்கள் My3க்கு அளித்த வாக்குகளும்  தேவைப்பட்டது. 


திரையில் வரும் எந்த வில்லனும் ஒன்றில் தண்டிக்கப்படுவான் அல்லது பரிகாரம் தேடி திருந்துவான், தனி ஒருவன் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. 


அதே போல் 2015ல் மீண்டும் ஆட்சிபீடமேறியிருக்கும் ரணிலிலும் திருத்தம் வந்து, உண்மையான மாற்றம் ஏற்பட்டு தமிழ் மக்களின் உடனடி மற்றும் நீண்டகால அபிலாஷைகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கலாமா ? 


சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சாணக்கியமாக காய் நகர்த்தி சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக்கியதில் வெளிக்காட்டிய துணிச்சலையும் தலைமைத்துவத்தையும் தமிழ் மக்களிற்கு நீதியும் கெளரவபான சமாதானத்தையும் சுயாட்சி அடிப்படையிலான அதிகார பரவலாக்கலையும் போர்க்குற்றவாளிகளிற்கு உரிய தண்டனை வழங்குவதிலும் நடைமுறைபடுத்துவாரா ? 


இல்லை சம்பந்தனிற்கு வழங்கிய எதிர்கட்சி தலைவர் பதவியும் ரணிலின் நசுக்கிடா கள்ளன் வேலையின் இன்னொரு பரிணாமா ? சர்வதேச போர்குற்ற விசாரணையிலிருந்து இலங்கையை காப்பாற்ற ரணில் போட்ட திட்டத்தின் ஒரு அங்கம் தான் கூட்டமைப்பு தலைவர்களிற்கு வழங்கப்படும் பதவிகளா ? 


காலங்காலமாக சிங்கள பெளத்த பேரினவாத தலைமைகளால் நசுக்கப்பட்டு, உயிர் உடமை சொந்தங்களை இழந்து, எட்டப்பட்ட அரசியல் தீர்வுகளும் கிழித்தெறியப்பட்ட அனுபவத்தை வாழ்க்கையாக வாழ்ந்த எமக்கு இந்த சந்தேகங்கள் வருவது நியாயமானதா ? 


காலம் பதில் சொல்லட்டும், அந்த பதில் நல்ல பதிலாக அமைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திப்போம்.

அல்லேலூயா அரோகரா !


No comments:

Post a Comment