Friday, 28 August 2015

பரி.யோவானில்...தமிழ்St.John'sல் படித்தவனென்றால் நுனி நாக்கில் English பேசிக்கொண்டு Johnians always Play the game என்று பிதற்றிக்கொண்டு தெரியும் ஒரு கூட்டம் என்ற மாயை உண்டு. Assembly முதற்கொண்டு அநேகமான பாடசாலை அலுவல்கள் ஆங்கிலத்தில் நடைபெறுவதால், English நம்மோடு தானாக வந்து ஒட்டிக்கொள்ளும், வகுப்பில் 75 சதவீத்த்திற்கும் மேலானவர்களிற்கு Englishற்கு O/Lல் D வரும்.


இந்த மாயையை தகர்த்து கல்லூரியில் எமக்கு தமிழ் மொழியை, தமிழ் இலக்கியங்களை ரசித்து ருசித்து கற்பித்தவர்கள் இருவர், பரியோவானின் தலை சிறந்த தமிழ் ஆசான்கள், ஒருவர் சந்திரமெளலீசன் மாஸ்டர் மற்றவர் கதிர்காமத்தம்பி மாஸ்டர். 


Middle schoolல் முதலாவது வருஷம், ராஜசிங்கம் blockல் classroom, மெளலீசன் மாஸ்டர் தமிழ். பம்பலா கதைத்து பெடியளோடு நல்லா முசுப்பாத்தி விட்டு அழகா தமிழ் சொல்லித்தந்தத்தை மறக்கேலாது. தமிழின் இனிமையை எங்களில் விதைத்தவர் சந்திரமெளலீசன் மாஸ்டர். அவர் தமிழ் மொழியை ஆர்வத்தோடு கற்பிக்கும் விதத்தில் ஒரு குழந்தையின் குதூகலம் குடிகொண்டிருக்கும்.


1982ல் நாங்கள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, சிவகுரு மிஸ் திருமணம் முடித்து பரி யோவானை விட்டு விலக, எங்களுக்கு வகுப்பாசிரியராக பரி யோவானுக்குள் காலடி எடுத்து வைத்தார் சந்திரமெளலீசன் மாஸ்டர். தனது முதலாவது ஆண்டிலேயே "விஸ்வாமித்ரன்" நாடகத்தை எங்கள் வகுப்பு மாணவர்களை வைத்து அரங்கேற்றிய துணிச்சல்காரன். அதிபர் ஆனந்தராஜாவினதும் கல்லூரி சமூகத்தினதும் பெரும் பாராட்டை பெற்ற அந்த தமிழ் நாடகத்தில், நண்பர்கள் யாதவன், இறைவன் மற்றும் விஜயனிற்கு பிரதான பாத்திரங்கள் கிடைத்தன. அடியேனுக்கு கிடைத்த பாத்திரம், மரம். நாடகத்தில் வரும் காட்டு சீனில் ஒரு மரக்கொப்பை பிடித்து கொண்டு மரமாக நடிப்பது, இல்லை நிற்பது. அடுத்த இரண்டு வருடங்கள் ஒரு மொக்கை வாத்தி தமிழ் எடுத்தார். மகா கொடுமை, கடமைக்காக தமிழ் சொல்லி கொடுத்து, பெடியளையும் தமிழையும் கஷ்டப்படுத்தினார். அந்த இரண்டு வருடங்கள் தமிழின் இலக்கண விதிகள் முறையாக கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும், நாங்களும் அதை முழுமையாக உள்வாங்கியிருக்க வேண்டும், இரண்டுமே நடக்கவில்லை, ஒரு நாடு இரு தேசம் கொள்கை மாதிரி ஈடேறாமலே போயிட்டுது. 


Upper Schoolல் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக form III (பரி யோவான் பாஷை..மற்றவர்களிற்கு ஆண்டு 9) தவணை பரீட்சையின் அடிப்படையில் மண்டைக்காய்கள் A பிரிவிலும் அரைகுறைகள் B பிரிவிலும் பம்பல்காரன்கள் C பிரிவிலும் குழப்படிகாரன்கள் D பிரிவிலும் அடைக்கப்பட்டார்கள். B பிரிவில் இருந்த எங்களிற்கு வாய்த்த வாத்திமார் எல்லாரும் கல்லூரியின் மிகச்சிறந்த ஆசிரியர்கள், அரை குறைகளை நிமிர்த்தி எடுக்க அனுப்பப்பட்ட சிறப்பு படைபிரிவு. இந்த படைப்பிரிவின் சிறப்பு தளபதி, அதாவது வகுப்பாசிரியர், கதிர்காமத்தம்பி மாஸ்டர். இவரோடு பல களங்கள் கண்ட தளபதிகள் அன்ரனிப்பிள்ளை மாஸ்டர், பிரபாகரன் மாஸ்டர், ஒகஸ்ரின் மாஸ்டர், மகாலிங்கம் மாஸ்டர் ஆகியோரும் களமிறக்கப்பட்டார்கள். 


கதிர்காமத்தம்பி மாஸ்டரின் பெயரிலுள்ள "திர்" ஐ "ம்பி" யால் replace பண்ணி "காம"வை தூக்கி விட்டுத் தான் பெடியள் குறிப்பிடுவார்கள். மெதுவாக ஆனால் அழுத்தமாக நடந்து வரும் மாஸ்டரிடன் நடையில் கம்பீரம் வெளிப்படும். பரி.யோவானின் பழைய மாணவனாக இல்லாவிட்டாலும் பரி யோவானின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்தவர். கண்டிப்பிற்கும் கன்னம் மின்னும் அறைக்கும் பிரம்பால் வெளுவைக்கும் கதிர்காமத்தம்பி மாஸ்டர் பிரசித்தமானவர்.


தமிழை எங்களுக்கு அவர் ஊட்டிய விதம் அருமை. நளவெண்பாவும், கம்பராமாயணமும் உமர் புலவரின் சீறாப் புராணமும் அவர் படிப்பித்த விதம் இந்த காவியங்களை எம் கண்முன் கொண்டுவரும். அதுவும் கிளுகிளுப்பான சம்பவங்கள் வாற இடத்தில் ஒருக்கா அறுத்து நிறுத்தி வகுப்பை பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார், அப்ப தான் எங்களிற்கு அதன் "அர்த்தம்" விளங்கும். சிரிப்பலை விண் கூவும்..சுண்டுக்குளி மகளீர் கல்லூரி வரை கேட்கும். 


நளவெண்பாவில் சுயம்வர காண்டத்தை காதல் ரசம் சொட்ட சொட்ட  கதிர்காமத்தம்பி மாஸ்டர் படிப்பித்த விதம் பதின்மத்தின் பருவக் கோளாறுகளில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த எங்களை ஒரு வழி பண்ணிட்டுது.  


"நாற்குணமும் நாற்படையா..", மற்றும் 
"மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற".. என்ற செய்யுள் வரிகளிற்கு மாஸ்டர் தந்த விளக்கத்தை கேட்டு காதலிக்க சபதமெடுத்தவர்களில் அடியேனும் அடக்கம்.


 காதலியை தெரிவு செய்யும் checklistல் "நுடங்கும் இடையையும்".."புலம்பும் நூபுரங்களையும்"..."ஏவாளி தீட்டும் இடத்தையும்" சேர்த்து கொண்டோம். 


துரையப்பா பாடம் முடிய மணியடிக்க சுணங்கினால் "கிளிக்கீற்றா" என்று அநாயாசமாக கேட்பதாகட்டும், யாராவது கேள்வி கேட்டால் "ஆர்ரேக்க" என்று விளிப்பதாகட்டும், கதிர்காமத்தம்பி மாஸ்டரின் வகுப்புகள் அலுப்பு தட்டாது. சந்தர்ப்பம் கூறி விளக்குக என்று ஒரு பகுதி பரீட்சையில் வரும். ஓரு வசனத்தை தருவார்கள், அது யாரால் எவருக்கு எப்போது கூறப்பட்டது என்பதை விளக்க வேண்டும். கதிர்காமத்தம்பி மாஸ்டரிடம் படித்த பெடியள் இந்த பகுதியில் ஏறி நின்று குடுப்பாங்கள். 


யாழ்.ஹோலில் கதிர்காமத்தம்பி மாஸ்டரிடம் கொஞ்சகாலம் டியூஷன் போனேன். ஒரு நாள் வகுப்பு முடிய மாஸ்டரிடம் தனிய மாட்டிட்னேன். சைக்கிளில் அவரை முந்திக்கொண்டு போகாமல் பின்னுக்கு மெதுவா வர, கிட்ட கூப்பிட்டு சொன்னார் "நீ இனி டியூஷனிற்கு வராத, நான் பள்ளிக்கூடத்தில சொல்லிதாறது உனக்கு காணும்". அது முற்றிலும் உண்மை, பள்ளிகூடத்திலும் டியூஷனிலும் ஒரே மாதிரி படிப்பிச்ச ஒரு சில பிரபல ஆசிரியர்களில் கதிர்காமத்தம்பி மாஸ்டரும் ஒருவர். இதை வீட்ட சொல்லாமல் கதிர்காமத்தம்பி மாஸ்டரின் டியூஷன் feesஐ என்னுடைய pocket money ஆக்கி கொண்டது வேற விஷயம். 


கதிர்காமத்தம்பி மாஸ்டர் தமிழை படிப்பித்த விதம் நம்மை அறியாமல் நம்மை தமிழை காதலிக்க வைத்தது. ஹன்டி நூலக்த்திலிருந்த மிகச்சில தமிழ் நூல்களையும் வீட்டில் அம்மப்பா வைத்திருந்த பொன்னியின் செல்வனையும் கடல்புறாவையும், யாழ் நூலகத்தில் சுஜாதாவையும் நாடித்தேடி மையல் கொள்ள வைத்தது, இன்றும் அந்த காதல் ஓயவில்லை.  

பரி. யோவானில் தமிழ்... இனித்தது
பரி. யோவானின் தமிழ்...நிலைத்தது

3 comments:

 1. சில தமிழ் வாத்திமார்கள் கொஞ்சம் விரசமாகவே படிப்பிச்சிருக்கினம். சிட்டு அண்ணாவின்அண்ணா கணேஷ்லிங்கமோ கணேஷமூர்த்தியோ என்னமோ. இடம்பெயர்ந்து போய் இருக்கேக்க வட்டக்கச்சியில வைச்சு படிப்பிச்சவர். அவரின்ட க்ளாசுக்கு போக விருப்பமில்லாமல் (அவரின்ட படிப்பிக்கும் விதம் தெரிஞ்ச ஆக்கள் வீட்ட போட்டுக்கொடுத்தவை haha) போயிருக்கிறன். ஒரு மாசம் தான் போனனான் என்டு நினைக்கிறன். மற்றவர்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கேக்க, நான் மட்டும் உர்ர்ர் என்டு முகத்தை வைச்சுக் கொண்டிருப்பன். அதைப் பாத்திட்டு, "நான் கெக்கெக்கே என்டு சிரிக்கேக்க என்னோட சேர்ந்து சிரிக்கிறதுகளை (அப்பாவிகள்) நம்பலாம், உர்ர்ர் என்டு இருக்கும் அம்சடக்கிகளை நம்ப முடியாது" என்று சொல்லி வெறுப்பேத்தி இருக்கிறார்.

  ஆனால் ஒரு மணித்தியால வகுப்பில் ஒரு ஐஞ்சு நிமிசமோ பத்து நிமிசமோ எப்படி இலக்கிய கேள்விகளுக்கு பதில் எழுதுவது என்று அவர் சொல்லித் தந்தது - பெரிதும் உதவியது. என்ட பள்ளிக்கூட- ஓலெவல் தமிழ் எக்சாம் பேப்பரைத் திருத்தின ஏலெவெல் ஆசிரியர் (ஊரில புகழ் பெற்ற எழுத்தாளர் அவர்), நான் எழுதினதை (யாரால் யாருக்கு பகுதி) அவரின் ஏலெவல் ஆக்களுக்கு வாசிச்சுக் காட்டி, இப்படித் தான் எழுத வேணும் என்று சொல்லி இருக்கிறார். ஏலெவல் அக்காமாரும் அண்ணாமாரும் யார் அந்தப் பிள்ளை என்டு தேடிவந்து பாத்திட்டு போச்சினம். கொஞ்சம் விரசத்தை குறைச்சு படிப்பிச்சிருந்தால் அவரிடம் நிறைய படிச்சிருக்கலாம் என்று இப்பவும் தோன்றும்.


  ReplyDelete
 2. பதிவுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு பகிடி. அப்ப பிரச்சாரம் வைக்க சிட்டு அண்ணா வந்தவர். ஏலெவல் தமிழ் அண்ணாக்கள் (அக்காக்கள் இருக்கவில்லை) இன்ட வகுப்புக்கு பிரச்சாரம் நடந்தது. பிறகு ஏதோ எழுதி தரச் சொல்லி சிட்டு அண்ணா கேக்க, இவையளும் எழுதி குடுத்திருக்கினம். வாசிச்ச சிட்டு அண்ணாவுக்கு கோவம் வந்திட்டு - பின்ன, தமிழ் படிக்கிற ஏலெவல் ஆக்கள் பிழை பிழையாக தமிழில் எழுதினால் யாருக்குத் தான் கோவம் வராது. உங்கட தமிழ் வாத்தியார் யார் என்டு கேக்க, இவையளும் பேரச்சொல்லி இருக்கினம். "உந்த வாத்தியிட்ட‌, படிப்பிறதென்டால் ஒழுங்கா படிப்பிக்கட்டாம் என்டு நான் சொன்னனான் என்டு சொல்லுங்கோ" என்று அவர் சொல்ல, ஏலெவல் அண்ணாக்களுக்கு சரியான கோவம். இப்படி எடுத்தெரிஞ்சு கதைக்கலாமோ என்று அவையும் கேக்க, சிட்டு அண்ணாவும், "வெளிய இந்த வெக்கக்கேட்ட சொல்லவா முடியும். ஒழுங்கா சொல்லிக்குடுக்காத வாத்தி என்ட அண்ணர் தான்" என்றார். விடுப்பு பாத்துக்கொண்டிருந்த எங்களுக்கு கொஞ்ச நேரம் சிரிக்கிறதா அழுகிறதா என்று தெரியவில்லை. சேரிட்ட ஏலெவல் அண்ணாக்கள் சொன்னவையோ இல்லையோ நாங்கள் கோரசாக சொன்னாங்கள். என்ட மானத்த கப்பலில ஏத்திட்டியலேடா என்று அன்டைக்கு முழுக்க அவர் புலம்பினதை இன்டைக்கு நினைச்சாலும் சிரிப்பாக இருக்கு.

  ReplyDelete
 3. எங்களுடைய கல்லூரியின் சிறப்புமிக்க ஆசிரியர்களில் திரு கதிர்காமத்தம்பி ஆசிரியருக்கு என்றும் இடம் இருக்கிறது ..விஞ்சானம் கற்பித்த திரு பிரபாகரன் ஆசிரியர் , கணிதம் போதித்த ஜோசப் ஆசிரியர் என சிலரும் நினைவு கொள்ளத்தக்கவர்கள்
  அதே நேரம் மாணவர்களிடேயே பலவேறு காரணிகள் சார்ந்து வேறுபாடு காட்டுவது , மாணவர் முதல்வர் சபை உட்பட பல விடயங்களில் வெளிப்படைத்தன்மை அற்ற நிலைமை , விளையாடுதுறைகளில் வழங்கப்படும் அநீதியான முன்னுரிமை பற்றி எல்லாம் பழைய மாணவர்கள் பேச முன் வர வேண்டும் .தகுதி குறைந்த ஆசிரியர் நியமனங்கள் கூட எங்கள் கல்லூரியின் கல்வி தரம் வீழ்ச்சியடைந்து போவதற்கு மிக பெரிய காரணம் ..இவை பற்றி எல்லாம் நாங்கள் துணித்து பேசுவது தான் கல்லூரியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர உதவும்

  ReplyDelete