Friday, 14 August 2015

தோற்பது யாராகிலும்....தேர்தல் திருவிழா இன்னும் சில நாட்களில் ஓய்ந்து திங்கட்கிழமை மக்கள் வாக்களிப்பார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதென்பார்கள், நம்மை பொறுத்தவரை வரும் புதன் கிழமை வட கிழக்கிலிருந்து 20-22 பழைய recycled பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக கிடைப்பார்கள். தேர்தல் பரப்புரையின் வீச்சும் தாக்கமும் தாயகத்தை விட புலத்திலும் முகபுத்தகத்திலும் பலமாக இருந்தது. கூட்டத்திற்கு வந்த மக்களை விட முகப்புத்தத்தில் வந்த கூட்டத்தின் படத்தை லைக் பண்ணியவர்கள் அதிகமாக தெரிந்தார்கள். 

இரு தமிழ் கட்சிகளின் வெற்று தேர்தல் விஞ்ஞாபனங்களை யாரும் சீரியசாக எடுத்ததாக தெரியவில்லை, தமிழ் மக்கள் உட்பட. கடந்த காலங்களில் தமிழர் பிரச்சினையை முதன்மையாக வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட தென்னிலங்கை கட்சிகள் இம்முறை போகுற போக்கில் தமிழர் பிரச்சினை பற்றி மேலோட்டமாக தொட்டு விட்டு போனது நாம் இழந்த பேரம் பேசும் சக்தியின் வெளிப்பாடு. 2005 சனாதிபதி தேர்தலில் சமஷ்டியை ஏற்றுக்கொண்டு ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வு என்று தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட ரணில், இன்று ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார். மகிந்தவை பற்றி பேசவோ வேண்டாம், 13யே தர மறுப்பவர். தமிழர் தரப்பின் பிரசாரம் பொது எதிரியான பெளத்த சிங்கள பேரினவாத்தை மையம் கொள்ளாமல் தனி நபர் தாக்குதல்களில் சுருங்கியது, இரு தமிழ் கட்சிகளிலும் இருக்கும் தலைமைத்துவ வறுமையையும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றலின்மையையும் வெளிப்படுத்தியது. 


மக்களிற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பிலிருக்கும் வடமாகாண முதல்வர் இருவாரங்களிற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை நடுநிலைமை சார்ந்து மக்களிற்கு நல்ல வழிகாட்டியாக அமைந்தது.  அதில் அவர் "நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்" என்றார்.  இந்த அறிக்கை தேர்தலால் களத்திலும் புலத்திலும் பிளவடைந்த தமிழர் தரப்பை தேர்தலின் பின்னர் ஒன்றுபடுத்தவல்ல ஒரு வகிபாகம் அல்லது elder statesmanshipஐ அவருக்கு அளித்திருந்தது. தேர்தெடுக்கப்படும் சைக்கிள்காரரையும் வீட்டுகாரர்களையும் தமிழரரின் நலன் சார்ந்து ஒன்றிணைக்க (ஒற்றுமையல்ல) வல்ல ஒரு வகிபாகத்தை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இரு நாட்களிற்கு முன்னர் அவர் வெளியிட்ட பக்கசார்பு அறிக்கை தமிழ் மக்களின் அறிவை மட்டமாக்கியது மட்டுமன்றி எதிர்காலத்தில் அவர் வகித்திருக்க வேண்டிய,  மகாபாரதத்தில் பீஷ்மர் வகிக்க தவறிய பாத்திரத்தை இல்லாதொழித்தது தமிழ் சனத்தின் சாபக்கேடு. 


முதல்வரின்  அறிக்கை தேர்தல் முடிவில் தாக்கம் ஏற்படுத்தும் என்று கருதவில்லை. தேர்தலில் கூட்டமைப்பு தோற்றால் அதற்கு முதல்வரை சாட முடியாது, அது அவர்களின் செயற்பாடுகளிற்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. அதேவேளை இயக்க மற்றும் கட்சி ஒழுக்கம் கட்டுபாடு என்ற விடயத்தையும் கைவிடமுடியாது. வள்ளுவரை வரிக்கு வரி மேற்கோள் காட்டும் ஜயாவிற்கு அதன் தார்ப்பரியம் நன்றாக புரிந்திருக்கும் என்பது நம்பிக்கை.  மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை இனவழிப்பு மசோதாவை எதிர்த்து, தென்னிலங்கையோடு கைகோர்த்து புலம்வர மறுத்த முதலமைச்சர் ஜனவரி 8ற்கு பின்னர் நன்முறையில் அடைந்த மாற்றத்தை தமிழ் மக்கள் வரவேற்றார்கள். ஆனால் கடந்த இருவாரங்களில் அவரில் ஏற்பட்ட இந்த வெளிப்படுதன்மையற்ற மாற்றம் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததா என்ற வினாவிற்கான பதிலை காலத்தின் கையில் விட்டு விடுவோம்.


ஒரு ஜனநாயக பொறிமுறையில் ஆளும் கட்சி மீது விரக்தி வருவதும் எதிர்கட்சி ஆட்சிக்கு வருவதும் நியதி. போர்குற்ற விசாரணை உள்ளக பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான கூட்டமைப்பினரின் கடந்த கால செயல்பாடுகளும் அவர்களது தற்கால எதிர்கால நிலைப்பாடுகளும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. கூட்டமைப்பின் செயல்பாட்டிலும் குறிப்பாக மக்கள் நலன்சார் செயல்பாடுகளை முன்னெடுக்காமல் வெறும் மறுப்பறிக்கைகளும் வெற்று கோஷங்களும் வெளியிட்டு கொண்டிருந்த பாஉக்கள் இந்த தேர்தலில் மக்களின் கோபாக்கினைக்கு ஆளாவார்கள் என்பது நம்பிக்கை. 


அதேவேளை கூட்டமைப்பின் மீதான இந்த விரக்தியை மட்டும் மூலதனமாக்கி குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை மட்டும் தோற்கடிக்கவென கங்கணம் கட்டிக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக சத்தியம் செய்துகொண்டு (கபில்தேவ் டீவியில் அழுத மாதிரி) புலம் பெயர் கடும்போக்காளர்களின் பக்க பலத்துடன், எல்லா தேர்தல்களையும் பகீஷ்கரிக்க சொல்லிவிட்டு இந்த தேர்தலில் மட்டும் போட்டியிடும் காங்கிரஸ்காரரை மக்கள் எவ்வாறு கணிக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இவற்றுக்கப்பால் எமது இருப்பை தக்க வைக்க வேண்டிய உடனடி தேவையையும் புறக்கணிக்க முடியாது. தாயகத்திலிருக்கும் மக்கள் நாட்டை விட்டு கப்பலேறும் நிலைமை மாற்றமடைய வேண்டுமென்றால் எமது தாயகத்தில் பொருளாதார அபிவிருத்தி செயல்பாடுகள் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான செயல்பாடுகளே தொழில்வாய்ப்புகளையும் அதனூடாக தன்னம்பிக்கையுள்ள இளையோர்களையும் கட்டுகோப்பான சமுதாயத்திற்கும் வழிசமைக்கும். இந்த Economy stupid செயல்பாடுகளில் தேர்ந்தெடுக்கப்படும் பாஉக்கள் தாயத்திலும் புலத்திலும் இயங்கும் தொழில்முறை வல்லுனர்களோடும் வட கிழக்கு மாகாண சபைகளோடும் இணைந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.


தோற்பது யாராகிலும்  
வெல்வது 
தமிழாக, 
தமிழனாக, 
தமிழ் தேசியமாக, 
இருக்க வேண்டும்... இருக்கும். 

No comments:

Post a Comment