Thursday, 6 August 2015

பாகுபலி... பலியான தமிழ்Knoxல் பார்த்த கிரிஷாந்தனும் Houstonல் பார்த்த நிமலனும் கொழும்பில் பார்த்த ரமோவும் ஆகோ ஓகோ, திரையில் பார்க்க வேண்டிய படம், தமன்னா கிமன்னா, அப்பிடி இப்படி என்று சொன்னதை நம்பி, விசுவாசித்து, வாழ்க்கையில் முதல் தடவையாக திங்கட்கிழமை இரவு 9.15க்கு படம் பார்க்க போனேன்.. பாகுபலி.
(இப்பவே பிலிம் காட்ட தொடங்கிட்டான்)


"திலீபன் வீரமரணமடைந்து விட்டான்" என்ற வசனம் நித்திரையை கலைத்து 26 செப்டெம்பர் 1987 நினைவில் வர, graphics நீர்மலையின் பிரமாண்டமும் அசர வைக்கும் ஒளிப்பதிவும் ஆஜானுபாகுவான பிரபாஸும், பிரபாஸ் தோளில் தூக்கின கருங்கல் லிங்கமும், சனமில்லாத தியேட்டரும் திரைக்குள் என்னை உள்வாங்கின.
(அண்ணே, மாட்டை மரத்தில கட்டல்லயோ)


சோவென கொட்டும் நீர் வீழ்ச்சியும், அடங்கா ஆறும், ஆற்றில் மிதந்து காப்பாற்றப்படும் குழந்தையும் மகாபாரத கர்ணனிலிருந்து பழைய ஏற்பாட்டில் வரும் மோசே தொடங்கி கோச்சடையானில் ராணா தாண்டி பாகுபலியிலும் தொடர்கிறது. சரித்திர கதைகளின் திருஷ்டி பூசணிக்காய் தான் நீர்வீழ்ச்சியோ ?  கருங்கல் லிங்கத்தை பிரபாஸ் தோளில் சுமந்த காட்சி, தமிழினத்தின் மானத்தை தன் தோளில் சுமந்த தானை தலைவனை நினைவலையில் நிறுத்தி சென்றது. Avalancheக்குள் சிக்கி snowboatல் பிரபாஸும் தமன்னாவும் சறுக்கி சறுக்கி தப்பும் காட்சியில் எனக்கும் ஏனோ குளிர்ந்தது. 
(அவயளிற்கு வேர்த்திருக்கும்)


ஆட்டிலெளிகள், யுத்ததாங்கிகள், பொஸ்பரஸ் எரிகுண்டுகள்,  மனித கேடயங்கள் சகிதம் அரங்கேறும் யுத்தம், பிரமாண்டத்தின் பிரதிபலிப்பு, தொழில்நுட்ப வன்மையின் அழகோவியம். ஆனால் நீண்ட நெடிய யுத்த காட்சிகள் சில நிமிடங்களிற்கு பின்னால் அலுப்பு தட்டுகிறது. நாம் யுத்தத்திற்குள் வாழ்ந்ததால் சகிக்க முடியவில்லையோ அல்லது யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதால் வெறுத்தேனோ தெரியவில்லை.
(சென்டிமன்ட்)


காட்சியமைப்புகள், இயக்கம், ஒளிப்பதிவு இவற்றை விட படத்தின் பலங்கள் ஆஜானுபாகுவான நாயகர்கள், சத்தியராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணா. இந்த படத்தில் நடித்த "திரிஷாவின்" ராணாவும் "அனுஷ்காவின்"பிரபாஸும் அற்புத தெரிவுகள். சத்தியராஜ், அசத்தலாக அட்டகாசமில்லாமல் படத்தில் ஒன்றி போவது அவரிற்கேயுரிய தனித்துவம். "வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் குறையல்ல" என்று படையப்பாவில் தலைவரை பார்த்து சொன்ன வசனத்தின் வடிவமாய் ரம்யா கிருஷ்ணன், கம்பீரம்.. குரலிலும் நடையிலும் நடிப்பிலும்.
(குஷ்பு நடிக்க வேண்டிய படமடா)


படத்தின் பாரிய பலவீனங்கள் தரமற்ற இசை, சொதப்பல் தமன்னா, வீரியமில்லாத வசனங்கள்.  இந்த மெகா பட்ஜட் படத்திற்கு ஒரு பட்ஜட் இசையமைப்பாளரா ? என்ன கொடுமை ராஜமெளலி ? தமன்னாக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வராது, இந்த மெகா படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தை அவரிற்கு வழங்கியது சொதப்பலோ சொதப்பல். பிரபாஸுடனான தமன்னாவின் காதல் காட்சியின் கிளு கிளுப்பு பெரிதும் பேசப்பட்டாலும், என்னை பொறுத்தவரை அது "கொசுக்கடி ரகம்". தமன்னாவிற்கும் கிளு கிளுப்பிற்கும் வெகுதூரம். அனுஷ்கா என்ற அழகிய அரேபிய குதிரையை ஊத்தை உடுப்பில காட்டிட்டு தமன்னாவின் xxxxx காட்ட இயக்குனரிற்கு எப்படி மனம் வந்ததோ ? (நயன்தாராவை போட்டிருக்கலாம்)


கார்க்கியின் வசனங்களிற்கு வலிமை பத்தாது, செழுமை காணாது. டப்பிங் படமாக இருந்தாலும் அழகு தமிழை கையாள இந்த படம் ஒரு அட்டகாசமான மேடை. செம்மொழியாம் எம்மொழியில் புகுந்து விளையாட வேண்டிய அருமையான களம்.  இந்த அற்புத சந்தர்ப்பத்தை தவறவிட்டு தான் இன்னும் முதிர்ச்சியடையவில்லை, அனுபவம் புதுமை என்பதை நிரூபித்திருக்கிறார் கார்க்கி.
(கோச்சடையான் வசனங்கள் போல வராதண்ணே)


பாகுபலி படத்தில் கார்க்கி எழுதிய வசனங்களின் தரத்தை பார்த்த போது தமிழர் அரசியலும் இப்படி தான் நாசமாகி போகுமா என்ற பயம் வந்ததது. தமிழ் மக்கள் காலங்காலமாக அரசியல் பட்டறிவுடன் வாக்களித்திருக்கிறார்கள், அரசியல் களத்தை நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் முன் வாக்கு கேட்டு வீட்டு சின்ன தமிழரசு கட்சிகாரர்களும் சைக்கிள் சின்ன காங்கிரஸ் காரரும் ஆளுமையும் அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் உடையவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலைமை அவ்வாறில்லை. அதே சின்னங்களில் பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு அதே இரு கட்சிகளும் களமாடுகின்றன. இரு கட்சிகளிலும் நிறைந்திருக்கும் பலவீனங்களும் குறைபாடுகளும் தெட்ட தெளிவாக தெரிகின்றன. 
(அப்பு, அரசியலையும் சினிமாவையும் கலக்க கூடாது)


தமிழாற்றலில் முதிர்ச்சியற்ற வசனகர்த்தாவிடம் சிக்கி பாகுபலி படம் பலியானது போல் ஆகாமல் அரசியல் பட்டறிவும் ஆளுமையும் யதார்த்த சிந்தனையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய செயல்திட்டத்தை நடைமுறை படுத்தவல்ல வல்லமையுள்ள தலைவர்களை எம்மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோமாக. 


பாகுபலி.. பலியான தமிழ் 

No comments:

Post a Comment