Friday, 28 August 2015

பரி.யோவானில்...தமிழ்St.John'sல் படித்தவனென்றால் நுனி நாக்கில் English பேசிக்கொண்டு Johnians always Play the game என்று பிதற்றிக்கொண்டு தெரியும் ஒரு கூட்டம் என்ற மாயை உண்டு. Assembly முதற்கொண்டு அநேகமான பாடசாலை அலுவல்கள் ஆங்கிலத்தில் நடைபெறுவதால், English நம்மோடு தானாக வந்து ஒட்டிக்கொள்ளும், வகுப்பில் 75 சதவீத்த்திற்கும் மேலானவர்களிற்கு Englishற்கு O/Lல் D வரும்.


இந்த மாயையை தகர்த்து கல்லூரியில் எமக்கு தமிழ் மொழியை, தமிழ் இலக்கியங்களை ரசித்து ருசித்து கற்பித்தவர்கள் இருவர், பரியோவானின் தலை சிறந்த தமிழ் ஆசான்கள், ஒருவர் சந்திரமெளலீசன் மாஸ்டர் மற்றவர் கதிர்காமத்தம்பி மாஸ்டர். 


Middle schoolல் முதலாவது வருஷம், ராஜசிங்கம் blockல் classroom, மெளலீசன் மாஸ்டர் தமிழ். பம்பலா கதைத்து பெடியளோடு நல்லா முசுப்பாத்தி விட்டு அழகா தமிழ் சொல்லித்தந்தத்தை மறக்கேலாது. தமிழின் இனிமையை எங்களில் விதைத்தவர் சந்திரமெளலீசன் மாஸ்டர். அவர் தமிழ் மொழியை ஆர்வத்தோடு கற்பிக்கும் விதத்தில் ஒரு குழந்தையின் குதூகலம் குடிகொண்டிருக்கும்.


1982ல் நாங்கள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, சிவகுரு மிஸ் திருமணம் முடித்து பரி யோவானை விட்டு விலக, எங்களுக்கு வகுப்பாசிரியராக பரி யோவானுக்குள் காலடி எடுத்து வைத்தார் சந்திரமெளலீசன் மாஸ்டர். தனது முதலாவது ஆண்டிலேயே "விஸ்வாமித்ரன்" நாடகத்தை எங்கள் வகுப்பு மாணவர்களை வைத்து அரங்கேற்றிய துணிச்சல்காரன். அதிபர் ஆனந்தராஜாவினதும் கல்லூரி சமூகத்தினதும் பெரும் பாராட்டை பெற்ற அந்த தமிழ் நாடகத்தில், நண்பர்கள் யாதவன், இறைவன் மற்றும் விஜயனிற்கு பிரதான பாத்திரங்கள் கிடைத்தன. அடியேனுக்கு கிடைத்த பாத்திரம், மரம். நாடகத்தில் வரும் காட்டு சீனில் ஒரு மரக்கொப்பை பிடித்து கொண்டு மரமாக நடிப்பது, இல்லை நிற்பது. அடுத்த இரண்டு வருடங்கள் ஒரு மொக்கை வாத்தி தமிழ் எடுத்தார். மகா கொடுமை, கடமைக்காக தமிழ் சொல்லி கொடுத்து, பெடியளையும் தமிழையும் கஷ்டப்படுத்தினார். அந்த இரண்டு வருடங்கள் தமிழின் இலக்கண விதிகள் முறையாக கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும், நாங்களும் அதை முழுமையாக உள்வாங்கியிருக்க வேண்டும், இரண்டுமே நடக்கவில்லை, ஒரு நாடு இரு தேசம் கொள்கை மாதிரி ஈடேறாமலே போயிட்டுது. 


Upper Schoolல் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக form III (பரி யோவான் பாஷை..மற்றவர்களிற்கு ஆண்டு 9) தவணை பரீட்சையின் அடிப்படையில் மண்டைக்காய்கள் A பிரிவிலும் அரைகுறைகள் B பிரிவிலும் பம்பல்காரன்கள் C பிரிவிலும் குழப்படிகாரன்கள் D பிரிவிலும் அடைக்கப்பட்டார்கள். B பிரிவில் இருந்த எங்களிற்கு வாய்த்த வாத்திமார் எல்லாரும் கல்லூரியின் மிகச்சிறந்த ஆசிரியர்கள், அரை குறைகளை நிமிர்த்தி எடுக்க அனுப்பப்பட்ட சிறப்பு படைபிரிவு. இந்த படைப்பிரிவின் சிறப்பு தளபதி, அதாவது வகுப்பாசிரியர், கதிர்காமத்தம்பி மாஸ்டர். இவரோடு பல களங்கள் கண்ட தளபதிகள் அன்ரனிப்பிள்ளை மாஸ்டர், பிரபாகரன் மாஸ்டர், ஒகஸ்ரின் மாஸ்டர், மகாலிங்கம் மாஸ்டர் ஆகியோரும் களமிறக்கப்பட்டார்கள். 


கதிர்காமத்தம்பி மாஸ்டரின் பெயரிலுள்ள "திர்" ஐ "ம்பி" யால் replace பண்ணி "காம"வை தூக்கி விட்டுத் தான் பெடியள் குறிப்பிடுவார்கள். மெதுவாக ஆனால் அழுத்தமாக நடந்து வரும் மாஸ்டரிடன் நடையில் கம்பீரம் வெளிப்படும். பரி.யோவானின் பழைய மாணவனாக இல்லாவிட்டாலும் பரி யோவானின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்தவர். கண்டிப்பிற்கும் கன்னம் மின்னும் அறைக்கும் பிரம்பால் வெளுவைக்கும் கதிர்காமத்தம்பி மாஸ்டர் பிரசித்தமானவர்.


தமிழை எங்களுக்கு அவர் ஊட்டிய விதம் அருமை. நளவெண்பாவும், கம்பராமாயணமும் உமர் புலவரின் சீறாப் புராணமும் அவர் படிப்பித்த விதம் இந்த காவியங்களை எம் கண்முன் கொண்டுவரும். அதுவும் கிளுகிளுப்பான சம்பவங்கள் வாற இடத்தில் ஒருக்கா அறுத்து நிறுத்தி வகுப்பை பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார், அப்ப தான் எங்களிற்கு அதன் "அர்த்தம்" விளங்கும். சிரிப்பலை விண் கூவும்..சுண்டுக்குளி மகளீர் கல்லூரி வரை கேட்கும். 


நளவெண்பாவில் சுயம்வர காண்டத்தை காதல் ரசம் சொட்ட சொட்ட  கதிர்காமத்தம்பி மாஸ்டர் படிப்பித்த விதம் பதின்மத்தின் பருவக் கோளாறுகளில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த எங்களை ஒரு வழி பண்ணிட்டுது.  


"நாற்குணமும் நாற்படையா..", மற்றும் 
"மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற".. என்ற செய்யுள் வரிகளிற்கு மாஸ்டர் தந்த விளக்கத்தை கேட்டு காதலிக்க சபதமெடுத்தவர்களில் அடியேனும் அடக்கம்.


 காதலியை தெரிவு செய்யும் checklistல் "நுடங்கும் இடையையும்".."புலம்பும் நூபுரங்களையும்"..."ஏவாளி தீட்டும் இடத்தையும்" சேர்த்து கொண்டோம். 


துரையப்பா பாடம் முடிய மணியடிக்க சுணங்கினால் "கிளிக்கீற்றா" என்று அநாயாசமாக கேட்பதாகட்டும், யாராவது கேள்வி கேட்டால் "ஆர்ரேக்க" என்று விளிப்பதாகட்டும், கதிர்காமத்தம்பி மாஸ்டரின் வகுப்புகள் அலுப்பு தட்டாது. சந்தர்ப்பம் கூறி விளக்குக என்று ஒரு பகுதி பரீட்சையில் வரும். ஓரு வசனத்தை தருவார்கள், அது யாரால் எவருக்கு எப்போது கூறப்பட்டது என்பதை விளக்க வேண்டும். கதிர்காமத்தம்பி மாஸ்டரிடம் படித்த பெடியள் இந்த பகுதியில் ஏறி நின்று குடுப்பாங்கள். 


யாழ்.ஹோலில் கதிர்காமத்தம்பி மாஸ்டரிடம் கொஞ்சகாலம் டியூஷன் போனேன். ஒரு நாள் வகுப்பு முடிய மாஸ்டரிடம் தனிய மாட்டிட்னேன். சைக்கிளில் அவரை முந்திக்கொண்டு போகாமல் பின்னுக்கு மெதுவா வர, கிட்ட கூப்பிட்டு சொன்னார் "நீ இனி டியூஷனிற்கு வராத, நான் பள்ளிக்கூடத்தில சொல்லிதாறது உனக்கு காணும்". அது முற்றிலும் உண்மை, பள்ளிகூடத்திலும் டியூஷனிலும் ஒரே மாதிரி படிப்பிச்ச ஒரு சில பிரபல ஆசிரியர்களில் கதிர்காமத்தம்பி மாஸ்டரும் ஒருவர். இதை வீட்ட சொல்லாமல் கதிர்காமத்தம்பி மாஸ்டரின் டியூஷன் feesஐ என்னுடைய pocket money ஆக்கி கொண்டது வேற விஷயம். 


கதிர்காமத்தம்பி மாஸ்டர் தமிழை படிப்பித்த விதம் நம்மை அறியாமல் நம்மை தமிழை காதலிக்க வைத்தது. ஹன்டி நூலக்த்திலிருந்த மிகச்சில தமிழ் நூல்களையும் வீட்டில் அம்மப்பா வைத்திருந்த பொன்னியின் செல்வனையும் கடல்புறாவையும், யாழ் நூலகத்தில் சுஜாதாவையும் நாடித்தேடி மையல் கொள்ள வைத்தது, இன்றும் அந்த காதல் ஓயவில்லை.  

பரி. யோவானில் தமிழ்... இனித்தது
பரி. யோவானின் தமிழ்...நிலைத்தது

Friday, 21 August 2015

கனவான கனவு1986, மார்ச் மாதம்
சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானம், சென். ஜோன்ஸ் - சென். பற்றிக்ஸ் கிரிக்கட் போட்டி. ஆட்டத்தின் கடைசி ஓவர், சென். ஜோன்ஸ் வெல்ல 7 ரன்கள் தேவை, எடுக்காட்டி ட்ரோ. Robert Williams Hall முனையில் நான் batting, non striker ஆக ஏஞ்சல் நிற்கிறான். கடைசி ஓவர் போட பற்றிக்ஸ் சதா தயாராகிறான். இதுக்கிடையில் தண்ணி கொண்டர வந்த reserve players ஷியாமலையும் மொழியனையும் leg umpire திருப்பி அனுப்பிட்டார். 


Mid pitchல் ஏஞ்சல் சொன்னான் "மச்சான் நீ single எடு, மிச்சத்தை நான் பார்க்கிறன்". 


முதலாவது பந்து சதா outside the off stump போட நான் front footல அழகா straight drive அடிக்க, boundaryக்கு போக வேண்டிய பந்தை mid offல் நின்ற எரிக் நிமலன் விழுந்து மறித்து field பண்ணினான், no run. 


ஏஞ்சலை பார்ப்பதை தவிர்த்து, இரண்டாவது பந்திற்கு இன்னொருக்கா guard எடுத்தன். சதா bowl பண்ண அவன்ட வாயும் ஆ ஊ என்று அசையும், மின்னல் வேக bowler, என்னுடைய நல்ல நண்பன். அடுத்த பந்தை கொஞ்சம் full lengthல் போட காலை முன்னுக்கு வைச்சு cover drive அடிச்சன், 2 runs, boundaryக்கு கிட்ட போன பந்தை இன்பசோதி துரத்தி பிடித்தான். 


மூன்றாவது பந்தை சதா yoke பண்ண, கடைசி நேரத்தில் batஐ கீழ வச்சன், பந்து fine legற்கு போக 1 run, கடவுள் காப்பாத்தினார்.


இப்ப 4 run 3 balls, ஏஞ்சல் striker. சதாவின் நாலாவது பந்து bouncer, ஏஞ்சலால ஒன்றும் செய்ய ஏலாமல் போய்ட்டுது, leave பண்ணிட்டான், chin music கேட்டிருக்கும்.

ஐந்தாவது பந்து ஏஞ்சல் stylishஆக cover drive பண்ண இன்பசோதி dive பண்ணி மறிச்சான், no run.  Tensionஓ tension. 


கடைசி பந்து 4 run தேவை, நான் mid pitch conferenceற்கு கதைக்க வர வெளிக்கிட ஏஞ்சல் கையை காட்டி வேண்டாமென்டிட்டான். பற்றிக்ஸ்காரன்கள் fieldஐ spread பண்ணிட்டாங்க, எல்லாரும் boundaryயில் நிற்கிறாங்கள். கடைசி பந்து சதா இன்னொரு bouncer போட ஏஞ்சல் hook பண்ணினான், பந்து Peto hall பக்கம் போகுது, போகுது, போய்...போய்....


ஊய்ய்ய்....என்ற சத்தத்தோட கோட்டை பக்கத்திலிருந்து வந்த ஷெல் பக்கத்து வளவுக்குள் விழ, பதறி அடிச்சு எழும்பி பங்கருக்க ஓட..... கனவு கலைஞ்சிட்டுது.. அடச்சீ....


ஷெல்லடிக்கேக்க வந்த நடுச்சாம கனவு பலிக்கோணும் கர்த்தரே...


1986, ஏப்ரல் மாதம்..
Old Park பக்கம் இருக்கிற nets அடியில பரி யோவான் கல்லூரியின் 15 பேர் கொண்ட under 15 கிரிக்கட் அணியில் இடம் பிடக்க வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு 100 பொடியள் நிற்கிறாங்கள், நானும்.


மதிலிற்கு அந்த பக்கம் ரோட், ரோட்டிற்கு மற்ற பக்கம் இயக்கத்தின் பயிற்சி முகாம்.


 "Batsman எல்லாம் இங்கால வா" என்று coach டொங்கர் கத்த நானும் 89 பொடியளும் அங்கால போறம். Bowlers sideல் என்ற best friends யசீந்திராவும் யோகதாஸும் நிற்கிறான்கள்.


"ஆளுக்கொரு ஓவர் batting" என்று coach சொல்ல 25ஆவதா நான் pad பண்ணினேன், கூட்டெண் 7, No7 என்னுடைய lucky number. யசி அல்லது யோகு பந்து போடுவான்கள், எனக்காக பாத்து கீத்து போடுவான்கள் என்ற கணிப்பு pitchற்கு போக பிழைச்சிட்டுது. உள்ளதுக்க fast bowler ஆன பெற்றி என்ற பிரசாந்தன் பந்தோட நிற்கிறான். 


முதலாவது பந்து போட அவன் ஓடி வர நான் கண்ணை மூடி கர்த்தரை pray பண்ணி முடிக்க முதல் பந்து keeperட போய்ட்டு, leave பண்ணின மாதிரி காட்டி கொண்டேன். அடுத்த பந்துகள் எல்லாத்துக்கும் அடிச்சு விளாயாட, edge ஆகி பந்து அங்க இங்க பறந்திச்சு.  Cover drive, straight drive, முழங்காலில் இருந்து விளாசல் என்று தெரிந்த shotகளும் premeditated ஆக விளாயாடினேன், ஆனால் உண்மையில் எல்லாம் edges தான். Batல் பந்து பட்டதே சாதனை. I was impressed with my self. 


டொங்கரின் verdict
"எங்களிற்கு நின்டு விளையாடிற ஆக்கள் தான் தேவை".


கிளிநொச்சி விழுந்தா பரவாயில்லை புதுக்குடியிருப்புக்க வச்சு விளையாட்டை காட்டுவம் என்ற மாதிரி இந்த வருஷம் போனா பரவாயில்லை அடித்த வருஷம் இருக்கு என்ற நம்பிக்கையோடு நான் களம் விட்டகன்றேன். கனவு இன்னும் காலாவதியாகவில்லை.


1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்..
ஆமிக்காரன் வடமராட்சிக்கால வெளிக்கிட ஆயத்தமாக நான் சென் ஜோன்ஸ் பிச்சில களமாட ரெடியாகிறன். Tony மாஸ்டர் coach, நான் Tony மாஸ்டரின் favourite student. எப்படியும் புஸ் பிடிச்சாவது உள்ளுக்க பூந்திடலாம் என்ற நம்பிக்கை. 


டோனி மாஸ்டர் எதையும் வித்தியாசமா செய்வார், இந்த முறை நடு pitchல் அவர் throws எறிய நாங்க bat பண்ணோணும், அதே ஆறு பந்துகள். போன முறை டொங்கரின் வார்த்தைகளை மறக்கேல்ல. ஆறு பந்தையும் நொட்டி பசைஞ்சு விளாயாடினேன், classic text book defence. 1982 big matchஐ நொட்டி பசைஞ்சு draw ஆக்கின விக்னபாலனும் விஜயராகவனும் வழிகாட்டிகளானார்கள். 
I was proud of my self. 


Tony மாஸ்டரின்ட verdict
 "எங்களிற்கு அடிச்சு விளாயாடுற ஆக்கள் தான் தேவை"..


நான் அழுதேன், மனதிற்குள் கதறி கதறி அழுதேன், வாழ்க்கை வெறுத்தது. கனவு தகர்ந்தது.


2002, நவம்பர் மாதம் 
சென் ஜோன்ஸ் கல்லூரி Male staff roomலிருக்கிற பெரிய மேசையில் Tony மாஸ்டர், பிரபாகரன் மாஸ்டரோட நான்.  கல்லூரி மண்ணில் முதல்முறையாக பழைய மாணவனாக காலடி எடுத்து வைக்கவே சிலிர்த்தது, Staff roomல் அடி வாங்கின வாத்திமாரோட கதிரையில் இருக்க புல்லரிச்சுது. 


"Sir, ஒன்று கேட்டா அடிக்க மாட்டியலே" என்று Tony மாஸ்டரிடம் பம்மினேன். 


"ஜசே, நீர் இப்ப ஒரு old boy, மறந்திட்டீரோ, அவர் அடிக்கமாட்டார், நீர் கேளும், நான் gurantee" என்று பிராபாகரன் மாஸ்டர் உறுமினார்.


"ஒன்றுமில்ல சேர், நான்...நீங்க என்னை under15 cricket teamல போடாம விட்டது சரியான பிழை.. இப்ப Australiaவில நான் எங்கட OBA teamற்கு open ...."நான் சொல்லி முடிக்கல்ல Tony மாஸ்டர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டார், கண்ணில கண்ணீர் வர சிரிச்சார், கை கொட்டி கொட்டி சிரித்தார், வாய் விட்டு சத்தமாய் சிரித்தார். எங்களை எத்தனையோ தரம் சிரிக்க வைத்த Tony மாஸ்டரை அப்படி சிரிக்க வைத்தது மகிழ்ச்சியும் சந்தோஷமும் அளித்தாலும், அவர் என்ற கேள்விக்கு பதிலளிக்காது விட்ட உறுத்தல் இன்னும் மறையல்ல. 


போன வருடம் எம்மை விட்டு பிரிந்த Tony மாஸ்டரை கடைசியா 2014 சனவரியில் யாழ்ப்பாணம் போன போது சந்திக்காமல் வந்ததையிட்டு இந்த பதிவை எழுதும்போது நினைத்து வருந்துகிறேன்.


2015 ஆகஸ்ட் 
Melbourne Super Kings cricket club chief selector நரேன் call பண்ணினான்.

"மச்சான், எங்கட over 40's teamற்கு நீ தான் captan"

நான் "sorry மச்சான், not interested" என்றிட்டன்.

Friday, 14 August 2015

தோற்பது யாராகிலும்....தேர்தல் திருவிழா இன்னும் சில நாட்களில் ஓய்ந்து திங்கட்கிழமை மக்கள் வாக்களிப்பார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதென்பார்கள், நம்மை பொறுத்தவரை வரும் புதன் கிழமை வட கிழக்கிலிருந்து 20-22 பழைய recycled பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக கிடைப்பார்கள். தேர்தல் பரப்புரையின் வீச்சும் தாக்கமும் தாயகத்தை விட புலத்திலும் முகபுத்தகத்திலும் பலமாக இருந்தது. கூட்டத்திற்கு வந்த மக்களை விட முகப்புத்தத்தில் வந்த கூட்டத்தின் படத்தை லைக் பண்ணியவர்கள் அதிகமாக தெரிந்தார்கள். 

இரு தமிழ் கட்சிகளின் வெற்று தேர்தல் விஞ்ஞாபனங்களை யாரும் சீரியசாக எடுத்ததாக தெரியவில்லை, தமிழ் மக்கள் உட்பட. கடந்த காலங்களில் தமிழர் பிரச்சினையை முதன்மையாக வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட தென்னிலங்கை கட்சிகள் இம்முறை போகுற போக்கில் தமிழர் பிரச்சினை பற்றி மேலோட்டமாக தொட்டு விட்டு போனது நாம் இழந்த பேரம் பேசும் சக்தியின் வெளிப்பாடு. 2005 சனாதிபதி தேர்தலில் சமஷ்டியை ஏற்றுக்கொண்டு ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வு என்று தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட ரணில், இன்று ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார். மகிந்தவை பற்றி பேசவோ வேண்டாம், 13யே தர மறுப்பவர். தமிழர் தரப்பின் பிரசாரம் பொது எதிரியான பெளத்த சிங்கள பேரினவாத்தை மையம் கொள்ளாமல் தனி நபர் தாக்குதல்களில் சுருங்கியது, இரு தமிழ் கட்சிகளிலும் இருக்கும் தலைமைத்துவ வறுமையையும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றலின்மையையும் வெளிப்படுத்தியது. 


மக்களிற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பிலிருக்கும் வடமாகாண முதல்வர் இருவாரங்களிற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை நடுநிலைமை சார்ந்து மக்களிற்கு நல்ல வழிகாட்டியாக அமைந்தது.  அதில் அவர் "நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்" என்றார்.  இந்த அறிக்கை தேர்தலால் களத்திலும் புலத்திலும் பிளவடைந்த தமிழர் தரப்பை தேர்தலின் பின்னர் ஒன்றுபடுத்தவல்ல ஒரு வகிபாகம் அல்லது elder statesmanshipஐ அவருக்கு அளித்திருந்தது. தேர்தெடுக்கப்படும் சைக்கிள்காரரையும் வீட்டுகாரர்களையும் தமிழரரின் நலன் சார்ந்து ஒன்றிணைக்க (ஒற்றுமையல்ல) வல்ல ஒரு வகிபாகத்தை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இரு நாட்களிற்கு முன்னர் அவர் வெளியிட்ட பக்கசார்பு அறிக்கை தமிழ் மக்களின் அறிவை மட்டமாக்கியது மட்டுமன்றி எதிர்காலத்தில் அவர் வகித்திருக்க வேண்டிய,  மகாபாரதத்தில் பீஷ்மர் வகிக்க தவறிய பாத்திரத்தை இல்லாதொழித்தது தமிழ் சனத்தின் சாபக்கேடு. 


முதல்வரின்  அறிக்கை தேர்தல் முடிவில் தாக்கம் ஏற்படுத்தும் என்று கருதவில்லை. தேர்தலில் கூட்டமைப்பு தோற்றால் அதற்கு முதல்வரை சாட முடியாது, அது அவர்களின் செயற்பாடுகளிற்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. அதேவேளை இயக்க மற்றும் கட்சி ஒழுக்கம் கட்டுபாடு என்ற விடயத்தையும் கைவிடமுடியாது. வள்ளுவரை வரிக்கு வரி மேற்கோள் காட்டும் ஜயாவிற்கு அதன் தார்ப்பரியம் நன்றாக புரிந்திருக்கும் என்பது நம்பிக்கை.  மகிந்த ஆட்சியில் இருக்கும் வரை இனவழிப்பு மசோதாவை எதிர்த்து, தென்னிலங்கையோடு கைகோர்த்து புலம்வர மறுத்த முதலமைச்சர் ஜனவரி 8ற்கு பின்னர் நன்முறையில் அடைந்த மாற்றத்தை தமிழ் மக்கள் வரவேற்றார்கள். ஆனால் கடந்த இருவாரங்களில் அவரில் ஏற்பட்ட இந்த வெளிப்படுதன்மையற்ற மாற்றம் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததா என்ற வினாவிற்கான பதிலை காலத்தின் கையில் விட்டு விடுவோம்.


ஒரு ஜனநாயக பொறிமுறையில் ஆளும் கட்சி மீது விரக்தி வருவதும் எதிர்கட்சி ஆட்சிக்கு வருவதும் நியதி. போர்குற்ற விசாரணை உள்ளக பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான கூட்டமைப்பினரின் கடந்த கால செயல்பாடுகளும் அவர்களது தற்கால எதிர்கால நிலைப்பாடுகளும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. கூட்டமைப்பின் செயல்பாட்டிலும் குறிப்பாக மக்கள் நலன்சார் செயல்பாடுகளை முன்னெடுக்காமல் வெறும் மறுப்பறிக்கைகளும் வெற்று கோஷங்களும் வெளியிட்டு கொண்டிருந்த பாஉக்கள் இந்த தேர்தலில் மக்களின் கோபாக்கினைக்கு ஆளாவார்கள் என்பது நம்பிக்கை. 


அதேவேளை கூட்டமைப்பின் மீதான இந்த விரக்தியை மட்டும் மூலதனமாக்கி குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை மட்டும் தோற்கடிக்கவென கங்கணம் கட்டிக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக சத்தியம் செய்துகொண்டு (கபில்தேவ் டீவியில் அழுத மாதிரி) புலம் பெயர் கடும்போக்காளர்களின் பக்க பலத்துடன், எல்லா தேர்தல்களையும் பகீஷ்கரிக்க சொல்லிவிட்டு இந்த தேர்தலில் மட்டும் போட்டியிடும் காங்கிரஸ்காரரை மக்கள் எவ்வாறு கணிக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இவற்றுக்கப்பால் எமது இருப்பை தக்க வைக்க வேண்டிய உடனடி தேவையையும் புறக்கணிக்க முடியாது. தாயகத்திலிருக்கும் மக்கள் நாட்டை விட்டு கப்பலேறும் நிலைமை மாற்றமடைய வேண்டுமென்றால் எமது தாயகத்தில் பொருளாதார அபிவிருத்தி செயல்பாடுகள் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான செயல்பாடுகளே தொழில்வாய்ப்புகளையும் அதனூடாக தன்னம்பிக்கையுள்ள இளையோர்களையும் கட்டுகோப்பான சமுதாயத்திற்கும் வழிசமைக்கும். இந்த Economy stupid செயல்பாடுகளில் தேர்ந்தெடுக்கப்படும் பாஉக்கள் தாயத்திலும் புலத்திலும் இயங்கும் தொழில்முறை வல்லுனர்களோடும் வட கிழக்கு மாகாண சபைகளோடும் இணைந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.


தோற்பது யாராகிலும்  
வெல்வது 
தமிழாக, 
தமிழனாக, 
தமிழ் தேசியமாக, 
இருக்க வேண்டும்... இருக்கும். 

Thursday, 6 August 2015

பாகுபலி... பலியான தமிழ்Knoxல் பார்த்த கிரிஷாந்தனும் Houstonல் பார்த்த நிமலனும் கொழும்பில் பார்த்த ரமோவும் ஆகோ ஓகோ, திரையில் பார்க்க வேண்டிய படம், தமன்னா கிமன்னா, அப்பிடி இப்படி என்று சொன்னதை நம்பி, விசுவாசித்து, வாழ்க்கையில் முதல் தடவையாக திங்கட்கிழமை இரவு 9.15க்கு படம் பார்க்க போனேன்.. பாகுபலி.
(இப்பவே பிலிம் காட்ட தொடங்கிட்டான்)


"திலீபன் வீரமரணமடைந்து விட்டான்" என்ற வசனம் நித்திரையை கலைத்து 26 செப்டெம்பர் 1987 நினைவில் வர, graphics நீர்மலையின் பிரமாண்டமும் அசர வைக்கும் ஒளிப்பதிவும் ஆஜானுபாகுவான பிரபாஸும், பிரபாஸ் தோளில் தூக்கின கருங்கல் லிங்கமும், சனமில்லாத தியேட்டரும் திரைக்குள் என்னை உள்வாங்கின.
(அண்ணே, மாட்டை மரத்தில கட்டல்லயோ)


சோவென கொட்டும் நீர் வீழ்ச்சியும், அடங்கா ஆறும், ஆற்றில் மிதந்து காப்பாற்றப்படும் குழந்தையும் மகாபாரத கர்ணனிலிருந்து பழைய ஏற்பாட்டில் வரும் மோசே தொடங்கி கோச்சடையானில் ராணா தாண்டி பாகுபலியிலும் தொடர்கிறது. சரித்திர கதைகளின் திருஷ்டி பூசணிக்காய் தான் நீர்வீழ்ச்சியோ ?  கருங்கல் லிங்கத்தை பிரபாஸ் தோளில் சுமந்த காட்சி, தமிழினத்தின் மானத்தை தன் தோளில் சுமந்த தானை தலைவனை நினைவலையில் நிறுத்தி சென்றது. Avalancheக்குள் சிக்கி snowboatல் பிரபாஸும் தமன்னாவும் சறுக்கி சறுக்கி தப்பும் காட்சியில் எனக்கும் ஏனோ குளிர்ந்தது. 
(அவயளிற்கு வேர்த்திருக்கும்)


ஆட்டிலெளிகள், யுத்ததாங்கிகள், பொஸ்பரஸ் எரிகுண்டுகள்,  மனித கேடயங்கள் சகிதம் அரங்கேறும் யுத்தம், பிரமாண்டத்தின் பிரதிபலிப்பு, தொழில்நுட்ப வன்மையின் அழகோவியம். ஆனால் நீண்ட நெடிய யுத்த காட்சிகள் சில நிமிடங்களிற்கு பின்னால் அலுப்பு தட்டுகிறது. நாம் யுத்தத்திற்குள் வாழ்ந்ததால் சகிக்க முடியவில்லையோ அல்லது யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதால் வெறுத்தேனோ தெரியவில்லை.
(சென்டிமன்ட்)


காட்சியமைப்புகள், இயக்கம், ஒளிப்பதிவு இவற்றை விட படத்தின் பலங்கள் ஆஜானுபாகுவான நாயகர்கள், சத்தியராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணா. இந்த படத்தில் நடித்த "திரிஷாவின்" ராணாவும் "அனுஷ்காவின்"பிரபாஸும் அற்புத தெரிவுகள். சத்தியராஜ், அசத்தலாக அட்டகாசமில்லாமல் படத்தில் ஒன்றி போவது அவரிற்கேயுரிய தனித்துவம். "வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் குறையல்ல" என்று படையப்பாவில் தலைவரை பார்த்து சொன்ன வசனத்தின் வடிவமாய் ரம்யா கிருஷ்ணன், கம்பீரம்.. குரலிலும் நடையிலும் நடிப்பிலும்.
(குஷ்பு நடிக்க வேண்டிய படமடா)


படத்தின் பாரிய பலவீனங்கள் தரமற்ற இசை, சொதப்பல் தமன்னா, வீரியமில்லாத வசனங்கள்.  இந்த மெகா பட்ஜட் படத்திற்கு ஒரு பட்ஜட் இசையமைப்பாளரா ? என்ன கொடுமை ராஜமெளலி ? தமன்னாக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வராது, இந்த மெகா படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தை அவரிற்கு வழங்கியது சொதப்பலோ சொதப்பல். பிரபாஸுடனான தமன்னாவின் காதல் காட்சியின் கிளு கிளுப்பு பெரிதும் பேசப்பட்டாலும், என்னை பொறுத்தவரை அது "கொசுக்கடி ரகம்". தமன்னாவிற்கும் கிளு கிளுப்பிற்கும் வெகுதூரம். அனுஷ்கா என்ற அழகிய அரேபிய குதிரையை ஊத்தை உடுப்பில காட்டிட்டு தமன்னாவின் xxxxx காட்ட இயக்குனரிற்கு எப்படி மனம் வந்ததோ ? (நயன்தாராவை போட்டிருக்கலாம்)


கார்க்கியின் வசனங்களிற்கு வலிமை பத்தாது, செழுமை காணாது. டப்பிங் படமாக இருந்தாலும் அழகு தமிழை கையாள இந்த படம் ஒரு அட்டகாசமான மேடை. செம்மொழியாம் எம்மொழியில் புகுந்து விளையாட வேண்டிய அருமையான களம்.  இந்த அற்புத சந்தர்ப்பத்தை தவறவிட்டு தான் இன்னும் முதிர்ச்சியடையவில்லை, அனுபவம் புதுமை என்பதை நிரூபித்திருக்கிறார் கார்க்கி.
(கோச்சடையான் வசனங்கள் போல வராதண்ணே)


பாகுபலி படத்தில் கார்க்கி எழுதிய வசனங்களின் தரத்தை பார்த்த போது தமிழர் அரசியலும் இப்படி தான் நாசமாகி போகுமா என்ற பயம் வந்ததது. தமிழ் மக்கள் காலங்காலமாக அரசியல் பட்டறிவுடன் வாக்களித்திருக்கிறார்கள், அரசியல் களத்தை நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் முன் வாக்கு கேட்டு வீட்டு சின்ன தமிழரசு கட்சிகாரர்களும் சைக்கிள் சின்ன காங்கிரஸ் காரரும் ஆளுமையும் அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் உடையவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய நிலைமை அவ்வாறில்லை. அதே சின்னங்களில் பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு அதே இரு கட்சிகளும் களமாடுகின்றன. இரு கட்சிகளிலும் நிறைந்திருக்கும் பலவீனங்களும் குறைபாடுகளும் தெட்ட தெளிவாக தெரிகின்றன. 
(அப்பு, அரசியலையும் சினிமாவையும் கலக்க கூடாது)


தமிழாற்றலில் முதிர்ச்சியற்ற வசனகர்த்தாவிடம் சிக்கி பாகுபலி படம் பலியானது போல் ஆகாமல் அரசியல் பட்டறிவும் ஆளுமையும் யதார்த்த சிந்தனையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய செயல்திட்டத்தை நடைமுறை படுத்தவல்ல வல்லமையுள்ள தலைவர்களை எம்மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோமாக. 


பாகுபலி.. பலியான தமிழ்