Friday, 31 July 2015

தேர்தல்: அன்றும் இன்றும்
1977 பொது தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 1982 சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிக்கப்பட்டு, 1989 ஜனவரியில் பிரேமதாச ஜனாதிபதியாக, அதே ஆண்டு காதலர் தினத்துக்கு அடுத்த நாள் (15-2-1989) பொதுதேர்தல் நடாத்தப்பட்டது.முதல் முறையாக விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 11. இந்த ஆசன எண்ணிக்கை குடித்தொகையை அடிப்படையாக கொண்டது. இடப்பெயர்வுகளாலும் புலம்பெயர்தலாலும் 2001ல் 9ஆக சுறுங்கிய ஆசனங்கள் 2015ல் 7ஆக குறைவடைந்து விட்டது. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் வாழும் மக்கள் எண்ணிக்கை குறைய குறைய ஆசனங்களும் குறைய குறைய குடாநாட்டிற்கு வெளியே வாழும் "தேர்தல் வழிகாட்டிகள்" மட்டும் கூடிக் கொண்டே இருக்கிறார்கள்.


1989 தேர்தலில் வட கிழக்கில் இந்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் தமிழர் விடுதலை கூட்டணி (TULF), EPRLF, TELO, ENDLF இயக்கங்களோடு தேர்தல் கூட்டணி அமைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த மூன்று இயக்கங்களும் அன்று ஆயுதம் தரித்த ஒட்டு குழுக்களாக இந்திய படையினருடன் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த காலம். த்ரீ ஸ்டார்ஸ், மண்டையன் குழு போன்ற பதங்கள் மக்களை நடுநடுங்க வைத்த காலம். 


1977 தேர்தல் நாயகர்களான யோகேஸ்வரன், சிவசிதம்பரம், ஆனந்த சங்கரி யாழ்ப்பாணத்திலும் அமிர்தலிங்கம் மட்டக்களப்பிலும் போட்டியிட்டார்கள். அமிர் மட்டக்களப்பில் போட்டியிட்டதற்கான உண்மையான காரணம் நினைவில் இல்லை. ஆனால் வட-கிழக்கு ஒற்றுமை ஒருங்கிணைவு அது இது என்று ஏதாவது கதை அளந்திருப்பினம்.


"ரத்த கறை படிந்த கைகளுடன் இணைந்து பிரசாரம் செய்ய மாட்டோம்" என்று அறிக்கை விட்டிட்டு யாழ்ப்பாணம் வந்திறங்கிய கூட்டணிகாரருக்கு அஷோக் ஹோட்டலை விட்டு வெளில வர பயம். ஒரு பக்கம் புலிகள் மறு பக்கம் மண்டையன் குழு. யாரு எப்ப எங்க வைத்து போடுவாங்கள் என்று பயம். தங்களுக்கு பிரசாரம் தேவையில்லை சனம் எங்களுக்கு தான் புள்ளடி போடும் என்ற இறுமாப்பிலும் ஆடாம ஜெயிச்சு காட்டுவோம் என்ற ஆணவத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களில் கூட்டணி இறங்கியது. 


ஈபிகாரன்கள் தான் கலக்கினாங்கள். யாழ்ப்பாணத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன், யோகசங்கரி, யாழ் இந்துவில் பணியாற்றிய நவரத்தினம் களத்திலிறங்க, மூலை முடுக்கெல்லாம் போஸ்டர், லவுட் ஸபீக்கர் அலறல், பிரச்சார கூட்டங்கள், பத்திரிகை விளம்பரம், இலவச சாராயம் என்று ஒரு முழு அளவிலான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. தில்லு முல்லு பண்ணி 99.7% வாக்குகளுடன் கைப்பற்றிய ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபை வேற அவங்கட கையில, பிரச்சாரத்தில் ஒரு காட்டு காட்டினாங்கள். 


விடுதலை புலிகள், தேர்தலை பகீஷ்கரிக்குமாறும் தேர்தலில் பங்குபற்றுவோர் துரோகிகள் என்றும் அறிக்கை விட்டார்கள். நியமன பத்திரங்கள் கையளிப்பதற்கான கடைசி நாளில் அவ்வளவு நாளும் அமைதி காத்த EROS இயக்கம் சுயேட்சை குழுவாக வடகிழக்கில் தேர்தலில் களமிறங்கியது. புலிகளின் மறைமுக ஆதரவுடன் இந்திய சார்பு கட்சிகள் பாராளுமன்றம் செல்வதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது. வெளிச்சவீடு சின்னத்தில் போட்டியிட்ட EROS பிரச்சாரத்தில் அடக்கியே வாசித்தது.


யாழ்ப்பாணத்தில் EROSற்கு 8 ஆசனங்களும் EPRLFற்கு மூன்று ஆசனங்களும் கிடைத்தன. EROSன் ஸ்தாபகர்களில் ஒருவரான இரத்தினசபாபதிஅதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றார். அவரோடு பின்னாளில் தமிழீழ நீதித்துறை பொறுப்பாளராயிருந்த பரா, மாமனிதர் சிவமகாராசா ஆகியோரும் தெரிவாகினர். EPRLF சார்பில் போட்டியிட்ட மூவரும் தெரிவாகினர். சுரேஷ் பிரேமச்சந்திரனை விட நவரத்தினத்திற்கு கிடைத்த வாக்குகள் அதிகம். தமிழர் விடுதலை கூட்டணி பிரமுகர்கள் அனைவரும் தோல்வியை தழுவினார்கள்.


மட்டக்கிளப்பிலும் அதே கதை, அமிர் தோல்வி, TELO கருணாகரனுக்கு அதிகப்படியான வாக்குகள். அவரோடு பிரின்ஸ் காசிநாதரும் சாம் தம்பிமுத்துவும் தெரிவானார்கள். EROSக்கு ஒரு ஸீட் கிடைத்தது. சற்றும் சளைக்காத அமிர்தலிங்கம் பின்கதவால் பாராளுமன்றம் புகுந்தார், தேசிய பட்டியலூடாக. 


EROSற்கு திருகோணமலையில் 2, வன்னியில் 1, தேசிய பட்டியலில் 1 என்று ஆக மொத்தம் 13 ஆசனங்கள் கிடைத்தன. 


அமிரின் கொலைக்கு பின் மாவை சேனாதிராசா பின்கதவு எம்பியாகவும் சாம் தம்பிமுத்துவின் கொலைக்கு பின் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு எம்பியாகவும் பதவியேற்றனர். 


தேர்தலின் பின்னர் மே 4, 1989ம் ஆண்டு பிரேமதாச அரசிற்கும் விடுதலை புலிகளிற்குமிடையிலான பேச்சுவார்த்தை கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் ஆரம்பமாகி ஜூன் 10, 1990ல் முடிவிற்கு வந்தது. யுத்தம் ஆரம்பமாகி 15வது நாள் 13 EROS நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். சில வாரங்களிற்கு பின்னர் ஈரோஸ் இயக்கம் பிளவுற்று வே. பாலகுமார் தலைமையிலான அணி விடுதலை புலிகளுடன் இணைந்து கொண்டது. 


பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று EROS இயக்கத்தின் இரத்தினசபாபதி ஆற்றிய கன்னி உரை இன்றைய தேர்தல் காலகட்டத்திற்கும் பொருத்தமானதே
"எம்மைப் பொறுத்தவரையில் இந்த நாடாளுமன்றத்தை தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையுள்ள சபையாக நாம் கருதவில்லை. சாதாரண பெரும்பான்மை மூலம் தீர்மானம் இயற்றும் வழிமுறையுடைய இச்சபையில் தமிழ்த்தேசிய இனமானது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தீர்மானம் எதையும் நிறைவேற்றும் ஆற்றல் உடையதாக இங்கு இருக்கு முடியாது."

சுற்றி சுழன்று திரும்பவும் ஆரம்ப புள்ளியில் வந்து நிற்கிறோம். 1983ல் தமிழர் விடுதலை கூட்டணிகாரரும் 1990ல் ஈரோஸ்காரரும் பிரயோசனமில்லை என்று உதறி தள்ளிட்டு போன அதே பாராளுமன்ற கதிரைகளிற்கு அடிபடுறோம். ஒன்றா நின்று விடுதலை போராட்டத்திற்கு வலு சேர்த்த நாங்கள் இந்த தேர்தல் திருவிழாவில் மதி மயங்கி ஆளை ஆள் போட்டு தாக்குறம், குத்தி கிழிக்கிறோம்.

உலகம் வியக்கும் வண்ணம் ஒரு ஆயுதப்போரை நடாத்திய நாம் இன்று சாக்கடை அரசியலில் இறங்கியிருக்கிறோமா ? ஆயுத போராட்டம் மெளனித்ததன் பின்னர் தமிழர்களிற்கு அரசியல் தலைமை வகிக்க முன்வந்த அனைவரிடமும், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத, எமக்கிருந்த எதிர்பார்ப்புகள் நிறைவடையவில்லை. அரசியல் தீர்வையும் போர்க்குற்ற விசாரணையையும் எட்ட சர்வதேச அழுத்தமும் தென்னிலங்கையில் மாற்றமும் வேண்டும் தான். ஆனால் சிதைந்து போன சமூக கட்டமைப்பை சீரமைக்கவும் பாதிக்கப்பட்ட போராளிகளிற்கும் மக்களிற்கும் மறுவாழ்வளிக்கவும் அரசியல் தலைமைகள் தவறிவிட்டன. 

கூட்டமைப்பின் மீதான கோபமும் விரக்தியும் நியாயமானதே. இந்த விரக்தி கடந்த தேர்தலில் வென்றவர்களில் மட்டுமல்ல, 2004 தேர்தலில் வென்று இன்று முன்னணியில் அவதாரம் எடுத்தவர்களிற்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் 2001ல் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பிர்களின் செயற்பாடுகளும் கடுமையான பரிசீலனைக்கு உட்பட்டேயாக வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் கூட்டமைப்பில் மக்களிற்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மூலதனமாக்கி எதிர்ப்பரசியல் நடாத்தும் முன்னணியில் ஏனோ நம்பிக்கை வைக்கவும் மனம் தயங்குகிறது. 

இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செய்தி என் போன்ற பலரிற்கு ஒரு தெளிவை தந்திருக்கிறது, வாக்களிக்கும் மக்களிற்கு நல்வழி காட்டியிருக்கிறது, புலத்து மக்களிற்கும் சேதி சொல்கிறது. மே 2009ற்கு பிற்பட்ட காலத்தில் தமிழ் தேசிய அரசியலில் பிரவேசித்தவர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள். புலத்து மக்கள், தமிழகம், புலிகள் பற்றி விக்னேஸ்வரன் ஆரம்ப காலத்தில் உதிர்த்த கருத்துக்கள் தமிழ் மக்களின் மனதை தைத்தன. மகிந்தவின் முன்னாள் சத்தியப்பிரமாணம் எடுத்து "மும்மூர்த்திகளில்" ஒருவராய் வலம் வந்த விக்கியின் அண்மைக்கால செயற்பாடுகள் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக மாற்றம் கண்டது ஆறுதல் அளிக்கிறது. இந்த மாற்றம் கூட்டமைப்பை வழிநடாத்தும் தலைமையிலும் ஏற்பட வேண்டும்.

முதலமைச்சர் விக்கியின் செய்தியில் என்னை கவர்ந்த வரிகள் இவை: 
- இவ்வருடத் தொடக்கத்தில் எம்மக்கள் புதியதொரு சகாப்தத்தை உருவாக்க முன்வந்தனர். நல்லாட்சி, நீதி, நியாயம், சமத்துவம், சமாதானம், சகலருக்கும் பாதுகாப்பு போன்ற கொள்கைகளை முன்வைத்து புதியதொரு எதிர்காலத்தைக் கட்டி எழுப்ப முன்வந்தார்கள் . 
நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். 
- மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. 

தாயகத்தில் வாழும் எம்மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளிப்போம், அவர்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் பயணிக்க உறுதி பூணுவோம். 

சுயாட்சி
சுபீட்சம்
சுதந்திரம் No comments:

Post a Comment