Friday, 24 July 2015

கறுப்பு ஜூலைசனிக்கிழமை 23 ஜூலை 1983, நள்ளிரவு  

யாழ்ப்பாணம் வரலாற்றில் முதல்முறையாக குண்டு சத்தத்தால் அதிர்ந்தது. அதற்கு பிறகு அதைவிட பன்மடங்கு சத்தங்களையும் அவலங்களையும் காணப்போவதை அறியாது யாழ்ப்பாணம் பதறியடித்து எழும்பியது. என்ன ஏதுவென்றறியாது விழித்தெழுந்த மக்களிற்கு துப்பாக்கி சத்தங்களும் கேட்டன. ஆனால் அந்த முதல் அதிர்வின் ஓசை மட்டும் அந்த இரவில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பலரின் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 


தலைவர் பிரபாகரன், கிட்டு மாமா, விக்டர்,புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோஷம், அப்பையா ஆகியோரை அடங்கிய விடுதலை புலிகளின் அணி, பலாலியிருந்து குருநகர் நோக்கி செல்லும் Four Four Bravo என்ற இராணுவ ரோந்து அணியை திருநெல்வேலி தபால் கட்டை சந்திக்கருகில் கண்ணிவெடி வெடிக்கவைத்தும் துப்பாக்கிகள் கொண்டும் தாக்க.. 13 இராணுவத்தினர் பலி, செல்லக்கிளி வீரமரணம்.


அடுத்த நாள் ஜூலை 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, இலங்கை இராணுவம் ஆடிய கொலைவெறி தாண்டவத்திற்கு, இந்த விஷயம் தெரியாமல் டியூஷனிற்கும் தேவாலயத்திற்கும் வேலைக்கும் போக வீதியில் இறங்கின சனங்களும் சம்பவ இடத்திற்கருகில் வீடுகளில் இருந்த சனங்களும் நூற்றுக்கணக்கானோர் இரையானார்கள்.


ஜூலை 25, திங்கட்கிழமை கொழும்பில் இனக்கலவரம் வெடித்தது. இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சில நண்பர்களின் நினைவுகள் பதிவுகளாக


"இராமகிருஷ்ண ரோட் topலிருந்து சிவப்பு tshirt உம் நீல சாரமும் உடுத்த ஒருத்தன் சிங்களத்தில் சத்தமா கத்திக்கொண்டு பெரிய வாளோடு எங்களை துரத்தி கொண்டு ஓடி வந்தான்" ரமோஷன்


"கண்டி நகர் எரியிறதை Trinity College hostelலிருந்து பார்த்து கொண்டிருந்தேன். என்ன நடக்குது என்று விளங்கேல்ல. சிங்கள நண்பன் ஒருவன் கொட்டியா வந்திட்டுது என்று கத்தினான். நான் அவன கேட்டேன் கொட்டியா வந்தா ஏன் இடத்தை கொழுத்துறாங்கள் ? கலைக்க வேண்டியது தானே ?. அவன் சொன்னான்..அடோ இது தெமல கொட்டியா ஓய்.. அன்றைக்கு தான் தமிழ் புலிகள் இருப்பதை அறிந்தேன்" நிமலன்


"எனக்கு முன்னால போய்க்கொண்டிருந்த காரை நிற்பாட்டி, ஆக்களை இழுத்து அடி அடியென்று அடிச்சு போட்டு திரும்ப அவங்களை காருக்குள்ள போட்டு காரை பெற்றோல் ஊத்தி கொழுத்தினாங்கள்" யசோ மாமா


"எங்கட வீட்டு கண்ணாடி dining table பெரிய சத்தத்தோடு உடைபடுவது பக்கத்து வீட்டில ஒளிஞ்சிருந்த எங்களிற்கு நல்லா கேட்டுச்சு. அதற்கு பிறகு ஒவ்வொன்றா எல்லாத்தையும்..எல்லாத்தையும்.. எல்லா சாமானையும், வீட்டையும் உடைச்சாங்கள்" தாரிணி


"இராமகிருஷ்ண மிஷனில் ஒளிச்சுக்கொண்டு யன்னல் இடுக்குக்கால பார்க்க.. மிஷனிற்கு நேர் முன்னுக்க இருந்த என்ட வீடு எரியிறதை என்ற கண்ணால பார்த்தேன்" சிவக்குமார் அண்ணா


" பம்பலபிட்டி இந்துவிலிருந்து vanல் seatற்கு அடியில ஒளிஞ்சு கொண்டு வெள்ளவத்தைக்கு போகேக்க, பம்பா பாலத்தடியில சிங்களவங்கள் மறிச்சிட்டாங்கள். அன்றைக்கு நான் விலாசமா ஸீட்டில இருந்திருந்தனென்றா நீ இளையராஜாவை சந்திருச்திருக்க மாட்டாய்" ஐங்கரன்


யாழ்ப்பாணத்திலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட நாங்கள் அயல் அட்டையிலிருக்கிற பெடி பெட்டைகளோடு சேர்ந்து தாயம், கிளி பூர், ஜஸ் பைஸ், கிட்டி புல், எட்டு கோடு, கப்பல் கோடு என்று ஒரே விளையாட்டு தான். இரவில பெரியாட்கள் 6.30க்கு மாநில செய்திகள், 7.15க்கு ஆகாஷவாணி, 7.45க்கு வெரித்தாஸ், 9.00 மணிக்கு லங்கா புவத், 9.15க்கு தமிழோசை என்று கேட்பினம். கொழும்பில பெரிய பிரச்சினை தமிழாக்களிற்கு சிங்களவன் அடிக்கிறான் என்று விளங்கிச்சு. 8.30ற்கு  எல்லோரும் சேர்ந்து செபமாலை சொல்லி கொழும்பாருக்காக ஜெபித்தோம்.


பிரச்சினை முடிஞ்சு schoolற்கு போனால் நிறைய புதுப் பெடியள் நிற்கிறாங்கள், கொழும்பில இருந்து வந்த அகதிகளாம். நாலு வருஷமா ஒன்றா இருந்த classஐ வேற பிரிச்சிட்டாங்கள் என்ற கடுப்பு ஒரு பக்கம் கொச்சை தமிழ் கதைக்கிற இவங்கட இம்சை இன்னொருபக்கம்.. வாழ்க்கை வெறுத்துச்சுது. முழு schoolற்கும் Jubilee hallல் assembly. ஆனந்தராஜா மாஸ்டர் Englishல், புது பெடியளை அரவணைக்க சொல்லி சொன்னது விளங்கிச்சு. Interval நேரங்களில் பழைய அண்ணாமாரும் புதுசா வந்த அண்ணாமாரும் ஆவேசமா கதைப்பினம்.. கொந்தளிக்கீனம் என்பது மட்டும் புரிந்தது. அப்படி துடித்த அண்ணாமார் பிறகு போராளிகளாகவும் புலம் பெயர் செயற்பாட்டாளர்களாகவும் மாறினார்கள் என பின்னாளில் அறிந்தேன்.


புதுசா வந்த பெடியளில் சிலது மண்டைக்காய்கள், அப்ப வந்த term testல் கலக்கினாங்கள். வேற சிலர் யாழ்ப்பாண பெடியளோடு படிக்கேலாது என்று வெருண்டாங்கள். உண்மையில் வந்த பெடியளால எங்கட தரமும் பாடசாலையின் தரமும் ஒரு படி உயர்ந்திச்சு...படிப்பிலும் விளாயாட்டிலும் பழக்க வழக்கங்களிலும். 
St John'sன் brain gain. 


32 வருஷமாகியும் 83 இனக்கலவரத்தின் வடு இன்னும் மாறல்ல, நீதியும் கிடைக்கல்ல, விடிவும் பிறக்கல்ல. இப்ப பழைய குருடி கதவை திறடி கதையா 1977 இலக்ஷன் மாதிரி 2015 இலக்ஷன். அப்ப தமிழரசு கட்சி தமிழர் விடுதலை கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டு  தமிழீழத்திற்கான தேர்தல் என்டுச்சு தமிழ் காங்கிரஸ் அதை எதிர்த்து இலக்ஷன் கேட்டுச்சு. இப்ப என்னென்டா தமிழ் காங்கிரஸ் தமிழ் இரு தேசம் ஒரு நாடு கோஷத்தோட முன்னணி என்ற பெயரிலும் அடுத்த வருஷம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற முழக்கத்தோடு தமிழரசு கட்சி கூட்டமைப்பு என்ற பெயரில் மீண்டும் களமாடினமாம்....மாற்றம் வேணுமாம். அவைக்குள்ள தான் மாற்றம் வந்திருக்கு.. சனம் பாவம்.


மற்ற பக்கத்தால மாற்றம் வந்து இலக்ஷனில மகிந்த திரும்பி வந்தா அரோகரா அல்லேலூயா தான். கஜனும் சுமந்திரனும் பாராளுமன்றத்தில உணர்ச்சி பொங்க விவாதிக்கிறதை Facebookல் like பண்ணிப்போட்டு comment அடிக்க வேண்டியது தான். ATC சுமாவை கூப்பிட்டு ஆப்ப பார்ட்டியும் TCC கஜனை கூப்பிட்டு ஒடியல்கூழ் பார்ட்டியும் வைக்கலாம். 


காலம் உருண்டோடியது
கனவுகள் கலைந்தன
கட்சிகளும் மாறின
விடியல் மட்டும் புலப்படல்ல.


கர்த்தரே முருகா 
எங்களிற்கு எப்ப விடியும் ?

1 comment:

  1. Well written Jude. July 83 was the beginning for all. I still remember the thinnaveli attack followed by many killings in palam road.

    ReplyDelete