Friday, 17 July 2015

நஞ்சுண்ட காடு
1980களின் நடுப்பகுதியில் இந்திய அரசு விடுதலை இயக்கங்களிற்கு ஆயுத பயிற்சி அளிக்க தொடங்கிய காலத்தில் பயிற்சி முகாம் வீடியோக்கள் எல்லா இயக்கங்களாலும் பிரச்சாரத்திற்கு பாவிக்கப்பட்டன. அதில் அணி அணியாக போராளிகள் ஓடுவார்கள், நெருப்பு வட்டத்திற்குள்ளால் பாய்வார்கள், குறி தவறாமல் சுடுவார்கள்,  மகிழ்ச்சியாக தென்படுவார்கள்.

1990களில் விடுதலைப் புலிகள் தங்களது தாக்குதல்களை கமராவிற்குள் பதிவு செய்ய நிதர்சனத்தில் ஒரு பிரிவையே உருவாக்கினார்கள். அந்த தாக்குதல் வீடியோக்கள் தாக்குதல்களை தலைமை மீளாய்வதற்கும்,  புதிய தாக்குதல்களை திட்டமிடவும் பயன்பட்டதோடு, வரலாற்று பதிவாகவும், தாயகத்தில் ஆட்சேர்ப்பிற்கும்,  புலத்தில் நிதி சேகரிப்பிற்கும் பயன்பட்டன. யுத்த களங்களில் புலிகள் ஈட்டும் வெற்றிகளிற்கு பின்னால் கடுமையான பயிற்சியும் திட்டமிடலும் வேவுத்தகவல்களும் இருக்கும். "கடுமையான பயிற்சி இலகுவான சண்டை" என்பது புலிகளின் தாரக மந்திரங்களில் ஒன்று.

1990களின் விடுதலைப்புலிகளின் பயிற்சி பாசறையை களமாக, மையமாக வைத்து போர்க்கால இலக்கியமாய் குணா கவியழகனின் "நஞ்சுண்ட காடு" எனும் நாவல் உருப்பெறுகிறது. 

"அன்னை மடியின் இதமான சூட்டிலிருந்து விலகியவர்கள்
என்னவானார்கள் ? 
எங்கு போனார்கள் ? 
என்ன செய்தார்கள் ? 
என்ன எண்ணினார்கள் ? " 
என்ற ஈரோஸ் இயக்கத்தின் தலைவரும் புலிகளின் மூத்த உறுப்பினருமான க.வே. பாலகுமாரனின் முன்னுரை களம் அமைக்க 13 புதிய போராளிகளுடன் கன்டர் வாகனம் நம்மை "கத்தியால் வெட்டியெடுக்ககூடிய இருளில்" நஞ்சுண்ட காட்டுக்குள் அழைத்து செல்கிறது.

"புயலோடு போராடும் புலியாகின்றனர்" 

பற்றிக்ஸிலிருந்து ஒருத்தன், யாழ் இந்துவின் மைந்தனொருவன், கம்பஸிலிருந்து இன்னொருத்தன், கத்தோலிக்க பாதிரியாராய் ஆசைப்பட்டவன், வெளிநாடு சென்று திரும்பியவன், கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து ஒருத்தன், வசதியான குடும்பத்திலிருந்து பிறிதொருத்தன் என்று பாசறையில் ஒரு குடிலிற்குள் வாழும் போராளிகளின் பின்புலத்தையும் அவர்கள் ஏன் ஆயுதம் தரித்த போராளிகளானார்கள் என்பதையும் கவியழகன் பதிவு செய்யும் விதம், அற்புதம். 

"கொஞ்சப்பேர் சுமக்கிறதும், 
சுமக்கேக்க இழப்பு வாறதும், 
தோத்துப்போறதும் 
சுமக்காதவனாலதானே"

பயிற்சியில் வதைபடும் போராளிகளின் வலியையும் தவறுக்காக அனுபவிக்கும் கடுந்தண்டனைகளையும் வாசிக்க வாசிக்க மனம் வலிக்கிறது. தானும் சக போராளிகளும் உடலிலும் உணர்விலும் அனுபவித்த வலிகளை, வலி குறையாமல் வாசகனில் கவியழகன் சுமையிறக்கி இருக்கிறார். தவறு செய்பவர்களை காட்டி கொடுப்பவர்கள், அதிலும் காட்டி கொடுப்பவனை காட்டி கொடுப்பவர்கள், திருந்திய படலங்கள் புலிகள் இயக்கத்தின் போராளிகளிற்கிடையிலிருந்த உறவின் வலுவை, அந்த வலிமையான உறவின் ஆரம்ப புள்ளியை விபரிக்கிறது.

"நேசம் உறவுருவதால் வருவதில்லை, 
நினைவுறுவதால் வருவது"

வருச்சுக் கதிரையிலிருந்து வானம் பார்த்து ஏணைபிறை ரசித்தவண்ணம் சுகுமாருடனான உரையாடல்கள் வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்தவை, ஆனால் தத்ரூபத்தை இழக்காதவை. இந்த வகை உரையாடல்கள் நானறிந்தவரை ஈழத்து போரிலியக்கங்களில் புதுமை. கவியழகனின் ஆழமான சிந்தனையாற்றலும் அதை சொல்லாடலாக்கிய விதமும், அழகு.

"வானத்தின் நிலவு ஏணை மாதிரி தூங்குது, 
இதில ஏறி படுக்க எத்தனை பேருக்கு தெரியும்"

சுகுமாரின் அக்கா, நாவலில் வியாபித்து நிற்கும் கதாபாத்திரம்.  கடைசிவரை நாவலில் பயணிக்கும் சுகுமாரின் அக்கா, மண்ணின் வேதனைகளை அவமானங்களை அவநம்பிக்கைகளை இழப்புக்களை உணர்வுகளை தூக்கிச்செல்லும் ஒரு பாத்திரமாக செதுக்கப்பட்டிருக்கிறார். டவுனில அக்கா தொள்ளாயிரத்து ஜம்பது ரூபாய்க்கு வாங்க முடியாமல் போன சட்டை, கைக்கெட்டும் தூரத்தில் தெரிந்த இனத்தின் விடிவை ஏனோ நினைவூட்டுகிறது.

"விடுதலைக்கு தக்க விலை தான் கொடுக்கலாம். 
அதற்கு மேலால் கொடுக்க முடியாது. 
கொடுக்க கூடாது.
கொடுக்க நேர்ந்தால் நாங்கள் தோற்றுவிடுவோம்"

தமிழீழ விடுதலை போராட்டத்தை பதிவு செய்ய பல ஆக்கங்கள் உருப்பெற்றன, பெற்றுக்கொண்டும் இருக்கின்றன. கவியழகனின் நஞ்சுண்ட காட்டிற்கு இந்த படைப்புகளில் ஒரு தனியிடம் நிட்சயம் கிடைக்கும். அவர் தெரிவு செய்த களம், சிந்தனையின் ஆழம், சொல்லாடிய விதம் என்பன கவியழகனின் நஞ்சுண்ட காட்டை தனித்துவமிக்க படைப்பாக்கியிருக்கிறது.

"உன் மரணம் விடுவிக்கப்படாது விடின்,
மனுக்குலத்தில் தமிழ் சாதி மண்ணாகிப்போகும் காண்"


நஞ்சுண்ட காடு:
நெருடல், 
சுமக்காத சுமையின் நெருடல்,
நிறைவேறாத  கனவின் நெருடல்
நெருடல்,
No comments:

Post a Comment