Friday, 12 June 2015

என் இனிய மகிக்கு


என் இனிய மகிக்கு,
உனக்கு அகவணக்கம் செலுத்தி விளக்கு வைக்க ஒரு கூட்டம் துடியாய் துடிப்பதை, ஆர்ப்பரிப்பதை நினைத்து விசனத்துடன் இந்த மடல் வரைகிறேன்.
உன்னை முதன் முதலாக நான் சுவைத்தது 1985ல் யாழ்ப்பாணத்தில் தான். அந்த காலத்தில் Australia விற்கு போய்ட்டு வந்த அம்மம்மா 2 பக்கற் கொண்டுவந்து எனக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று தந்தவ. நாங்க 2 பேரும் எட்டிய புரிந்துணர்வு உடன்படிக்கை - ஒன்றை 2ஆ பிரித்து சாப்பிட்டால் 2 நாள் 2 பேரும் சாப்பிடலாம்.
முதல் நாள் உன்னை தயார் செய்து எடுப்பெடுத்து விறாந்தைல சாக்கு கட்டலில இருந்து சாப்பிட்டு கொண்டிருக்க Old Parkற்கு குண்டு போட வந்த பொம்மர் விதான்ஸ் லேனுக்க அடித்த அதிர்ச்சியில் சாப்பிட்ட அரைவாசி கோப்பை கவிழ்ந்திட்டுது. அறுவான்கள்...
அன்றைக்கு பிடித்தது இந்த மகி மோகம். "எந்த பெண்ணிலும் இல்லாத ஓன்று" மாதிரி..நீ எனக்கு.
இப்படித்தான் 1987ல் உன்னை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பின்னேரத்தில தான் வித்தியாசமான சத்தத்துடன் புது பொம்மருகள் வந்து குண்டு போடாமல் மூட்டை மூட்டையா ஏதோ போட்டாங்கள். இரவு 7.15 ஆகாசவாணி செய்தி கேட்கேக்க தான் வந்தது இந்தியன்ட மிக் விமானம், ஒபரேஷன் பூமாலை என்றும் போட்ட மூட்டைக்கள் இந்தியன் தந்த பருப்பு என்றும் தெரிஞ்சுது.
கொழும்பில படிக்கிற காலத்தில் உன்னை அடிக்கடி ருசித்தேன். ரஞ்சன் விஜயரத்ன, பிரேமதாச மண்டையை போடக்கிலயும் கொலன்னாவ, மத்திய வங்கி அடிவிழேக்கயும் curfew.. அப்ப நீ தான் ஆபத் பாண்டவன். அதோட ஆடம்பர பண்ட லிஸ்டிலிருந்து இப்ப நீ மத்திய தரவரக்கத்தின் அடையாளமாக மாறிய காலப்பகுதி இது.
Australia வந்த பிறகு பார்தா நீ ஏழை எளியவர்களின் பங்காளன் என்றார்கள். எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு. ஆனாலும் நான் உன்னை கைவிடல்ல. யாரும் பாரக்காத நேரத்தில் Woolworthsல் உன்னை trolleyல் அமுக்கி கொண்டு வந்து விடுவேன். வீட்டிலும் கந்தோரிலும் உன்னோடு கழித்த பொழுதுகள் கமல்ஹாசன் குடுக்கும் முத்தங்கள் மாதிரி.. Short and Sweet..
மனிசியோடு சின்ன சின்ன கொழுவல் நடக்கிற நாட்களில் முறுக்கிக்கொண்டு "நான் சமைக்கிறேன்" என்று வெளிக்கிட்டு உன்னை கொதி கொதி சுடிதண்ணியில ஊற வச்சு
மூன்டு நிமிஷம் மைக்ரோவேவில வேகவைச்சு, அரிதட்டில போட்டு தண்ணிய நல்லா வடிச்சு, மனிசி யாழ்ப்பாண கறித்தூள், போட்டு சமைத்த நாட்டுக்கோழி கறியோடு சாப்பிட்டேக்க சொர்க்கம் பக்கத்திலிருந்து ஜிக்கிச்சா போடும். அதோடு original கொக்கா கோலாவும் அடிக்க சொர்க்கம் இளையராஜா மெலடிகள் இழுத்து விடும்.
இப்ப என்னவென்டா உன்னை தடை செஞ்சிடினமாம். இனி உன்னை சாப்பிட்டால் வியாதி வருமாம் சாவும் வருமாம்.
என்ன கொடுமை சரவணா ?
தாண்டிக்குளம் தாண்டியும் தொடர்ந்த எங்கள் பந்தம் தடைகள் தாண்டியும் தொடரும்.
உடல் பயனாளிகளிற்கு (organ donor)
உயிர் மகிக்கு


No comments:

Post a Comment