Friday, 31 July 2015

தேர்தல்: அன்றும் இன்றும்
1977 பொது தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 1982 சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிக்கப்பட்டு, 1989 ஜனவரியில் பிரேமதாச ஜனாதிபதியாக, அதே ஆண்டு காதலர் தினத்துக்கு அடுத்த நாள் (15-2-1989) பொதுதேர்தல் நடாத்தப்பட்டது.முதல் முறையாக விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 11. இந்த ஆசன எண்ணிக்கை குடித்தொகையை அடிப்படையாக கொண்டது. இடப்பெயர்வுகளாலும் புலம்பெயர்தலாலும் 2001ல் 9ஆக சுறுங்கிய ஆசனங்கள் 2015ல் 7ஆக குறைவடைந்து விட்டது. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் வாழும் மக்கள் எண்ணிக்கை குறைய குறைய ஆசனங்களும் குறைய குறைய குடாநாட்டிற்கு வெளியே வாழும் "தேர்தல் வழிகாட்டிகள்" மட்டும் கூடிக் கொண்டே இருக்கிறார்கள்.


1989 தேர்தலில் வட கிழக்கில் இந்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் தமிழர் விடுதலை கூட்டணி (TULF), EPRLF, TELO, ENDLF இயக்கங்களோடு தேர்தல் கூட்டணி அமைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த மூன்று இயக்கங்களும் அன்று ஆயுதம் தரித்த ஒட்டு குழுக்களாக இந்திய படையினருடன் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த காலம். த்ரீ ஸ்டார்ஸ், மண்டையன் குழு போன்ற பதங்கள் மக்களை நடுநடுங்க வைத்த காலம். 


1977 தேர்தல் நாயகர்களான யோகேஸ்வரன், சிவசிதம்பரம், ஆனந்த சங்கரி யாழ்ப்பாணத்திலும் அமிர்தலிங்கம் மட்டக்களப்பிலும் போட்டியிட்டார்கள். அமிர் மட்டக்களப்பில் போட்டியிட்டதற்கான உண்மையான காரணம் நினைவில் இல்லை. ஆனால் வட-கிழக்கு ஒற்றுமை ஒருங்கிணைவு அது இது என்று ஏதாவது கதை அளந்திருப்பினம்.


"ரத்த கறை படிந்த கைகளுடன் இணைந்து பிரசாரம் செய்ய மாட்டோம்" என்று அறிக்கை விட்டிட்டு யாழ்ப்பாணம் வந்திறங்கிய கூட்டணிகாரருக்கு அஷோக் ஹோட்டலை விட்டு வெளில வர பயம். ஒரு பக்கம் புலிகள் மறு பக்கம் மண்டையன் குழு. யாரு எப்ப எங்க வைத்து போடுவாங்கள் என்று பயம். தங்களுக்கு பிரசாரம் தேவையில்லை சனம் எங்களுக்கு தான் புள்ளடி போடும் என்ற இறுமாப்பிலும் ஆடாம ஜெயிச்சு காட்டுவோம் என்ற ஆணவத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களில் கூட்டணி இறங்கியது. 


ஈபிகாரன்கள் தான் கலக்கினாங்கள். யாழ்ப்பாணத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன், யோகசங்கரி, யாழ் இந்துவில் பணியாற்றிய நவரத்தினம் களத்திலிறங்க, மூலை முடுக்கெல்லாம் போஸ்டர், லவுட் ஸபீக்கர் அலறல், பிரச்சார கூட்டங்கள், பத்திரிகை விளம்பரம், இலவச சாராயம் என்று ஒரு முழு அளவிலான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. தில்லு முல்லு பண்ணி 99.7% வாக்குகளுடன் கைப்பற்றிய ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபை வேற அவங்கட கையில, பிரச்சாரத்தில் ஒரு காட்டு காட்டினாங்கள். 


விடுதலை புலிகள், தேர்தலை பகீஷ்கரிக்குமாறும் தேர்தலில் பங்குபற்றுவோர் துரோகிகள் என்றும் அறிக்கை விட்டார்கள். நியமன பத்திரங்கள் கையளிப்பதற்கான கடைசி நாளில் அவ்வளவு நாளும் அமைதி காத்த EROS இயக்கம் சுயேட்சை குழுவாக வடகிழக்கில் தேர்தலில் களமிறங்கியது. புலிகளின் மறைமுக ஆதரவுடன் இந்திய சார்பு கட்சிகள் பாராளுமன்றம் செல்வதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது. வெளிச்சவீடு சின்னத்தில் போட்டியிட்ட EROS பிரச்சாரத்தில் அடக்கியே வாசித்தது.


யாழ்ப்பாணத்தில் EROSற்கு 8 ஆசனங்களும் EPRLFற்கு மூன்று ஆசனங்களும் கிடைத்தன. EROSன் ஸ்தாபகர்களில் ஒருவரான இரத்தினசபாபதிஅதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றார். அவரோடு பின்னாளில் தமிழீழ நீதித்துறை பொறுப்பாளராயிருந்த பரா, மாமனிதர் சிவமகாராசா ஆகியோரும் தெரிவாகினர். EPRLF சார்பில் போட்டியிட்ட மூவரும் தெரிவாகினர். சுரேஷ் பிரேமச்சந்திரனை விட நவரத்தினத்திற்கு கிடைத்த வாக்குகள் அதிகம். தமிழர் விடுதலை கூட்டணி பிரமுகர்கள் அனைவரும் தோல்வியை தழுவினார்கள்.


மட்டக்கிளப்பிலும் அதே கதை, அமிர் தோல்வி, TELO கருணாகரனுக்கு அதிகப்படியான வாக்குகள். அவரோடு பிரின்ஸ் காசிநாதரும் சாம் தம்பிமுத்துவும் தெரிவானார்கள். EROSக்கு ஒரு ஸீட் கிடைத்தது. சற்றும் சளைக்காத அமிர்தலிங்கம் பின்கதவால் பாராளுமன்றம் புகுந்தார், தேசிய பட்டியலூடாக. 


EROSற்கு திருகோணமலையில் 2, வன்னியில் 1, தேசிய பட்டியலில் 1 என்று ஆக மொத்தம் 13 ஆசனங்கள் கிடைத்தன. 


அமிரின் கொலைக்கு பின் மாவை சேனாதிராசா பின்கதவு எம்பியாகவும் சாம் தம்பிமுத்துவின் கொலைக்கு பின் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு எம்பியாகவும் பதவியேற்றனர். 


தேர்தலின் பின்னர் மே 4, 1989ம் ஆண்டு பிரேமதாச அரசிற்கும் விடுதலை புலிகளிற்குமிடையிலான பேச்சுவார்த்தை கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் ஆரம்பமாகி ஜூன் 10, 1990ல் முடிவிற்கு வந்தது. யுத்தம் ஆரம்பமாகி 15வது நாள் 13 EROS நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். சில வாரங்களிற்கு பின்னர் ஈரோஸ் இயக்கம் பிளவுற்று வே. பாலகுமார் தலைமையிலான அணி விடுதலை புலிகளுடன் இணைந்து கொண்டது. 


பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று EROS இயக்கத்தின் இரத்தினசபாபதி ஆற்றிய கன்னி உரை இன்றைய தேர்தல் காலகட்டத்திற்கும் பொருத்தமானதே
"எம்மைப் பொறுத்தவரையில் இந்த நாடாளுமன்றத்தை தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையுள்ள சபையாக நாம் கருதவில்லை. சாதாரண பெரும்பான்மை மூலம் தீர்மானம் இயற்றும் வழிமுறையுடைய இச்சபையில் தமிழ்த்தேசிய இனமானது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தீர்மானம் எதையும் நிறைவேற்றும் ஆற்றல் உடையதாக இங்கு இருக்கு முடியாது."

சுற்றி சுழன்று திரும்பவும் ஆரம்ப புள்ளியில் வந்து நிற்கிறோம். 1983ல் தமிழர் விடுதலை கூட்டணிகாரரும் 1990ல் ஈரோஸ்காரரும் பிரயோசனமில்லை என்று உதறி தள்ளிட்டு போன அதே பாராளுமன்ற கதிரைகளிற்கு அடிபடுறோம். ஒன்றா நின்று விடுதலை போராட்டத்திற்கு வலு சேர்த்த நாங்கள் இந்த தேர்தல் திருவிழாவில் மதி மயங்கி ஆளை ஆள் போட்டு தாக்குறம், குத்தி கிழிக்கிறோம்.

உலகம் வியக்கும் வண்ணம் ஒரு ஆயுதப்போரை நடாத்திய நாம் இன்று சாக்கடை அரசியலில் இறங்கியிருக்கிறோமா ? ஆயுத போராட்டம் மெளனித்ததன் பின்னர் தமிழர்களிற்கு அரசியல் தலைமை வகிக்க முன்வந்த அனைவரிடமும், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத, எமக்கிருந்த எதிர்பார்ப்புகள் நிறைவடையவில்லை. அரசியல் தீர்வையும் போர்க்குற்ற விசாரணையையும் எட்ட சர்வதேச அழுத்தமும் தென்னிலங்கையில் மாற்றமும் வேண்டும் தான். ஆனால் சிதைந்து போன சமூக கட்டமைப்பை சீரமைக்கவும் பாதிக்கப்பட்ட போராளிகளிற்கும் மக்களிற்கும் மறுவாழ்வளிக்கவும் அரசியல் தலைமைகள் தவறிவிட்டன. 

கூட்டமைப்பின் மீதான கோபமும் விரக்தியும் நியாயமானதே. இந்த விரக்தி கடந்த தேர்தலில் வென்றவர்களில் மட்டுமல்ல, 2004 தேர்தலில் வென்று இன்று முன்னணியில் அவதாரம் எடுத்தவர்களிற்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் 2001ல் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பிர்களின் செயற்பாடுகளும் கடுமையான பரிசீலனைக்கு உட்பட்டேயாக வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் கூட்டமைப்பில் மக்களிற்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மூலதனமாக்கி எதிர்ப்பரசியல் நடாத்தும் முன்னணியில் ஏனோ நம்பிக்கை வைக்கவும் மனம் தயங்குகிறது. 

இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செய்தி என் போன்ற பலரிற்கு ஒரு தெளிவை தந்திருக்கிறது, வாக்களிக்கும் மக்களிற்கு நல்வழி காட்டியிருக்கிறது, புலத்து மக்களிற்கும் சேதி சொல்கிறது. மே 2009ற்கு பிற்பட்ட காலத்தில் தமிழ் தேசிய அரசியலில் பிரவேசித்தவர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள். புலத்து மக்கள், தமிழகம், புலிகள் பற்றி விக்னேஸ்வரன் ஆரம்ப காலத்தில் உதிர்த்த கருத்துக்கள் தமிழ் மக்களின் மனதை தைத்தன. மகிந்தவின் முன்னாள் சத்தியப்பிரமாணம் எடுத்து "மும்மூர்த்திகளில்" ஒருவராய் வலம் வந்த விக்கியின் அண்மைக்கால செயற்பாடுகள் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக மாற்றம் கண்டது ஆறுதல் அளிக்கிறது. இந்த மாற்றம் கூட்டமைப்பை வழிநடாத்தும் தலைமையிலும் ஏற்பட வேண்டும்.

முதலமைச்சர் விக்கியின் செய்தியில் என்னை கவர்ந்த வரிகள் இவை: 
- இவ்வருடத் தொடக்கத்தில் எம்மக்கள் புதியதொரு சகாப்தத்தை உருவாக்க முன்வந்தனர். நல்லாட்சி, நீதி, நியாயம், சமத்துவம், சமாதானம், சகலருக்கும் பாதுகாப்பு போன்ற கொள்கைகளை முன்வைத்து புதியதொரு எதிர்காலத்தைக் கட்டி எழுப்ப முன்வந்தார்கள் . 
நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். 
- மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. 

தாயகத்தில் வாழும் எம்மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளிப்போம், அவர்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் பயணிக்க உறுதி பூணுவோம். 

சுயாட்சி
சுபீட்சம்
சுதந்திரம் Friday, 24 July 2015

கறுப்பு ஜூலைசனிக்கிழமை 23 ஜூலை 1983, நள்ளிரவு  

யாழ்ப்பாணம் வரலாற்றில் முதல்முறையாக குண்டு சத்தத்தால் அதிர்ந்தது. அதற்கு பிறகு அதைவிட பன்மடங்கு சத்தங்களையும் அவலங்களையும் காணப்போவதை அறியாது யாழ்ப்பாணம் பதறியடித்து எழும்பியது. என்ன ஏதுவென்றறியாது விழித்தெழுந்த மக்களிற்கு துப்பாக்கி சத்தங்களும் கேட்டன. ஆனால் அந்த முதல் அதிர்வின் ஓசை மட்டும் அந்த இரவில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பலரின் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 


தலைவர் பிரபாகரன், கிட்டு மாமா, விக்டர்,புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோஷம், அப்பையா ஆகியோரை அடங்கிய விடுதலை புலிகளின் அணி, பலாலியிருந்து குருநகர் நோக்கி செல்லும் Four Four Bravo என்ற இராணுவ ரோந்து அணியை திருநெல்வேலி தபால் கட்டை சந்திக்கருகில் கண்ணிவெடி வெடிக்கவைத்தும் துப்பாக்கிகள் கொண்டும் தாக்க.. 13 இராணுவத்தினர் பலி, செல்லக்கிளி வீரமரணம்.


அடுத்த நாள் ஜூலை 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, இலங்கை இராணுவம் ஆடிய கொலைவெறி தாண்டவத்திற்கு, இந்த விஷயம் தெரியாமல் டியூஷனிற்கும் தேவாலயத்திற்கும் வேலைக்கும் போக வீதியில் இறங்கின சனங்களும் சம்பவ இடத்திற்கருகில் வீடுகளில் இருந்த சனங்களும் நூற்றுக்கணக்கானோர் இரையானார்கள்.


ஜூலை 25, திங்கட்கிழமை கொழும்பில் இனக்கலவரம் வெடித்தது. இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சில நண்பர்களின் நினைவுகள் பதிவுகளாக


"இராமகிருஷ்ண ரோட் topலிருந்து சிவப்பு tshirt உம் நீல சாரமும் உடுத்த ஒருத்தன் சிங்களத்தில் சத்தமா கத்திக்கொண்டு பெரிய வாளோடு எங்களை துரத்தி கொண்டு ஓடி வந்தான்" ரமோஷன்


"கண்டி நகர் எரியிறதை Trinity College hostelலிருந்து பார்த்து கொண்டிருந்தேன். என்ன நடக்குது என்று விளங்கேல்ல. சிங்கள நண்பன் ஒருவன் கொட்டியா வந்திட்டுது என்று கத்தினான். நான் அவன கேட்டேன் கொட்டியா வந்தா ஏன் இடத்தை கொழுத்துறாங்கள் ? கலைக்க வேண்டியது தானே ?. அவன் சொன்னான்..அடோ இது தெமல கொட்டியா ஓய்.. அன்றைக்கு தான் தமிழ் புலிகள் இருப்பதை அறிந்தேன்" நிமலன்


"எனக்கு முன்னால போய்க்கொண்டிருந்த காரை நிற்பாட்டி, ஆக்களை இழுத்து அடி அடியென்று அடிச்சு போட்டு திரும்ப அவங்களை காருக்குள்ள போட்டு காரை பெற்றோல் ஊத்தி கொழுத்தினாங்கள்" யசோ மாமா


"எங்கட வீட்டு கண்ணாடி dining table பெரிய சத்தத்தோடு உடைபடுவது பக்கத்து வீட்டில ஒளிஞ்சிருந்த எங்களிற்கு நல்லா கேட்டுச்சு. அதற்கு பிறகு ஒவ்வொன்றா எல்லாத்தையும்..எல்லாத்தையும்.. எல்லா சாமானையும், வீட்டையும் உடைச்சாங்கள்" தாரிணி


"இராமகிருஷ்ண மிஷனில் ஒளிச்சுக்கொண்டு யன்னல் இடுக்குக்கால பார்க்க.. மிஷனிற்கு நேர் முன்னுக்க இருந்த என்ட வீடு எரியிறதை என்ற கண்ணால பார்த்தேன்" சிவக்குமார் அண்ணா


" பம்பலபிட்டி இந்துவிலிருந்து vanல் seatற்கு அடியில ஒளிஞ்சு கொண்டு வெள்ளவத்தைக்கு போகேக்க, பம்பா பாலத்தடியில சிங்களவங்கள் மறிச்சிட்டாங்கள். அன்றைக்கு நான் விலாசமா ஸீட்டில இருந்திருந்தனென்றா நீ இளையராஜாவை சந்திருச்திருக்க மாட்டாய்" ஐங்கரன்


யாழ்ப்பாணத்திலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட நாங்கள் அயல் அட்டையிலிருக்கிற பெடி பெட்டைகளோடு சேர்ந்து தாயம், கிளி பூர், ஜஸ் பைஸ், கிட்டி புல், எட்டு கோடு, கப்பல் கோடு என்று ஒரே விளையாட்டு தான். இரவில பெரியாட்கள் 6.30க்கு மாநில செய்திகள், 7.15க்கு ஆகாஷவாணி, 7.45க்கு வெரித்தாஸ், 9.00 மணிக்கு லங்கா புவத், 9.15க்கு தமிழோசை என்று கேட்பினம். கொழும்பில பெரிய பிரச்சினை தமிழாக்களிற்கு சிங்களவன் அடிக்கிறான் என்று விளங்கிச்சு. 8.30ற்கு  எல்லோரும் சேர்ந்து செபமாலை சொல்லி கொழும்பாருக்காக ஜெபித்தோம்.


பிரச்சினை முடிஞ்சு schoolற்கு போனால் நிறைய புதுப் பெடியள் நிற்கிறாங்கள், கொழும்பில இருந்து வந்த அகதிகளாம். நாலு வருஷமா ஒன்றா இருந்த classஐ வேற பிரிச்சிட்டாங்கள் என்ற கடுப்பு ஒரு பக்கம் கொச்சை தமிழ் கதைக்கிற இவங்கட இம்சை இன்னொருபக்கம்.. வாழ்க்கை வெறுத்துச்சுது. முழு schoolற்கும் Jubilee hallல் assembly. ஆனந்தராஜா மாஸ்டர் Englishல், புது பெடியளை அரவணைக்க சொல்லி சொன்னது விளங்கிச்சு. Interval நேரங்களில் பழைய அண்ணாமாரும் புதுசா வந்த அண்ணாமாரும் ஆவேசமா கதைப்பினம்.. கொந்தளிக்கீனம் என்பது மட்டும் புரிந்தது. அப்படி துடித்த அண்ணாமார் பிறகு போராளிகளாகவும் புலம் பெயர் செயற்பாட்டாளர்களாகவும் மாறினார்கள் என பின்னாளில் அறிந்தேன்.


புதுசா வந்த பெடியளில் சிலது மண்டைக்காய்கள், அப்ப வந்த term testல் கலக்கினாங்கள். வேற சிலர் யாழ்ப்பாண பெடியளோடு படிக்கேலாது என்று வெருண்டாங்கள். உண்மையில் வந்த பெடியளால எங்கட தரமும் பாடசாலையின் தரமும் ஒரு படி உயர்ந்திச்சு...படிப்பிலும் விளாயாட்டிலும் பழக்க வழக்கங்களிலும். 
St John'sன் brain gain. 


32 வருஷமாகியும் 83 இனக்கலவரத்தின் வடு இன்னும் மாறல்ல, நீதியும் கிடைக்கல்ல, விடிவும் பிறக்கல்ல. இப்ப பழைய குருடி கதவை திறடி கதையா 1977 இலக்ஷன் மாதிரி 2015 இலக்ஷன். அப்ப தமிழரசு கட்சி தமிழர் விடுதலை கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டு  தமிழீழத்திற்கான தேர்தல் என்டுச்சு தமிழ் காங்கிரஸ் அதை எதிர்த்து இலக்ஷன் கேட்டுச்சு. இப்ப என்னென்டா தமிழ் காங்கிரஸ் தமிழ் இரு தேசம் ஒரு நாடு கோஷத்தோட முன்னணி என்ற பெயரிலும் அடுத்த வருஷம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற முழக்கத்தோடு தமிழரசு கட்சி கூட்டமைப்பு என்ற பெயரில் மீண்டும் களமாடினமாம்....மாற்றம் வேணுமாம். அவைக்குள்ள தான் மாற்றம் வந்திருக்கு.. சனம் பாவம்.


மற்ற பக்கத்தால மாற்றம் வந்து இலக்ஷனில மகிந்த திரும்பி வந்தா அரோகரா அல்லேலூயா தான். கஜனும் சுமந்திரனும் பாராளுமன்றத்தில உணர்ச்சி பொங்க விவாதிக்கிறதை Facebookல் like பண்ணிப்போட்டு comment அடிக்க வேண்டியது தான். ATC சுமாவை கூப்பிட்டு ஆப்ப பார்ட்டியும் TCC கஜனை கூப்பிட்டு ஒடியல்கூழ் பார்ட்டியும் வைக்கலாம். 


காலம் உருண்டோடியது
கனவுகள் கலைந்தன
கட்சிகளும் மாறின
விடியல் மட்டும் புலப்படல்ல.


கர்த்தரே முருகா 
எங்களிற்கு எப்ப விடியும் ?

Friday, 17 July 2015

நஞ்சுண்ட காடு
1980களின் நடுப்பகுதியில் இந்திய அரசு விடுதலை இயக்கங்களிற்கு ஆயுத பயிற்சி அளிக்க தொடங்கிய காலத்தில் பயிற்சி முகாம் வீடியோக்கள் எல்லா இயக்கங்களாலும் பிரச்சாரத்திற்கு பாவிக்கப்பட்டன. அதில் அணி அணியாக போராளிகள் ஓடுவார்கள், நெருப்பு வட்டத்திற்குள்ளால் பாய்வார்கள், குறி தவறாமல் சுடுவார்கள்,  மகிழ்ச்சியாக தென்படுவார்கள்.

1990களில் விடுதலைப் புலிகள் தங்களது தாக்குதல்களை கமராவிற்குள் பதிவு செய்ய நிதர்சனத்தில் ஒரு பிரிவையே உருவாக்கினார்கள். அந்த தாக்குதல் வீடியோக்கள் தாக்குதல்களை தலைமை மீளாய்வதற்கும்,  புதிய தாக்குதல்களை திட்டமிடவும் பயன்பட்டதோடு, வரலாற்று பதிவாகவும், தாயகத்தில் ஆட்சேர்ப்பிற்கும்,  புலத்தில் நிதி சேகரிப்பிற்கும் பயன்பட்டன. யுத்த களங்களில் புலிகள் ஈட்டும் வெற்றிகளிற்கு பின்னால் கடுமையான பயிற்சியும் திட்டமிடலும் வேவுத்தகவல்களும் இருக்கும். "கடுமையான பயிற்சி இலகுவான சண்டை" என்பது புலிகளின் தாரக மந்திரங்களில் ஒன்று.

1990களின் விடுதலைப்புலிகளின் பயிற்சி பாசறையை களமாக, மையமாக வைத்து போர்க்கால இலக்கியமாய் குணா கவியழகனின் "நஞ்சுண்ட காடு" எனும் நாவல் உருப்பெறுகிறது. 

"அன்னை மடியின் இதமான சூட்டிலிருந்து விலகியவர்கள்
என்னவானார்கள் ? 
எங்கு போனார்கள் ? 
என்ன செய்தார்கள் ? 
என்ன எண்ணினார்கள் ? " 
என்ற ஈரோஸ் இயக்கத்தின் தலைவரும் புலிகளின் மூத்த உறுப்பினருமான க.வே. பாலகுமாரனின் முன்னுரை களம் அமைக்க 13 புதிய போராளிகளுடன் கன்டர் வாகனம் நம்மை "கத்தியால் வெட்டியெடுக்ககூடிய இருளில்" நஞ்சுண்ட காட்டுக்குள் அழைத்து செல்கிறது.

"புயலோடு போராடும் புலியாகின்றனர்" 

பற்றிக்ஸிலிருந்து ஒருத்தன், யாழ் இந்துவின் மைந்தனொருவன், கம்பஸிலிருந்து இன்னொருத்தன், கத்தோலிக்க பாதிரியாராய் ஆசைப்பட்டவன், வெளிநாடு சென்று திரும்பியவன், கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து ஒருத்தன், வசதியான குடும்பத்திலிருந்து பிறிதொருத்தன் என்று பாசறையில் ஒரு குடிலிற்குள் வாழும் போராளிகளின் பின்புலத்தையும் அவர்கள் ஏன் ஆயுதம் தரித்த போராளிகளானார்கள் என்பதையும் கவியழகன் பதிவு செய்யும் விதம், அற்புதம். 

"கொஞ்சப்பேர் சுமக்கிறதும், 
சுமக்கேக்க இழப்பு வாறதும், 
தோத்துப்போறதும் 
சுமக்காதவனாலதானே"

பயிற்சியில் வதைபடும் போராளிகளின் வலியையும் தவறுக்காக அனுபவிக்கும் கடுந்தண்டனைகளையும் வாசிக்க வாசிக்க மனம் வலிக்கிறது. தானும் சக போராளிகளும் உடலிலும் உணர்விலும் அனுபவித்த வலிகளை, வலி குறையாமல் வாசகனில் கவியழகன் சுமையிறக்கி இருக்கிறார். தவறு செய்பவர்களை காட்டி கொடுப்பவர்கள், அதிலும் காட்டி கொடுப்பவனை காட்டி கொடுப்பவர்கள், திருந்திய படலங்கள் புலிகள் இயக்கத்தின் போராளிகளிற்கிடையிலிருந்த உறவின் வலுவை, அந்த வலிமையான உறவின் ஆரம்ப புள்ளியை விபரிக்கிறது.

"நேசம் உறவுருவதால் வருவதில்லை, 
நினைவுறுவதால் வருவது"

வருச்சுக் கதிரையிலிருந்து வானம் பார்த்து ஏணைபிறை ரசித்தவண்ணம் சுகுமாருடனான உரையாடல்கள் வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்தவை, ஆனால் தத்ரூபத்தை இழக்காதவை. இந்த வகை உரையாடல்கள் நானறிந்தவரை ஈழத்து போரிலியக்கங்களில் புதுமை. கவியழகனின் ஆழமான சிந்தனையாற்றலும் அதை சொல்லாடலாக்கிய விதமும், அழகு.

"வானத்தின் நிலவு ஏணை மாதிரி தூங்குது, 
இதில ஏறி படுக்க எத்தனை பேருக்கு தெரியும்"

சுகுமாரின் அக்கா, நாவலில் வியாபித்து நிற்கும் கதாபாத்திரம்.  கடைசிவரை நாவலில் பயணிக்கும் சுகுமாரின் அக்கா, மண்ணின் வேதனைகளை அவமானங்களை அவநம்பிக்கைகளை இழப்புக்களை உணர்வுகளை தூக்கிச்செல்லும் ஒரு பாத்திரமாக செதுக்கப்பட்டிருக்கிறார். டவுனில அக்கா தொள்ளாயிரத்து ஜம்பது ரூபாய்க்கு வாங்க முடியாமல் போன சட்டை, கைக்கெட்டும் தூரத்தில் தெரிந்த இனத்தின் விடிவை ஏனோ நினைவூட்டுகிறது.

"விடுதலைக்கு தக்க விலை தான் கொடுக்கலாம். 
அதற்கு மேலால் கொடுக்க முடியாது. 
கொடுக்க கூடாது.
கொடுக்க நேர்ந்தால் நாங்கள் தோற்றுவிடுவோம்"

தமிழீழ விடுதலை போராட்டத்தை பதிவு செய்ய பல ஆக்கங்கள் உருப்பெற்றன, பெற்றுக்கொண்டும் இருக்கின்றன. கவியழகனின் நஞ்சுண்ட காட்டிற்கு இந்த படைப்புகளில் ஒரு தனியிடம் நிட்சயம் கிடைக்கும். அவர் தெரிவு செய்த களம், சிந்தனையின் ஆழம், சொல்லாடிய விதம் என்பன கவியழகனின் நஞ்சுண்ட காட்டை தனித்துவமிக்க படைப்பாக்கியிருக்கிறது.

"உன் மரணம் விடுவிக்கப்படாது விடின்,
மனுக்குலத்தில் தமிழ் சாதி மண்ணாகிப்போகும் காண்"


நஞ்சுண்ட காடு:
நெருடல், 
சுமக்காத சுமையின் நெருடல்,
நிறைவேறாத  கனவின் நெருடல்
நெருடல்,
Friday, 10 July 2015

தங்கராஜா டீச்சர்

திருமதி பத்மா தங்கராஜா, 
பொடியள் வைத்த பட்டபெயர் சுடுதண்ணி, அது அவவுக்கும் தெரியும், எனக்கு டீச்சர். கொழும்பு இந்து கல்லூரியில் கொமர்ஸ் இராஜ்ஜியத்தை பல ஆண்டுகள் கட்டி மேய்த்து பலரை ஆளாக்கிய பெருமைக்குரியவர்.

என் வாழ்க்கையை புரட்டி போட்டதில் டீச்சரிற்கு பாரிய பங்குண்டு. தன்னம்பிக்கை ஊட்டி, எனக்காக வாய்ப்புக்களிற்கு கதவுகளை அடித்து திறந்து, வாழ்க்கைக்கு வழிகாட்டிய டீச்சரை கொழும்பிற்கு எப்ப போனாலும் மறக்காமல் சந்திப்பேன். டீச்சர் இன்னும் மாறவில்லை, என்னை இன்னும் A/L பொடியன் மாதிரி தான் நடத்துவா.. 

கொழும்பு இந்துவில் முதலாவது மாதம், Russian Embassy நடாத்திய quiz போட்டியில் கல்லூரி அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒரு நாள் டீச்சிரிடம் கதைக்கும் போது பரி யோவான் கல்லூரி quiz teamல் நானிருந்ததை சொல்ல, மேல் மாகாண தமிழ் பாடசாலைகளிற்கிடையிலான quiz போட்டியில் பங்குபற்றிய கல்லூரி அணியில் ரமோ, மொழியனுடன் எனக்கும் இடம் கிடைத்தது. அந்த போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வழிவகுத்தது. 

ஒருமுறை தேசிய மட்ட போட்டிக்கான விண்ணப்பத்தை எடுத்து கொண்டு sign வாங்க, school நேரம், பிரேமதாச தந்த துணியில் தைத்த school uniformல், பினாவின் (Principal) officeற்கு போக, அவர் "நீர் இந்த schoolல் தான் படிக்கிறீர் என்று எனக்கெப்படி தெரியும்" என்று பேய்க்கதை அலட்ட, டீச்சரிடம் தஞ்சமடைந்தேன்.  "நீ ஏனடா அந்த விசரனிட்ட போன்னீ" என்று விண்ணப்பப்பத்திரத்தை பறித்துக்கொண்டு போய் Vice Principal வேலுப்பிள்ளை மிஸ்ஸிட்ட sign வாங்கித்தந்தா.

இன்னொரு நாள் அமலனிற்கு "செங்கோல்" கிருஷ்ணமூர்த்தி (கிமூ) மாஸ்டர் பிரம்பால விளாசிப்போட்டார். கிமூ மாஸ்டர்  பிரம்போட சுத்திரதால, செங்கோல் அவரிற்கு பட்டபெயர். கிமூ மாஸ்டர் middle school வாத்தி, அவர் upper school அமலனிற்கு, அதுவும் அவன் prefect, எங்கட maradona வேற, அடித்தது மானப்பிரச்சினையாகிட்டுது. உடனடியாக அமலன் தலைமையில் மத்தியகுழு (பண்டா, தேவா, நித்தி, ராஜூ, சதா) கூடி strike அடிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பண்டா கதவு கண்ணாடியை உடைத்து சங்கொலி முழங்க தேவா "செந்தமிழ்" வார்த்தைகளால் போரிற்கு அறைகூவல் விடுத்தான். கொமர்ஸ்காரர் வகுப்பை துறந்து வெளியேற..பினாவும் கிமூவும் 100 அடி தூரத்தில பம்மினம்...அடுத்த கட்ட நடவடிக்கைக்கு திட்டம் தீட்டினமாம்.

இதற்கிடையில் யாரோ டீச்சரிற்கு தகவல் சொல்ல, டீச்சர் ஆஜர். பினாவையும் கிமூவையும் ஒரு பார்வை (முறைப்பு ?) பார்த்திட்டு பெடியளிட்ட வாறா. "என்னடா நடக்குது இங்க", அமலன் "மிஸ் கிமூ என்னென்று என்னில கை வைக்கலாம்" என்று சொல்லி வாய் மூடல்ல.. பளார்.. பளார்.. அமலனிற்கு கன்னத்தில் ரெண்டு அறைகள் ... பார்த்துக்கொண்டிருந்த எங்களிற்கே மின்னிச்சு.."போங்கடா உள்ளுக்க.. நான் பார்த்து கொள்ளுறன்". Strike came to a peaceful end.. கிமூ அதுக்கு பிறகு எங்கட வகுப்பு பக்கம் வாறல்ல..

இன்னொரு நாள் வகுப்பில டீச்சர் சொன்னா "அடேய் உவளவை கொன்வன்ற் காரியளிற்கு பின்னால மட்டும் போயிடாதீங்கடா, கடற்கரையில கொண்டு போய் விட்டிடுவாளவ". (கொழும்பு கொன்வன்றை தான் சொன்னவ). நாங்க நினைச்சம் கடற்கரைக்கு போனால் நல்லது தானே, அதுவும் குடையோட. அந்த doubtஐ அடுத்த கிழமை clear பண்ண வெளிக்கிட, டீச்சர் சொன்னா "லூசாடா உங்களிற்கு,  உவன் 90batch சூர்யா கடலுக்க பாய்ந்தது உந்த கொன்வன்ற் பெட்டை நயன்தாரா பேய்க்காட்டினதால". அதுக்கு பிறகு எங்களிற்கு கொன்வன்ற் பெட்டையளை கண்டால் பேய்ப்பயம்.. நம்புங்கடா

அதே டீச்சர் A/L சோதனை முடிந்து resultsக்கு காத்திருந்த நேரம் தன்ட வீட்ட கூப்பிட்டு எனக்கும் வசந்தனிற்கும் கொன்வன்ற் கலைவிழாவிற்கு 100 ருவாய் டிக்கட் தந்து அனுப்பினா. கதிரேசன் hallல் நாங்க ரெண்டு பேரும் 100 ருவாய் டிக்கட்டில விலாசமாய் போய் முன் சீட்டில் இருக்க, 25 ருவாய் டிக்கட்டிலிருந்த எங்கட குறூப் கண்டிட்டுது.  பிறகென்ன.. அவங்கள் கத்தின கத்தில நாங்களும் பின்வரிசைக்கு தாவிட்டோம். 

எங்கட A/L சோதனைக்கு ஒரு வருஷத்திற்கு முதல் டீச்சர் சொன்ன ஆரூடம் "இந்த classல இருந்து அடுத்த வருஷம் 4 பேருக்கு 4A கிடைக்கும்". அந்த காலத்தில commerceல் 2A வாறதே சாதனை. நடந்து முடிஞ்ச Term testல் கஜோவையும் கிரிஷாந்தனையும் தவிர மிச்ச எல்லோரும் முக்கி முனகிக் கொண்டு நிற்கிற நேரம், யாரும் அவ சொன்னதை கணக்கெடுக்கல்ல.

Withdrawals exams அந்த முறை 3 paperற்கு காசு வாங்கிட்டு 2 தரம் வச்சாங்கள். கொழும்பு இந்து papers எல்லாம் high standard, final papersஸை விட கடினம், சைவ மங்கையர் (அதான் Hindu ladies) பெட்டையள் எல்லாம் போட்டோ கொப்பி கேட்டுதுகள், கொன்வன்ற் பெட்டையளிற்கு யாராவது ஒரு அம்பி கேட்காமலே குடுத்திருக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்த சென் ஜோன்ஸ் பேப்பரெல்லாம் ஜுஜூப்பீயா தெரியுது. எனக்கு logic பாடத்தில படுமோசமான marks. "ரம்போ" ராஜரத்தினத்தோட வேற எனக்கு ஒரு சின்ன கொழுவல், அவரிட்ட டியூஷன் போகாததால. டீச்சர் என்னை கூட்டிக்கொண்டு ராஜரத்தினத்தினம் மாஸ்டரின்ட officeக்கு போறா.. "Sir இவனிற்கு logicல் marks காணாது, ஒருக்கா help பண்ணி விடுங்கோ". ரம்போ அவருடைய trade mark நக்கல் சிரிப்போட "அவன் தான் என்ன விட திறமான வாத்திட்ட படிக்கிறானே".. இடைமறித்த டீச்சர் "உந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்க தான் இவனிற்கு உதவோணும்".

அதற்கு பிறகு மணித்தியாலத்திற்கு 100 ரூபாய் வாங்கிற ராஜரத்தினம் மாஸ்டர் ஒரு மாதம் தன்ட வீட்ட கூப்பிட்டு ஒரு சதம் வாங்காமல் past papers, marking schemes எல்லாம் தந்து rapid coaching தந்தார். marking schemesஐ அச்சடிச்சு செல்வநாயகம் மாஸ்டர் ஒத்த ருவாய்க்கு விற்க, டீச்சர் தன்ட economic marking schemes எல்லாத்தையும் என்னிட்ட அப்படியே தந்திட்டா. பிறகு பாக்கியநாதன் மாஸ்டரிட்ட இருந்து Accounts marking schemeஐயும் எடுத்து தந்தா.

முதல் சோதனை பொருளியல் பகுதி 1. டீச்சர் தன்ட exam centreற்கு போக முதல் கொழும்பு இந்துவிலிருக்கிற பிள்ளையார் கோயிலிற்கு வெள்ளன வந்து எங்களிற்காக அபிஷேகம் செய்திட்டு போய்ட்டா. நாங்க வர ஐயர் திருநீறு சந்தனத்தோட நிற்கிறார்.. நல்ல சகுனம்.

அந்த வருஷம் முதல் தடவையாக கொழும்பு இந்துவில் கொமர்ஸில் 4A மட்டும் வரல்ல, mathsகாரரை விட அதிகமாக 4A வந்திச்சு. Commerce 2 - 1 Maths.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், 
அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

Thursday, 9 July 2015

ஓ காதல் கண்மணிஓ காதல் கண்மணி
 No mouse & ஒரு பிளேன் டீ.சுஹாசினி அக்காக்கு பயந்து mouse பிடிக்காமல் (iPhone ல் விரலால்) இந்த பதிவை, ரஜீஷன் சொன்ன பிளேன் டீ குடித்து கொண்டு வரைகிறேன் (விமர்சனம் எழுத தம்பி Jeyakumaran Chandrasegaram ம் நண்பன் Rajeeshun Arudchelvam ம் இருக்கினம்)
மெளனராகம், 1986ல் யாழ்ப்பாணத்தில் deckல் பார்த்த முதல் மணிரத்னம் படம். ஆனா "மன்றம் வந்த தென்றல்" விளங்கினது 1990களில் உருத்திரா மாவத்தையில், அது வேற கதை. அதுக்கு பிறகு சென்சார் பண்ணாத "ரோஜா" 1994 ல் தெஹிவளை கொன்கோட்டில் பார்த்தது தொட்டு எல்லா மணி (அவர் வசனத்தை சுருக்கலாம், நாங்க பெயரை சுருக்க கூடாதா) படமும் தியேட்டர் தான் என்று ஞாபகம்.
எல்லா மணி படத்தலேயும் எனக்கு மூன்று விஷயம் பிடிக்கும், ஒரு விஷயம் இடிக்கும். பிடித்தது கொல்லும் ரஹ்மானின் இசை, லயிக்கும் காதல் காட்சிகள் மற்றது அழகாக entry குடுக்கும் Train. மெளனராகம் தொட்டு திருடா திருடா, உயிரே, ராவணன் இப்ப OKK வரை கட்டாயம் கோச்சி வரும். இடிக்கிற விஷயம் மணி போறபோக்கில எங்கட போராட்டத்தை பற்றி எறிஞ்சிட்டு போற பீக்குண்டு (உ+ம்: ஆயுத எழுத்தில் வாற செல்வநாயகம்).
ஓ காதல் கண்மணி.. பிடிக்கும் எல்லா விஷயமும் அளவுக்கு அதிகமாக இருக்கும், இடிக்கும் விஷயமில்லாத மணியான மணிரத்னம் படம். மணிரத்னம், ரஹ்மான், வைரமுத்து, ஶ்ரீராம் என்ற திரைக்கு பின்னிருந்து மிளிரும் சூப்பர் கூட்டணி படைத்திருக்கும் கல்யாண சமையல் சாதம் (உரும்பிராய் பங்கு ஆட்டு இறைச்சி கறியும் menu வில் இருக்கு)
நம்மை மீண்டும் ஒரு முறை காதலிக்க தூண்டும் காதல் காட்சிகள், திரைக்கதையோடு இழையும் பாடல்கள், அழகுக்கு மெருகேற்றும் ஒளிஓவியம், ருசித்து ரசித்த sharp ஆன வசனங்கள், அள்ளிப் பருகிய தீந்தமிழ் கவிவரிகள் என்று ஓ காதல் கண்மணியை.. முடிக்க வார்த்தைகள் தேடுகிறேன்.
ஓ காதல் கண்மணி - குளிர் மழையில் என் காதல் கண்மணியோடு (Englishல் டார்லிங்) ஒரு hot pepper omelette சாப்பிட்ட அனுபவம்

Friday, 3 July 2015

பறந்தாலும் விடமாட்டேன்1996ம் ஆண்டு என்று ஞாபகம், Central Bank அடி விழுந்து Colombo கொஞ்சம் tension ஆக இருந்த நேரம். யாழ்ப்பாண அடிபாடு அறம்புறாமா நடந்து ஒபரேஷன் ரிவிரெச யாழ்ப்பாணத்தை விழுங்கிட்டுது. ஆனா இயக்கம், "குருவிகளை"..அதான் புக்காரா, அவ்ரோ, ஹெலிகளை SAM-7 ஏவுகணையால சுட்டு விழுத்திக்கொண்டிருந்த காலம்..
(மாட்டை மரத்தில கட்டிட்டான்... )
அந்தகாலம் கல் தோன்றி மண் தோன்றா காலம் மாதிரி
Computer தோன்றி email தோன்றா காலம்
Phone தோன்றி mobile தோன்றா காலம்.
Internet, Facebook WhatsApp இல்லாத இருண்ட யுகம்.
(அப்படியா ? அதிசயம், ஆச்சரியம்.. )
ஒரு நாள் மத்தியானம் Union Placeல் இருக்கிற YWCAல் சாப்பாட்டிட்டு திரும்பி வர receptionist சொல்லுறாள், "your pilot friend came to see you. நான் திடுக்கிட்டு போனேன் "I don't have any friend who is a pilot". அவள் விடேல்ல, "no no.. He is a pilot.."
(He is sexy too:)
மேசைல வந்திருந்து தலையை பிச்சுக்கொண்டு யோசிக்கிறன். யாரடா அவன் ? அங்கும் இங்கும் நடக்கிறன்.. என்ன இழவுடா
(BGM: டங்க மாரி ஊதாரி track)
காலும் ஓடல்ல கையும் ஓடல்ல
பக்கத்தில் இருக்கிற சிங்கள பெட்டை வேற என்ன பார்த்து சிரிக்குது.. சிலிர்க்குது.
(சிரிக்குது ok, why சிலிர்க்குது ?
Flowல வந்திட்டுது.. விடுங்க பாஸ்)
அப்பதான்...
அப்பவே தான்..
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
Intercom அடிக்குது
(Phoneஐ எடுடா சோமாரி)
எடுத்தால்.. ஹலோ.. ஒரு sweet female voice. குஷ்பு மாதிரி ஒரு cute voiceல்...
"Kohomatha"... என்று கிளு கிளுப்பாய் கேட்குது,
(சிங்களம் இவ்வளவு இனிமையா ?)
நான் புல்லரிச்சு போனேன்
(நல்லா சொறிஞ்சு விட்டிருக்கலாமே)
கை கால் எல்லாம் நடுங்குது.. ஜன்னி வந்த மாதிரி உடம்பு வெட வெடக்குது..
(என்னமா பில்டப் பண்றான்)
ட்ரிங் ட்ரிங் அடிச்சது, நாலாம் மாடியில வேல செய்யுற கீதா குமாரசிங்க
(அந்த நாலாம் மாடியிலிருந்து சார்ஜன்ட் குமாரசிங்கவா ?)
கீதாஞ்சலி அனட் முதியான்சிலாகே ராஜபக்‌ஷ குமாரசிங்க is her full name.. Short and sweetஆ நாங்க கீதா கீதா என்று கூப்பிடுவம்.
(கெதியா முடி மச்சி, வேலைக்கு போகணும்)
கீதா நடந்தால் ஒபிஸ் அசையாது.. கீதா நின்றாலென்றால் ஒபிஸ் சுழறும்..அவ்வளவு வடிவு.. நயன்தாராவை விட கொஞ்சம் கம்மி.. அழகில.. ஆனா சமந்தாவை விட தூக்கல்..
(அவளா அந்த pilot ?.....எருமைக்கும் பொறுமை வேணும்)
ஆனா அந்த கீதாக்கு என் மேல ஒரு கண்.
(போடாங்.. சத்தியமா முடியல்லடா)
நான் வேற tensionல இருக்க இவள் "வேற" tensionஐ தாறாள். அந்த tension இந்த tensionஐ tension ஆக்க, ரெண்டு tension உம் சேர்ந்து என்னை tension ஆக்க, Tension ஓ tension
(நீ சொல்லுடா தங்கம்.. வேலைக்கு sick அடிச்சிட்டன்)

அந்த இடத்தில நாங்க விடுறம்
INTERVAL.... இடைவேளை

(Tea coffee...tea coffee..வட வட வட.. இஸ்ஸோ வட,  ஐஸ் பழம்..choc ஐஸ்)

மீண்டும் திரை விலகுது.. படம் தொடங்குது
கீதா கேட்கிறாள்.. Are you free this evening", நான் "why ? No.. I cant.. I am searching for a pilot friend.. May be.. No.. Yes" என்று உளறுறன்.
(கேட்கிறது தமிழீழம், பார்க்கிறது சிங்கள சரக்கு)
அவள் கேட்டாள் " shall we go to galle face.. I bought a nice big blue umbrella". நான் சொன்னன் "sorry I am going to the Colombo campus library to meet my Girl friend"
(அங்க வைச்சான்டா.. டுவிஸ்ட்)
கீதா விசர் வந்த மாதிரி கத்த, நான் receiverஐ வச்சிட்டன். Keep the umbrella clean...
(Umbrella எதுக்கு? இவர் இன்னும் கறுத்திடுவார்.. அதுக்கு தான்)
Back to square one now.. இடக்கும் முடக்குமா நடக்கிறன். சிங்கள பெட்டை சிரிக்குது..சிலிர்க்குது..Etc etc
(BGM: மன மன mental மனதில் track)
திரும்பவும் அடிக்குது.. போன்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
எடுக்கட்டா.. விடட்டா
(கீதா தான் அடிக்கிறாள்.. எடுடா)
யோசிச்சு முடிச்சு.. மெதுவா.. மெதுவா.. Receiverஐ எடுத்தா..
ஙொய்.....கட்டாயிடுச்சு..
(சப்பா.. கொசு தொல்லை தாங்க முடியல்ல)
Intercomஐ அமத்தி "பியதாச, தே எக்கக் கேன்ட, Dilmah.. ஹரித.."
அப்ப தான் freshஆ யோசிக்கலாம்..
(வருது வாய்க்குள்ள)
திரும்பவும் அடிக்குது.. போன்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
பசிலன் 2000 ஷெல் சத்தம் மாதிரி கேட்குது..
யோசிக்கேல்ல.. பக்கென்டு எடுத்திட்டன்..ஆமிக்காரன், புலிகள் பசிலனை குத்த பங்கருக்குள் பாய்ந்த மாதிரி.
மறு முனையில்.." ஹலோ".. ஆம்பள குரல்.. கம்பீரமாக.. ஆனால் கண்ணியம் கலந்து..
(அவனா..நீ ?)
"மச்சான், நான் மொழியன்.. Lunch time officeக்கு வந்தனான்.. நீர் எங்க சுழற்ற போனீர் ஐசே"
இயற்பெயர்..அருள்மொழி
செல்லமா..மொழியன்.
Air Lankaவில் Chief Accountant.
Officeக்கு Air Lanka uniform போடுறவன்.
Air Lanka uniform, Pilot uniform மாதிரி இருக்கும்
சுபம்..


FBயில் வந்த மக்கள் விமர்சனம்..

"இப்படி ஒரு கதையை நான் கேட்டதே இல்லை"
"இது ஒரு one line story magic"
"நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்"
"மணிரத்தினம் movie சாயலடிக்குது"
"சூப்பர் டூப்பர் ஹிட்"
"இது ஒரு கொரியன் பட கொபிகட்"