Thursday, 31 December 2015

வாறாயோ 2016ஏ வாறாயோ


ஒவ்வொரு வருடமும் கடக்கும் போதும் கடந்து போகும் வருடத்தின் நிகழ்வுகள் மனத்திரையில் உலாவர இரு வேறு உணர்வுகள் எம்மை ஆட்கொள்ளும். அந்த வருடத்தில் இனிமையான பொழுதுகளை நினைக்கையில் நம்மையறியாமல் புன்சிரிப்பு அரும்பும். அந்த ஆண்டின் துன்பியல் நிகழ்வுகளை, குறிப்பாக நம்மை விட்டு பிரிந்தவர்களை, நினைக்கையில் பெருமூச்சொன்று வெளிகிளம்பும். 


ஈழத்தமிழர்களிற்கு கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தந்த வலியுடனும் அடுத்த ஆண்டில் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் தான் கடக்கும். 2015 செப்டெம்பரில் ஜநா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட போர் குற்ற விசாரணை ஆவணம், எம்மினத்தின் மீது காலங்காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்த சர்வதேச ஆவணம். எனினும் போர் குற்றங்களை உள்ளக பொறிமுறையில் விசாரிக்க சர்வதேசம் இணங்கியது தமிழினம் சந்தித்த இன்னொரு மாபெரும் ஏமாற்றம்.


இன்னும் 20 வருடங்களிற்கு இலங்கையை ஆட்சி செய்து, அந்த தீவில் தமிழர்களின் அடையாளத்தை துடைத்து எறிந்துவிடுவார் என்று கணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவிற்கு வந்ததுடன் 2015 ஆரம்பமாகியது. மஹிந்வை அகற்றிய "மாற்றத்தில்", தமிழர் தரப்பு விவேகத்துடன் செயற்பட்டு மாற்றத்தின் பங்காளியாகியது. ஓகஸ்ட் மாத பொதுத்தேர்தலில் "மாற்றம்" உறுதி செய்யப்பட, தமிழர் தாயகத்தில் கூட்டமைப்பின் வெற்றியும் தொடர்ந்தது. தமிழ் தேசியத்தில் பற்றுறுதி கொண்ட தரப்பு தவறான சக்திகளின் சேர்க்கையால் வெற்றிபெறமுடியாமல் போனது தமிழினித்தின் சாபக்கேடே. 


ஆண்டினிறுதியில் உதயமாகியுள்ள தமிழர் பேரவை செலுத்தப் போகும் தாக்கத்தை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த பேரவை சிவில் சமூகத்தின் ஒன்றிணைவாய் மட்டும் அமைந்திருந்தால் அதன் நோக்கங்களில் துலங்கும் தூய்மை அதன் உருவாக்கத்திலும் செயற்பாட்டிலும் புலப்பட்டிருக்கும். 


2015 தலைவர் ரஜினிகாந்த் படம் வராத ஆண்டாக இருந்தாலும் தமிழ் மணம் கமிழ்ந்த கமலின் உத்தம வில்லனும் மணிரத்தினத்தின் இளமை ஊஞ்சலாடிய ஓகே கண்மணியும் நயன்தாராவின் ஜந்து படங்களும் வெள்ளித்திரையை ஆக்கிரமித்தன. புன்னகையின் மகிமையையும் எடை குறைத்தலின் அவசியத்தையும் உணர்த்திய "இஞ்சி இடுப்பழகி"யும் பிள்ளைகளை தனித்துவத்துவமாக வளர்வதின் சிறப்பை உணர்த்திய "பசங்க 2"உம் மனதில் இடம்பிடித்தன. இந்த ஆண்டின் சிறந்த படம் கமலின் கண்கள் நடித்த பாபநாசம் தான்.


ரஹ்மானின் "மென்டல் மனதிலும்" அனிருத்தின் "தங்கமே உன்னைத்தானும்" ஈழத்து சிறுமி கரீஷ்மா ரவிச்சந்திரன் பாடிய "காதல் கிரிக்கட்டும்" செவிக்கு விருந்தளித்தாலும் சிம்புவின் "பீப்" பாடல் தான் அதிகம் பேசப்பட்டது. 


ஓஸ்ரேலியா ஆக்கிரமித்த உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளில் விறுவிறுப்பு இருக்கவில்லை. சிரிலங்கா அணியின் இரு ஜாம்பாவான்களான மஹேலவினதும் சங்கரகாரவினதும் இளைப்பாறுதல்கள் அந்த அணியின் ஏழரை சனியின் தொடக்கமாக பார்கலாம். IPL போட்டிகளிலிருந்து சென்னை அணி நீக்கப்பட்ட முடிவு வலி தந்தது..இனி IPLம் கசக்கும். இந்திய கிரிக்கட் அணியில் புதியவர்களின் வரவையும் தோனியின் சரிவையும் 2015 பதிவுசெய்தது.


யாழ் பரி யோவான் சமூகம் தனது பேரபிமானத்திற்குரிய ஆசிரியர் ஜீவானந்தம் மாஸ்டரையும் கந்தசாமி மாஸ்டரையும் இழந்தது 2015ல். யாழ் மத்திய கல்லூரிக்கெதிரான Big Match கிரிக்கட் ஆட்டத்தை பரி யோவான் அணி வென்றதும் 2015ல்.


இந்த ஆண்டு வாசித்த புத்தகங்களில் ஆப்கானிஸ்தான் பிரச்சினையை மையமாக கொண்ட The Kite Runner என்ற புத்தகம் என்னை நிறையவே பாதித்தது. அதேபோல ஒரு புத்தகம் எமது பிரச்சினையை மையமாக வைத்து தம்பி ஜேகே எழுதவேண்டும் என்பது எனது அவா. 


அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வித்தியாதரனின் எழுத்தாயுதம் ஒரு புஸ்வாணமாய் போனது ஏமாற்றம். ஆரவாரமில்லாமல் வெளியாகிய கவியழகனின் "நஞ்சுண்ட காடு" ஆழமான கருத்துக்களுடன் மலர்ந்த புதுமையான போரிலக்கியம். ஜெயமோகனின் "காடு" ஒருவகை வெறியோடு வாசித்த நாவல். ஏன் வாசிக்கிறோம் என்று தெரியாமல் காட்டுக்குள் எங்களை உள்வாங்கி கிரியோடு எங்களையும் அலையவைத்து கிறங்க வைத்த படைப்பு "காடு". இன்றும் அந்த தேவாங்கும் குட்டப்பனும் நீலியும் மிளாவும் நினைவில் உலாவுவார்கள்.


இந்த ஆண்டு வாசித்தவைகளில் என்னை கவர்ந்த வசனங்கள் இரண்டு.
"கனவு காண்பது மனதின் இயற்கை. கனவை உடைப்பது விதியின் இயற்கை" கடல்புறாவில்   சாண்டில்யன்

"நேசம் உறவுருவதால் வருவதில்லை, 
நினைவுறுவதால் வருவது" நஞ்சுண்ட காட்டில் கவியழகன்


தனிப்பட்ட வாழ்க்கையில் ஏழாண்டுகளிற்கு பின்னர் வேலை மாறியது புதிய உற்சாகத்தையும் வாழ்வை முழுமையாக நோக்கும் ஒரு புதிய பரிமாணத்தையும் தந்தது. ஆண்டின் நடுப்பகுதியில் பம்பலாக எழுதிய சில பதிவுகளிற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து "கனவும் நினைவும்" எனும் Blogல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எழுத வைத்தது. பரி.யோவான் காலங்கள் எழுத தூண்டி , தவறுகளை சுட்டிகாட்டி தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்துவது தம்பி ஜேகே. தம்பி தமிழ்பொடியன், அரசியல் கருத்து வேறுபாடுகளிற்கப்பால், கிடைத்த அரிய உறவு. Blog தொடங்க ஊக்கப்படுத்தியது தெய்வீகன். என்னை குட்டியும் தட்டியும் எழுத வைப்பது ரமோ, மொழி, நிமலன். பாமினி அக்கா என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடுவா. எல்லாத்துக்கும் மேல, எழுதும் போது எவ்வளவு தான் அலுப்பு கொடுத்தாலும் என் எழுத்துக்களை ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் என்ற மனிசி தாற விருது தான் என்னுடைய ஓஸ்கார்.


எம்மினத்தை பொறுத்தவரையிலும் 2015 நம்பிக்கை தரும் ஆண்டாக அமைந்தது. அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஆக்கிமிக்கப்பட்ட நிலங்களின் விடுவிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் ஏமாற்றமளித்தன. அதேவேளை சம்பூர் நிலம் விடுவிக்கப்பட்டதும், 2009ற்கு பின் நிலவிய இறுக்கம் தளர்ந்து சனம் கொஞ்சம் மூச்சுவிட ஒரு யன்னல் திறந்ததும் 2015ல். 


இந்த மெதுவான நல்ல ஆரம்பம் 2016ல் வேகம் பெற்று எம்மினத்திற்கு நீதியும் கெளரவவுமான சமாதான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது நம்மெல்லோரினதும் பிரார்த்தனையாக இருக்கட்டும். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் எம்மினத்திற்கு 2016 நற்செய்தியை கொண்டுவரும் என்பது என் நம்பிக்கை.

நம்பிக்கை தானே வாழ்க்கை !


Thursday, 17 December 2015

CIMA: சோதனையான சோதனைநான்கு stages அல்லது கட்டங்களை கொண்ட CIMA பாடநெறியில் இரண்டு கண்டங்கள் இருந்தது. Stage 2ல் முதலாவது கண்டம், அதை ஒரு மாதிரி தாண்டி வந்தால், Stage 4 என்ற மாபெரும் கண்டம் காத்திருக்கும். அதையும் தாண்டிட்டா வாழ்க்கை இறக்கை கட்டி பறக்குதடா அண்ணாமலை சைக்கிள் (கரியரில் குஷ்பூவோடு) மாதிரியாகிடும்.


CIMA சோதனைகள் மே மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் நடக்கும். 1993 நவம்பரில் புலிகளின் ஒபரேஷன் தவளையில் பூநகரி முகாம் சிக்க, கொழும்பு காலி வீதியில் அம்புலன்ஸ் வண்டிகள் ஊர்வலம் போகும். செக் போயின்டுகளில் நிற்கிற பொலிஸ்காரனும் ஆமிக்காரனும் கடுப்பில நிற்பாங்கள், எப்ப உள்ளே தூக்கி போடுவாங்களோ தெரியாது என்ற டென்ஷனோடு பரீட்சை எழுதிய காலங்கள் அவை. 


1994 இறுதியில், நாங்கள் முதல் மூன்று கட்டங்களையும் தாண்டி நாலாவது stageஐ எட்ட சந்திரிக்கா அம்மையார் ஆட்சிகட்டிலேறி புலிகளோடு யுத்த நிறுத்தம் செய்யவும் சரியாயிருந்தது. கொஞ்சம் நிம்மதியாக பயமில்லாமல் போய் வந்து படிப்பில் கவனம் செலுத்த கிடைத்த காலகட்டம். 


ஒவ்வொரு கட்டத்திலும் நான்கு பாடங்கள். Stage 4ல் MDM என்ற ஒரு பாடம் மிகக் கடுமையானது. Calculus, Algebra அது இது என்று கணிதத்தை மையமாக வைத்து பின்னப்பட்டது இந்த Management Accounting Decision Making என்ற பாடம். கணித பொறிமுறைகளை அடிப்படையாக வைத்து முகாமைத்துவ முடிவுகள் எட்டுவது சம்பந்தப்பட்டது. உயர்தரத்தில் என்ஜினியராகப் போய் சூடு வாங்கின மொக்கு கொமர்ஸ்காரருக்கு இந்த பாடம் ஒரு கண்ணிவெடி.


இயக்கச்சி விழுந்தா ஆனையிறவு கைக்குள்ள, ஆனையிறவை மீட்டா யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைக்கலாம் என்றமாதிரி, MDM தாண்டிட்டா Stage 4 பாஸாகிடலாம், CIMA முடிச்சிட்டா நல்ல கம்பனியில காரோடு வேலை கிடைத்து வடிவான வெள்ள பெட்டையா பார்த்து மாட்டி வாழ்க்கையில் செட்டிலாகிடலாம் என்று நாங்களும் கணக்கு போட்டோம்.


செவ்வாய்கிழமை பரீட்சை..செவ்வாய் என்றால் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். சோதனைக்கு ஒரு நாளிற்கு முன்பாக புத்தகங்களை மூடிவைத்து விடுவேன். திங்கட்கிழமை கொச்சிக்கடை அந்தோனியாருக்கு போய் ஒரு மெழுகுதிரியும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலிற்கு ஒரு கற்பூரமும்  கொளுத்திவிட்டு நாரஹன்பிட்டிய லைப்ரரிக்கு போய் பெடியளிற்கும், தெரிந்த ஒரு சில பெட்டைகளிற்கும், all the best சொல்லிவிட்டு,  பொலவில் இருக்கும் பெட்டிகடையில் தேத்தண்ணி குடித்தேன். 


கிரிஷாந்தன் படு டென்ஷனில் புத்தகத்திற்குள் முகம் புதைத்திருந்தான். அவனை முதுகில் தட்டி Risk Management பகுதியில் சில ஆண்டுகளிற்கு முந்தைய வருட பரீட்சையில் வந்திருந்த ஒரு கேள்வியையும் அதற்கான பதிலையும் சுட்டிகாட்டி "இதை படிடா மச்சான், நாளைக்கு வந்தாலும் வரும்" என்று சொல்லிவிட்டு நகர்கிறேன்.


செவ்வாய் விடிந்ததும் கொழும்பு கம்பஸ் நண்பன் ஜெகானோடு இரண்டு பஸ் பிடித்து போய் பொரளை Aquinas கல்லூரியில் அமைந்திருந்த பரீட்சை நிலையத்தை அடைகிறேன். கல்லூரியின் பிரதான மண்டபம் தான் இலங்கையில் Stage 4 பரீட்சை நடக்கும் ஒரே பரீட்சை நிலையம். மண்டத்தில் ஒரு 10 நீண்ட வரிசைகள் நிரம்பி வழிய பரீட்சார்த்திகள். ஒவ்வொரு வரிசையிலும் 100 பேர், பத்து தர பத்து ஆயிரம் பரீட்சார்த்திகள். இலங்கையில் அப்போதைய Stage 4 Pass rate பத்து வீதம், ஆக இந்த ஆயிரத்தில நூறு பேர் தான் தேறப் போறம்.. என்று நினைத்து முடிக்க தலை சுத்திச்சு..எச்சில் முழுங்கிக் கொண்டேன்.


ஒவ்வொரு பரீட்சைக்கும், அம்மாக்கு யாரோ சாத்திரி சொல்லி, அதை நானும் நம்பி தவறாமல் எடுத்து போகும் பச்சை கலர் Reynolds பேனாவையும் இரண்டு கறுப்பு கலர் Reynolds பேனாவையும் கல்குலேட்டரையும் மேசையில் அழகாக அடுக்கி வைத்து விட்டு பரீட்சைத்தாளை பயபக்தியாக வாங்குகிறேன். இந்த பச்சை கலர் Reynolds பேனா உயர்தர பரீட்சையிலிருந்து ஒவ்வொரு பரீட்சையிலும் என்னோடு பயணித்த lucky charm. இன்று என்னுடைய படிப்றையில் ஓய்வெடுக்கின்றது. 


கண்ணை மூடி கர்த்தரை கும்பிட்டு ஆறு பக்க வினாத்தாளில் பார்வையை செலுத்துகிறேன். வழமையாக நாலு பக்கங்கள் தாண்டாத வினாத்தாளை புரட்டி வினாக்களுக்கான புள்ளிகள் அடிப்படையில் நேர ஒதுக்கீடு செய்து விட்டு வினாக்களை விடையளிக்கும் ஒழுங்கை தீர்மானிக்க வினாக்களை வாசிக்க தொடங்குகிறேன். 


பரீட்சைகளில் வினாவை விடையளிக்கும் ஒழுங்குமுறை என்பது மிகமுக்கியமானது, ஏனெனில் அந்த ஒழுங்கு அந்த மூன்று மணித்தியாலங்களில் பரீட்சார்த்தியின் தன்னம்பிக்கையையும் சிந்திக்கும் திறனையும் நிர்ணயிக்கவல்லது. ஒரு பரீட்சையின் முடிவை மாற்றியமைக்க வல்ல வல்லமையை இந்த திட்டமிடலால் அடையலாம்.


முதலாவது வினா.. ஒரு காருக்குள் ஒரு ரொக்கட் என்ஜினை புகுத்தி அந்த காரை சகாரா பாலைவனத்தில் ஓட்டி ஏதோ ஒரு கின்னஸ் சாதனையை முறியடிக்கும் ஒரு புரஜக்ட், அதில் உள்ள செலவுகள் அது இது என்று மூன்று பக்க நீள கேள்வி. எல்லாம் Physicsம் Mathsம்.. வாசிக்க மண்டை காய்ஞ்சு போச்சு. நேரத்தை பார்த்தால் அரைமணித்தியாலம் வாசிக்கவே செலவாகிட்டுது. ஆனா கேள்வி என்னவென்று ஒரு மண்ணும் விளங்கேல்ல. தலைல கை வைத்துவிட்டேன்.


"கப்பலே கவிழ்ந்தாலும்
கட்டின மனைவியே கைவிட்டாலும்
நாடியில் கை வையாதே" பரி யோவான் ஆசிரியர் ஜீவானந்தம் மாஸ்டர் சொல்வது நினைவில் வந்தது. 


திரும்பி சுத்தி பார்த்தா கிரிஷாந்தன் படு வேகமாக காலாட்டி கொண்டு ஒரு கையை நாடில வைத்து கொண்டு பேப்பரை பாரத்து கொண்டிருக்கிறான். அவன் காலாட்டிற வேகத்தில அவன்ட டவுஸர் கிழியுமோ என்று பயமாயிருந்தது. அவனும் இன்னும் எழுத தொடங்கேல்ல. 


மற்றப்பக்கம் கெளதமன் ஒரு நமட்டு சிரிப்போடு தலையை ஆட்டிகொண்டிருக்கிறான். நான் பார்க்கிறதை கண்டிட்டு "என்ன வீஈ..சர்ப் பேப்பர் செட் பண்ணியிருக்காங்க பிரகாஷ்" என்று முணுமுணுத்தது விளங்கியது. 


எனக்கு மூன்று வாங்கு முன்னால இருந்த என்னோட பஸ்ஸில வந்த கம்பஸ் ஜெகான் எழும்பி பேப்பரை மூடி வைத்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறுகிறான். சன்னமாக யாரோ ஒரு பெட்டை அழுவது கேட்கிறது. திரும்பி பார்த்தால்..முத்துப்பேச்சி என்ற முஸ்லீம் பெட்டை முக்காட்டில் மூக்கு துடைக்கிறா. "முசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி, உன் உசரம் பார்த்தே என் கழுத்து சுளுக்கி போச்சு" பாட்டு வந்த நேரம் அது. உயரமாக அழகாக இருந்த  நஸ்ரியா அந்த என்ற முஸ்லீம் பெட்டை ஒரு கடி முகூர்த்தத்தில் முத்துப்பேச்சியாகிட்டா. அவளை பார்த்து பார்த்து தான் எங்கட விஜயராஜனுக்கு அடிக்கடி கழுத்து சுளுக்கினது என்று பெடியள் சொல்லுவாங்கள்.


கண்ணை மூடி செபிக்க வெளிக்கிட்டா நான் காதலிக்கிற பெட்டையின் முகம் கண்ணுக்குள் வருது.  பரீட்சை முடிய அவளும் யாழ்ப்பாணம் வாராளாம் எப்படியும் அங்க வைத்து கேட்டு போடோணும்.. என் மனம் அரற்ற

"அடப்பாவி இது Stage 4 பரீட்சை நேரமடா, ரணகளத்திலும் உனக்கு காதல் கேட்குதா".. கர்த்தர் லைனில் வந்தார் 

"கர்த்தரே.. என்னை எப்படியாவது பாஸ் பண்ண வைத்திடும்" கெஞ்சுகிறேன் இறைவனிடம்

மறுமுனையில் மெளனம் பதிலாகிறது. சைவக்காரப் பெட்டைய காதலிக்கிறது கர்த்தரிற்கு பிடிக்கல்லயோ ?

"பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் இரட்சிக்கப்படுவதாக" கர்த்தரை மேவி, மேலிடத்தில்  தொடர்பெடுக்க முயல்கிறேன்.

"மகனே" கர்த்தர் மீண்டும் லைனில் வருகிறார். படு பிஸியாயிருக்கிறார், என்னை போல பல விசுவாசிகளின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கிறார் போல.

"இயேசுவே, என்னை காப்பாற்றும்" இறைவனிடம் சரணடைகிறேன்.

"டேய் மொக்கா" இயேசு டென்ஷனாகிவிட்டார்

"யு டூ ஜீசஸ்"...மனம் சொல்ல விரும்பியது.. சொல்லவில்லை

"கடைசி கேள்வியை வாசித்தியா" கர்த்தரின் குரலில் கடுப்பு வெளிப்படுகிறது

"முதலாவது கேள்விக்கு 45 மார்க்ஸ்.. அது வாசிக்கவே மூச்சு முட்டுது, அதில இருக்கிற ஒரு ம...." நான் மலைப்பிரசங்கம் செய்ய வெளிக்கிட இயேசு பொறுமையிழக்கிறார்.

"யாழ்ப்பாணத்தில் சந்திப்போம்" கர்த்தரின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. கர்த்தர் கடுப்பானது அவரின் குரலில் விளங்கியது.

கண்ணை திறந்து கர்த்தர் காட்டிய வழியில், கடைசி பக்கம் புரட்டி கடைசி கேள்வியை தடவினா சுளையாய் 25 மார்க்ஸிற்கு முதல் நாள் கிரிஷாந்தனிற்கு நான் சொல்லி விட்டு வந்த கேள்வி என்னை பார்த்து கண்ணடிக்குது. கறுப்பு Reynolds பேனையை எடுத்து விளாசத் தொடங்கினேன்...

பச்சை கலர் Reynolds பேனா புன்னகைத்தது !

Thursday, 10 December 2015

தேத்தண்ணிநாம் வளரும் நம்மோடு காலங்களில் ஒட்டிக்கொள்ளும் சில விஷயங்கள் காலங்கள் கடக்கும் போதும் சலிக்காமல் அலுக்காமல் எம்மோடு பயணிக்கும், தேத்தண்ணியும் அப்படித்தான். இன்னொரு விதமாக சொன்னால், தேத்தண்ணியின் சுவையும் நயன்தாராவின் அழகு மாதிரி..ரசிக்க ருசிக்க, ருசிக்க ரசிக்க மெருகேறிக்கொண்டேயிருக்கும், திகட்டவே திகட்டாது. 


வெள்ளைக்காரன் சிலோனிற்கு வந்து கண்டெடுத்த கறுப்பு தங்கம் இந்த தேத்தண்ணி. இறுதி யுத்தம் உச்சக்கட்டத்திலிருக்கும் போது Ceylon Teaயை புறக்கணிப்போம் என்ற கோஷம் எழுந்த போது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்த தவிப்பு தமிழ் கூறும் நல்லுலகம் அறியாதது. என்னைடைய அலுவலகத்தில் வேலை செய்யிற சைனாக்காரி எப்ப சீனா போகும் போதும் எனக்கு Premium China black tea பக்கற்றுகள் கொண்டுவருவாள். சும்மா முகஸ்துதிக்கு "it's wonderful" என்று சொல்லுவன், கருமம் அதை மனுசன் குடிப்பானா. 


படிக்கிற காலங்களில் அம்மா தேத்தண்ணி போட்டு கட்டிலிற்கு கொண்டுவந்து, "எழும்பி படிடா, காலம்பற படித்தா தான் மண்டைக்குள்ள நிற்கும்" என்று சுப்ரபாதம் பாடுவா. Laxspray போட்ட பால் தேத்தண்ணியில் இருக்கும் செழுமை Anchorல் இருக்காது. இது ரெண்டும் இலங்கை அரசு விதித்த பொருளாதார தடையால் ஆனையிறவு தாண்டாமல் விட, பசும்பால் தேயிலையுடன் இணைந்து கொண்டது. 


ஒபரேஷன் லிபரேஷன், ஒபரேஷன் பவன் காலங்களில் சங்கக் கடை வரிசையில் கால்கடுக்க நின்று சீனி வாங்கி தேத்தண்ணி குடித்த காலமும் இருந்தது. மணித்தியால கணக்காக வரிசையில் நிற்கையில் பழசுகள் தங்களுக்குள் கதைத்த அரசியலிலிருந்து அறிந்தவை ஏராளம். சங்கக் கடை சீனி இல்லாத நாட்களில் சக்கரையும் கருப்பட்டியும் கடித்து கொண்டு வாசல் படியிலிருந்து ப்ளேன் டீ குடித்த பொழுதுகள் இனிமையானவை.


கொழும்பில, அம்மம்மா ஒரு தேத்தண்ணி பிரியை. அவ போடுற தேத்தண்ணியை ரசித்து ருசித்து குடிக்கிற ஒரே ஆள் நான் தான். பாட்டு பாடிக்கொண்டே காஸ் அடுப்பில் தண்ணி கொதிக்க வைத்து தேயிலை வடியில் லாவகமாக வடித்து டம்ளரரில் ஆத்தி சுடச்சுட தேத்தண்ணி படிக்கிற மேசைக்கு வரும். டம்ளரரில் குடித்தால் தான் தேத்தண்ணி சுவை கெடாது என்ற சூட்சுமம் சொல்லித் தந்தது அம்மம்மா. இரவிரவா படித்த காலங்களில் நான் கேட்காமல் தானே எழும்பி ரெண்டு மூன்று தரம் தேத்தண்ணி போட்டு தாறதும் அம்மம்மா. 


கடையில் தேத்தண்ணி குடிக்க வெளிக்கிட்டது கொழும்பில் தான். வெள்ளவத்தை காந்தி லொட்ஜ் தேத்தண்ணியை யாரும் அடிக்க முடியாது. பசும்பாலில் நுரைதள்ள டம்ளரரில் கீழ ஒரு கிண்ணி வைத்து சூடு பறக்க பரிமாறுவார்கள். கிண்ணியில் இன்னொருக்கா ஆத்தி வாயில் வைக்க, இளையராஜா மெலடி மண்டைக்குள் கேட்கும். மைசூர் கபே தேத்தண்ணியில் டின்பால் கலப்பதால் அளவிற்கதிமான இனிப்பு தேயிலை சாயத்தின் சுவையை கெடுக்கும்.


சிலோன் இன்ஸிற்கு எதிர்புறம் இருக்கும் ஊத்தைகடை ப்ளேன் டீ அருமை. சின்ன கிளாசில் திறமான சாயத்தில் அளவான சீனி போட்டு தருவாங்கள். ஒரு குட்டி ரொட்டியோடு சேர்த்தடிக்க படித்த களைப்பு பறக்கும். அந்த ப்ளேன் டீக்கே பொக்கற்றுக்குள் காசில்லாமால், அன்றைக்கு காசுள்ள நண்பன் வரும்வரை காத்திருந்து ப்ளேன் டீ வாங்கி குடித்த காலமும் எங்கட குறூப்பில் இருந்தது. அந்த நினைவுகளால் எப்ப கொழும்பு போனாலும் காந்தி லொட்ஜில் பொக்கற்றுக்குள் காசோடதேத்தண்ணி குடிக்காமல் வாறதில்லை.


கொழும்பு கம்பஸ் கன்டீனில் குட்டி ப்ளாஸ்டிக் கப்பில் தேத்தண்ணி என்ற பெயரில் களனித்தண்ணி ஊத்துவாங்கள். காதலிக்கும் பருவமாயிருந்ததால் தேத்தண்ணி சுவையை மறந்து காதலியை ரசித்த பொழுதுகள், களனித்தண்ணியையும் ருசித்து குடித்த கணங்கள்.


CIMA Libraryக்கு போற காலங்களில் நாரஹன்பிட்டிய சந்தையில் இருந்த பெட்டிக்கடை தேத்தண்ணி திறம். அதிலும் காய்ச்சல் காலங்களில் இஞ்சி போட்ட ப்ளேன் டீ குடித்தால் காய்ச்சல் பறந்திடும். மூளையையும் உடலையும் உற்சாகமாக வைத்திருந்து எங்களை CIMA படிக்க வைத்ததில் நாரஹன்பிட்டிய பொல பெட்டி கடைக்கு ஒரு பாரிய பங்குண்டு.


கலியாண வாழ்க்கையில் மனிசியின் மூட், போட்டு தாற தேத்தண்ணியில் தெரியும். சீனியோடு சேர்த்து ஒரு கரண்டி காதலும் கலந்திருந்தால் தேத்தண்ணி அமிர்தமாகும். அமிர்தமாய் தேத்தண்ணியும் போட்டு "வாரும் படியிலிருந்து டீ குடிப்பம்" என்று ஆசையாய் கூப்பிட்டால், பாரதிராஜாவின் வெள்ளை சட்டை போட்ட டான்ஸிங் கேர்ள்ஸ் லல் லல் லா பாடிக்கொண்டு என்னை அழைத்து செல்வார்கள். சீனியே போடாமல் தேத்தண்ணி அநாதரவாய் மேசையில் நின்றால், ஆமி கோட்டைக்கால வெளிக்கிடப் போகுது என்று அர்த்தம்.


ஈபிகாரன்கள் பிள்ளை பிடித்து கொண்டு திரிந்த காலங்களில் நானும் தம்பியும் வீட்டில் அடைபட்டிருந்தோம். பாதுகாப்பு கருதி முன் கேட் ஆமை பூட்டு போட்டு பூட்டப்பட்டிருக்கும். ஒரு நாள் பின்னேரம் தம்பியை தேத்தண்ணி போட்டு தர கேட்டேன். அவன் "நீ தண்ணி சுட வை, கோப்பை கழுவு, நான் தேத்தண்ணி போடுறன்" என்ற ஒரு நியாயமேயில்லாத நிபந்தனை விதித்தான். எனக்குள் இருந்த தேத்தண்ணி விடாய் போராட்டத்தை தவிர்த்து சரணடைவை நோக்கி தள்ளியது.


அடுப்பில் பத்மவியூகத்தில் விறகடிக்கி, நடுவில் பொச்சு மட்டை செருகி, சூர்யா நெருப்பு பெட்டியில் தீக்குச்சி உராசி அடுப்பு மூட்டி கேத்தில் வைத்து தண்ணி கொதிக்க வைக்க தொடங்கினேன். அடுப்பு ஊதி நெருப்பை கூட்ட குனிய.. பலத்த சத்தத்தோடு கிரனேட் வெடிக்கும் சத்தம் ஒன்றும் பிறகு சரமாரியாக துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. சடக்கென்டு கீழ விழுந்து படுத்திட்டன். மதிலிற்கு வெளியே சிலர் சப்பாத்து காலோடு ஓடுற சத்தமும் தொடர்ந்து துப்பாக்கிகளின் சூட்டு சத்தமும் ஒலித்து கொண்டிருக்கிறது.


கொஞ்ச நேரத்தில் எங்கட கேட்டை திறக்க யாரோ முயல்வதும் ஹிந்தியில் கத்துவதும் கேட்கிறது.  தம்பி அறைக்குள் நான் குசினிக்குள், ரெண்டு பேரும் அசையாமல் இருக்கிறம். பக்கத்து வீட்டு அன்ரியின் குரலும் கேட்குது. கொஞ்ச நேரத்தில் கேட்டுக்கு மேலால சப்பாத்து கால் பாயுற சத்தம் கேட்குது. அடுத்த சில நொடிகளில் குசினி வாசலில் இந்தியன் ஆமிக்காரன் துவக்கை நீட்டி கொண்டு நிற்கிறான்.. ஏதோ சொல்லுறான்.. தேத்தண்ணி விடாயில் கதி கலங்கி நிற்கிற எனக்கு ஒன்றும் விளங்கேல்ல

"சலோ சலோ" மட்டும் விளங்குது.

எழும்பி, வெறுமேலோடு கையை தூக்கி கொண்டு நிற்கிறன். அவன் கிட்ட வந்து என்னை வெளியே போகச்சொல்லி தள்ளுறான். இனியென்ன.. கொண்டுபோய் சந்தியில குந்த வைப்பாங்கள், காட்டி கொடுக்க தலையாட்டி ஈபிகாரன் வருவான். வெறுமேலோடு ரோட்டிற்கு போனா அம்மாட்ட அடிவிழும் என்று மண்டையில் பொறி தட்ட

"Sir.. Shirt please" அரை குறையை அரை குறை இங்லீஷில் கெஞ்சினேன்..

"சப்கே குப்கே ஆப்தே சலோ சலோ" என்று சொன்ன மாதிரி கேட்டுது

"Sir.. Me Mohinder Amaranath Fan.. Please.. Shirt.. Please"

ஹிந்தி கதைக்கிறவன் எல்லாம் டெல்லிகாரனாயிருப்பான் மொஹிந்தர் அமரநாத்தை பிடிக்கும், எனக்கு இரக்கம் காட்டுவான் என்று நம்பி அந்த அஸ்திரத்தை ஏவினேன்.

"ஆப்தே கியா ஹேய்.. சலோ சலோ" இந்த முறை அவன் கடுப்பானது விளங்கிச்சு.

பம்பாய்கார ரவி சாஸ்திரியை பிடிக்குமென்று இனி சொன்னால் என்னுடைய பம்மில இவன் தருவான், வெறுமேலோடு ரோட்டிற்கு போனதுக்கு அம்மா தருவா.. வாங்கிறது தான் வாங்கிறது ஏன் அந்நியனிடம் அடி வாங்குவான் என்று முடிவெடுத்து வெறுமேலோடு கைகள் தலைக்கு மேல் உயர்த்திய படி சந்திக்கு வந்தால், என்னை தவிர பிடிபட்ட என்னுடைய அயலண்டை நண்பர்கள் எல்லோரும் சேர்ட் போட்டிருக்கிறாங்கள். என்னை வெறுமேலோடு கண்டதும் அந்த ரணகளத்திலும் நக்கலாய் சிரிக்கிறாங்கள், அவங்களுக்கும் தெரியும் எனக்கு இன்றைக்கு வீட்ட பூசை இருக்கென்று.

இந்திய இராணுவத்தின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் சந்தியில் வெறுமேலோடு குந்தியிருந்து யோசிக்கிறன்

"திரும்பி போகேக்க தம்பி தேத்தண்ணி போட்டு வைத்திருப்பானோ ?"

Thursday, 3 December 2015

மொக்கு கொமர்ஸ்காரன்
1989 டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய எங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை நாட்டில் நிலவிய வன்முறை சூழ்நிலையால் 1990 மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. தெற்கில் ஜேவிபி பயங்கரவாதம் தலைவிரித்தாட வட கிழக்கில் ஈபிகாரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பும் படுகொலைகளும் தாண்டவமாடிய காலகட்டம்.

பரி யோவானில் withdrawals பரீட்சை 1990 பெப்ரவரி மாத கடைசியில் நடந்து, உயர் தரத்தில் கற்க விரும்பிய பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. எனக்கு commerce செய்ய தான் விருப்பம். வீட்டில அம்மா நான் என்ஜியனராகோணும், மொக்கங்கள் தான் commerce செய்வாங்கள் என்று தினம் தினம் கந்தசஷ்டி பாட, நானும் Maths படிக்க விண்ணப்பித்தேன். 

யாழ்ப்பணாத்தில் படித்தா ஒன்று டாக்குத்தராகோணும் என்ஜினியராகோணும் இல்லாட்டி அப்புகாத்தாகோணும், அப்பதான் சமுதாயம் மதிக்கும் என்ற காலங்காலமாக நிலவிய யாழ்ப்பாண சமுதாய எண்ணதின் பிரதிபலிப்பை என்னுடைய அம்மாவிலும் கண்டேன். O/L திறமா செய்யாதவன் தான் commerce படிப்பான், கம்பஸ் போகாதவன் தான் CIMA செய்து கணக்காளராவான்
என்பது யாழ்ப்பாண சமுதாயம் வகுத்த நியதிகள். 


1990 மே மாதம் இரண்டாம் தவணை தொடங்க, வாழ்வில் முதல் தடவையாக வெள்ளை நிற trouser போட்டு, சுண்டுக்குளி பெட்டையளை ஏறெடுத்தும் கொன்வென்ட் பெட்டையளை கண்ணிறையவும் பார்த்து விட்டு, Robert Williams மண்டபத்தில் இருந்த Maths வகுப்பிற்குள் நுழைகிறேன். இனி ஒழுங்கா படிக்கோணும் என்று சபதமெடுத்து கொண்டு முதல் வரிசை கதிரையில் இடம்பிடித்து அமர்கிறேன். முதலாவது பாடம் தொடங்க திரும்பி பார்த்தால் ரமோ, சேகரன், ஜெயரூபன் நவத்தி, நந்தீஸ், நவத்தார் உட்பட எல்லா மண்டைக்காய்களும் பின் வாங்குகளில் இருக்கிறாங்கள்.


க.பொ.த பெறுபேறுகள் வரும்வரை தனியார் வகுப்புகள் தொடங்க கூடாது என்று இயக்கம் கடும் உத்தரவு பிறப்பித்தது. வெக்டரும் பிரேம்நாத்தும் மணியமும் ஞானமும் இயக்கத்திற்கு பயத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை. இயக்கத்தின் உத்தரவிற்கான காரணம் எல்லோருக்கும் புரிந்திருந்தது, யாரும் எதிர்க்க துணியவில்லை.


முதலாவது மாத சோதனை நடந்தது. Pure Maths 70, Chemistry 55, Applied Maths 30, Physics 19. இந்த report ஓட வீட்ட போனா விறகு கொட்டன் உடையும் என்ற பயத்தில், இரவோடு இரவாக அம்மாவிற்கு தெரியாமல் அப்பரோடு கதைத்து Commerceற்கு மாற அனுமதி கேட்டு கடிதம் எழுதி வாங்கி கொண்டேன். 


அடுத்த நாள் காலை "கட்சி மாறிய" அண்ணனுக்கு Principal officeற்கு எதிரில் இருந்த Lower VI Commerce வகுப்பறையில் அமோக வரவேற்பு. 5ம் வகுப்பில் தேவதாசன் மாஸ்டர் படிப்பித்த அதே வகுப்பறை. "டேய் நீ என்ன பெரிய மண்டைக்காய் என்று நினைத்தோ அங்க போனீ" என்று தொடங்கி நக்கலும் நளினமும் பொங்கி பிரவாகித்தன.  தவணை ஆரம்பத்தில் 20ஆக இருந்த commerce வகுப்பில் 36ஆவது நபராக இணைந்து கொண்டேன். Chemistry கொப்பி Commerce கொப்பியாக பெயர் மாறியது.


முதலாவது பாடம் முடிய ஒகஸ்ரின் மாஸ்டர் register mark பண்ண வந்தார். "நீர் என்ன இங்க வந்திட்டீர்" என்று சிரித்து நக்கலடித்துவிட்டு, "இனிமேல் எக்காரணம் கொண்டும் commerceலிருந்து மாற மாட்டேன்" என்று registerல் சத்தியம் பண்ணி உறுதிமொழி எடுக்க வைத்தார். சத்தியபிரமாணம் முடிய, பரி யோவானின் யாப்பிற்கமைய commerce துறைக்கு பொறுப்பாளராக இருந்த கணபதிப்பிள்ளை மாஸ்டரிடம் அப்பரின் கடிதத்தை காட்டி அனுமதி கையெழுத்து வாங்கி வருமாறு அனுப்பப்பட்டேன்.


கணபதிப்பிள்ளை மாஸ்டர்.. ஆள் ஒல்லியாக இருந்தாலும் அவர் நடக்கிற நடையிலும் பேசிற பேச்சிலும் ஒரு terror இருக்கும். மத்தியானத்தில் Good afternoon சொல்லும்போதே எங்களுக்கு காலம்பற குளிருக்கு நடுங்கிற நடுக்கம் நடுங்கும். அவரிடம்  படித்ததில்லை என்றாலும் அவரிடம் பெடியள் கன்னத்தில் அறை வாங்கியதை பார்த்திருக்கிறேன், கன்னம் மின்ன இடியாய் அறை விழும். பரி யோவானின் பழைய மாணவனாக இல்லாதிருந்தும் பரி யோவானின் விழுமியங்களை கட்டி காத்து அடுத்த தலைமுறைகளிற்கு சேர்த்ததில் கணபதிப்பிள்ளை மாஸ்டர் ஆற்றிய பணி காலத்தால் போற்றப்பட வேண்டியது. 


மூச்சை பிடித்துகொண்டு toiletல் pump பண்ணிவிட்டு male staff roomற்குள் நுழைகிறேன். Staff roomலிருந்த easy chairல் சரிந்தபடி "Tigers getting ready for Eelam war II" என்ற தலையங்கமிட்ட Sunday Times வாசித்துக் கொண்டிருக்கிறார் கணபதிப்பிள்ளை மாஸ்டர். 

"Excuse me Sir...."

"Yeeasss".. கண்ணாடிக்கு மேலாக இரு கண்கள் என்னை சந்திக்கின்றன. பார்வையில் கடுமை குடிகொண்டிருக்கிறது..

"I.. Me.. I.. Like.." நாக்கு நர்த்தனமாடுது.

"உமக்கு என்ன வேணும்" ஆஹா தமிழ்

"சேர், நான்.. நான் commerceற்கு மாற போறன்".. தாடையை தடவுகிறேன். மீசை அரும்பிட்டுது, தாடி இன்னும் வளரவில்லை.

"Oh I see".. Sunday Timesஜ கலையாமல் மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்து உட்காருகிறார்.

"ஏன், why do you want to change" 

" Applied is very hard Sir.. Physics is very very hard Sir"

"Go and bring me your withdrawals report"

Officeற்கு ஓடிப்போய் பொன்னம்பலத்திடம் reportஜ வாங்கி வருகிறேன்.

"You have done well in Maths.. But science ... Who is your science teacher ?"

"பிரபாகரன் மாஸ்டர், சேர்"

"ஆ.. அவர் மார்க்ஸ் போடுறதில கஞ்சன்..அதான் குறைவா இருக்கு"

கடுமையாக யோசிக்கிறார்.. நாடியை தடவுகிறார்.. கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு முகட்டை பார்க்கிறார்.. ஏன் இவ்வளவு பில்டப் என்று தெரியாமல் நான் கதிகலங்கி நிற்கிறேன்..

"I can't send you to commerce class. You have done well in Maths and Scinece.. More so there are lot of குழப்படிகாரன்கள் in that class.. You will be spoiled"

" no sir.. Me good boy sir"

"ஐசே.. உம்மை பற்றி எனக்கு நல்லா தெரியும் ஐசே.. கதை விடாதேயும்.. அங்க ஏற்கனவே சிவகுமரன், யோகதாஸ், வாதுலன், சியாமள்ராஜ் என்று ஒரு குழப்படி கூட்டம் இருக்கு.. நீர் ஒரு innocent boy.. அவங்கள் உம்மை கெடுத்து போடுவாங்கள்"

"சேர்.. நான் இனி கவனமா படிப்பன் சேர்.. சத்தியமா அவங்களோட சேரமாட்டன் சேர்.. எனக்கு கம்பஸ் போகணும் சேர்"

"I don't want to spoil your future.. Who is your class teacher"

"ஓகஸ்ரின் மாஸ்டர், சேர்"

"ஜசே, I haven't approved you to change class yet, I mean your class teacher in Form V"

"கம்....கதிர்காமத்தம்பி மாஸ்டர், சேர்"

"I will discuss with him. You can now go and sit in the library until I make a decision"

லைப்ரரிக்கு போற வழியில் குறுக்க வந்த தெய்வங்களாய் கதிர்காமத்தம்பி மாஸ்டரும் மகாலிங்கம் மாஸ்டரும் எதிர்ப்பட்டார்கள். அழாக்குறையாக கணபதிப்பிள்ளை மாஸ்டர் ஆடிய ருத்ரதாண்டவத்தை விவரித்தேன். இருவரும் என்னை அழைத்து கொண்டு கணபதிப்பிள்ளை மாஸ்டரிடம் போனார்கள்.

"என்னடா, ரெண்டு திறமான அப்புகாத்துமாரை பிடித்து கொண்டு வாறாய்" கணபதிப்பிள்ளை மாஸ்டர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினார்.

"மாஸ்டர், அவனுக்கு கையெழுத்து போட்டு கொடுங்கோ, அவனுக்கு நான் guarantee" கதிர்காமத்தம்பி மாஸ்டர். 

"let him study what he likes" மகாலிங்கம் மாஸ்டர், என்னுடைய முதுகில் பலமாய் ஒரு தட்டு தட்டினார், நொந்திச்சு.

"Ok, if you both say so" கடுமை குறையாத புன்முறுவலுடன் கையெழுத்து போட்டு தந்தார் கணபதிப்பிள்ளை மாஸ்டர்.

Commerce வகுப்பில் எனக்கு கிடைத்தது கடைசி வரிசையில் வாங்கு, எனக்கு பக்கத்து வாங்கில் அருள்மொழி. பக்கத்தில் இருந்ததுமே Sports Star magazineஜ எடுத்து காட்டினான். கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. முன்வரிசையில் கருமமே கண்ணாக கிரிஷாந்தனும் கஜோபனும் நோட்ஸ் எழுதிகொண்டிருந்தாங்கள். 

மொக்கு Commerceகாரனாக எனது பயணம் ஆரம்பமாகியது...

இன்றும் தொடர்கிறது...

Thursday, 26 November 2015

மன்னிப்பாயா மாவீரா ?"நேசம் உறவுருவதால் வருவதில்லை, நினைவுறுவதால் வருவது" - நஞ்சுண்ட காடு நாவலில் கவியழகன்.

1989ம் ஆண்டு தமிழர் தாயக பிரதேசம் இந்திய இராணுவத்தினதும் ஒட்டு குழுக்களினதும் முழுமையான கட்டுபாட்டில் இருக்கிறது. அதே ஆண்டின் நடுப்பகுதியில் பிரேமதாச அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளிற்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி, இந்திய இராணுவம் வெளியேறுவதற்கான காலக்கெடு 31 மார்ச் 1990 என்று நிர்ணயிக்கப்படுகின்றது. காலக்கெடு விதிக்கப்பட்டதும் இந்திய இராணுவம் தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து மெல்ல மெல்ல வெளியேற ஆரம்பிக்கிறது. 


இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்களில் விடுதலை புலிகள் பகிரங்கமாக நடமாட தொடங்குகிறார்கள். நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் விடுதலை புலிகள் தங்கள் முதல் வித்தான லெப். சங்கர் வீரமரணமடைந்த நாளான 27 நவம்பரை மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். அதுவரையில் இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுடனான மோதல்களில் வீரமரணமடைந்த 1,307 போராளிகளை நினைவுகூரந்து தமிழர் விடுதலை வரலாற்றில்  முதலாவது மாவீரர் நாள் 1989ம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படுகிறது.


அதுவரை மண்டையன் குழுவின் அடாவடித்தனங்களால் மறைந்திருந்த விடுதலை புலிகளின் மாணவர் அமைப்பு (SOLT) மாவீரர் நாள் தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுக்க களமிறங்குகிறது. நீர்வேலியிலும் கிழக்கு அரியாலையிலும் செயற்பட்ட விடுதலை புலிகளின் பாசறைகளிலிருந்து சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன.


இரவில் அமுலிலிலுருந்த ஊரடங்கை பயன்படுத்தி இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அடக்கபட்டிருந்த யாழ் மண்ணின் உணர்வுகளை மீண்டும் எழுச்சி கொள்ளவைக்கும் வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் அவை.  முகத்தை துணியால் மூடி கட்டியபடி திடீரென்று சைக்கிள்களில் தோன்றும் விடுதலை புலிகளின் மாணவர் அணி சந்திகளிலும் சந்தைகளிலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விட்டு மறைந்து விடுகிறது.


யாழ்ப்பாண மாணவ சமுதாயத்திற்குள் ஏற்பட்ட இந்த எழுச்சியில் யாழ் இந்து கல்லூரி மாணவர்களும் யாழ் பரி யோவான் மாணவர்களும் பெரிதும் உள்வாங்கப்படுகிறார்கள்.  இந்திய இராணுவத்தினதும் மண்டையன் குழுவினரதும் சோதனை நடவடிக்கைகளில் நீலநிற யாழ் இந்து மாணவ அடையாள அட்டை வைத்திருப்போரும் சிவப்புநிற பரி யோவான் அடையாள அட்டை வைத்திருப்போரும் தனிக்கவனிப்பிற்கு உள்ளாகிறார்கள். 


யாழ்ப்பாணத்தின் முதலாவது மாவீரர் நாள் நிகழ்வு நீர்வேலியில் இடம்பெறுகிறது. இந்திய இராணுவத்தின் கடும் சுற்றி வளைப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முகத்தை துணியால் மூடி கட்டியபடி ஒரு மாணவன் ஆவேசமாக உரையாற்றுகிறான். உணர்ச்சி பொங்க உரையாற்றி கொண்டிருக்கும் போது ஒரு கணம் அவன் கட்டிய துணி அவிழ்கிறது. அந்த கணம் அவன் வாழ்வை அழிக்கப் போகிறது என்பதை அறியாமல், மீண்டும் துணியை கட்டிவிட்டு தனதுரையை தொடர்கிறான், அந்த உணர்வுமிகு மாணவன். 


அடுத்த வாரம், அவனது வீட்டை முற்றுகையிட்ட மண்டையன் குழுவினரால் அவன் கொண்டு செல்லப்படுகிறான். சக மாணவ செயற்பாட்டாளர்களை காட்டி கொடுக்க வைக்க அந்த மாணவனை மண்டையன் குழு கடுமையான சித்திரவதைக்குள்ளாக்குகிறது. அதற்காக முகத்தில் இரத்தம் சொட்ட சொட்ட கைகள் முற்கம்பியால் கட்டப்பட்ட நிலையில் குற்றுயிரும் குலை உயிருமாக பிரபல விஞ்ஞான ஆசிரியர் செல்வவடிவேல் நடாத்தும் தனியார் கல்வி நிறுவனமொன்றுக்கும் அழைத்து வரப்படுகிறான். 


சில நாட்களின் பின்பு துப்பாக்கி சன்னங்கள் துளைத்த அவனது உயிரற்ற உடல் வீதியோரத்திலிருந்து மீட்கப்படுகிறது. மீட்கப்பட்டது, யாழ் பரியோவான் 1989 கபொத உயர்தர பிரிவை சேர்ந்த தேவகுமார் எனும் மாணவனின் உடல். "அறிவாளி" என்ற பட்டபெயரால் அறியப்பட்ட தேவகுமார் உண்மையிலேயே ஒரு சிறந்த அறிவாளி. தேற்றங்களையும் சமன்பாடுகளையும் அநாயாசமாக நிறுவும், தீர்க்கும் ஆற்றல் படைத்த அதிபுத்திசாலி மாணவன்.  அவன் காவியமாகி சில வாரங்களில் வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளில் அவனது பெறுபேறு 3A C.

------------------------------
மாவீரர்களிற்கு எல்லோருமே இறப்பாலே உறவானவர்கள்" படலையில் ஜேகே

உண்மைதான், தனது இளமைக்கால இன்பங்களை துறந்து தனது தேசம் விடுதலை பெறவேண்டும் தன்னினம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக விடுதலை பயணம் சென்றவர்கள் எங்கள் மாவீரர்கள்.


விடுதலை பயணத்தில் அவர்கள் நடாத்திய வீரம் செறிந்த களங்கள் தமிழினித்திற்கு உயரிய அடையாளத்தையும் நம்பிக்கையையும் சுயகெளரவத்தையும் ஏற்படுத்தின.


எதிர்கொண்ட சவால்கள் இந்த அகிலமாக இருந்த போதிலும்கூட இலட்சியத்தை கைவிடாமல் இறுதிவரை போராடி காவியமான இலட்சிய புருஷர்கள் இவர்கள். 


இந்த மறவர்களின் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வதா அல்லது எமக்காக தம்முயிரை தியாகம் செய்தவர்களின் கனவை நனவாக்கும் வக்கற்றவர்களாய் வாழ்கிறோமே என்று வெட்கப்படுவதா ? 


எனக்காகவும் நம் இனத்திற்காகவும் எமது மண்ணின் விடிவிற்காகவும் உன் இன்னுயிரை தியாகம் செய்த சகோதரனே சகோதரியே,

என்னை மன்னித்து விடு..
உன்னோடு பயணிக்காமல் ஓடி ஒளிந்ததற்கு

என்னை மன்னித்து விடு..
உன் கனவுகளை நனவாக்கும் வல்லமையற்ற கோழையாக வாழ்வதற்கு

என்னை மன்னித்துவிடு.. 
நீ செய்த தியாகத்திற்கு நான் அருகதையானவனல்ல

மன்னிப்பாயா ? Friday, 20 November 2015

நனவான கனவு.. almost"கனவு காண்பது மனதின் இயற்கை. கனவை உடைப்பது விதியின் இயற்கை" கடல்புறாவில் சாண்டில்யன்  


சில மாதங்களிற்கு முன்னர் எழுதிய "கனவான கனவு" பதிவில் கிரிக்கட் ஆட்டம் சம்பந்தப்ட்ட நான் 1987ல் கண்ட ஒரு கனவை பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த கனவு almost நனவான கதை...இனி


நவம்பர் மாதம் முற்பகுதியில் பரி யோவானின் மெல்பேர்ண் v சிட்னி பழைய மாணவர்களிற்கிடையிலான வருடாந்த கிரிக்கட் ஆட்டத்திற்கு நண்பன் Angelஓட பயணித்தேன். மெல்பேர்ண் விமானநிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள T4ல் checkin பண்ணிட்டு உடனடியாக FBல் checkin பதிவு செய்தேன். கவிதை போன்ற வரிகளுடன் போர் முழக்கம் வேற..

புலியாக (வெறியோடு)
புலியில் (Tiger Air)
புலியோடு (Angel)
(காகித) புலி

சிட்னி நாளைக்கு நீங்க சட்னி !


வழமைக்கு மாறாக Tiger Air நேரத்திற்கு புறப்பட்டு நேரத்திற்கு தரையிறங்க,  சிட்னி விமானநிலையத்தில் எங்களுக்கு முதலாவது சோதனை காத்திருந்தது. மெல்பேர்ணிலிருந்து வந்த விமானத்திலிருந்த எல்லா luggageஜயும் காணோமாம். கிணற்றை காணோம் என்ற வடிவேலுவின்  கதையை ஞாபகப்படுத்தினார்கள் Tiger Air நிறுவத்தினர். WhatsAppல் கனடா பொடியள் இது சிட்னி OBAயின் சதி என்று குற்றம் சாட்டினார்கள்.

ஒரு மணி நேரத்திற்கு பின் வந்த luggageஐ இழுத்துக்கொண்டு போய் இன்னோரு அரை மணித்தியாலம் காய்ஞ்சு Airport trainல் ஏறினோம். புறப்பட்டு இரண்டாவது stationல் Train நின்றது, மீண்டும் புறப்படவில்லை. முதலில் சிக்னல் விழவில்லை என்று சொன்னார்கள். ஒரு 15 நிமிடங்களிற்கு பிறகு train trackல் Halloween பேய்கள் உலாவுவதாகவும், பேய்களை கலைக்க சிட்னி காவல்துறையின் சிறப்பு அதிரப்படை விரைவதாகவும் அறிவித்தார்கள். 

WhatsAppல் கொழும்பு பெடியளும் இது சிட்னி OBA Sexy Secy ஆதியின் சதி, அவன் தான் தாங்கள் வருவதை தடுக்க கூலிக்கு பேய்களை அமர்த்தியிருக்கிறான் என்று அடித்து சொன்னாங்கள். நாங்க ரெண்டு பேரும் கதம் கதம், all is well சொல்லிக்கொண்டோம்.


பேய் கலைக்க எவ்வளவு நேரம் ஆகுமோ என்று தெரியாமலிருக்க, டாக்ஸியில் எங்கட apartment போவம் என்று முடிவெடுத்தோம். Mascot stationற்கு வெளில வந்தா taxiஜ காணோம் ஆனால் taxi rankல் நீண்ட que. எங்களுக்கு முதல் queவில் நின்ற லண்டன் சிட்டுவுடன் பேச்சு கொடுத்து அவளோடு Taxi Pool பண்ணுவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டோம். Taxiயில் ஏறிய லண்டன் சிட்டுவை அவள் இறங்க வேண்டிய இடத்தில் விட்டு விட்டு எங்கட apartment வந்திறங்க சத்தியும் தேவாவும் சாப்பாட்டோட நிற்கிறாங்கள்.


-----------------------------
லண்டன் சிட்டு
168cm உயரமும் 21 அகவை வயதும் முழங்காலில் தையல் விட்ட ஜீன்ஸும் இறுக்கமான Shirtம் அணிந்த, லண்டனை பிறப்பிடமாகவும் சிட்னியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளை நிற வெள்ளைக்காரி. 
--------------------------------
அன்றிரவு எங்களோடு இணைந்த சிட்னி நண்பர்களோடு பாட்டோடு பம்பல் அடித்து ரொட்டியும் இடியப்பமும் சாப்பிட்டு விட்டு படுக்க போக நியூஸிலாந்தில் விடிஞ்சிருக்கும்.


ஞாயிற்றுக்கிழமை விடிய எழும்பி சூடா கோப்பி குடித்து விட்டு Team Busல் ஏற கொஞ்சம் பெருமையாகவும் கொஞ்சம் பதற்றமாகவும் இருந்தது உண்மை. மைதானத்தில் இறங்கி whitesற்கு மாற எங்கட அணியின் தலைவர் லக்கி என்கிற அஜித் நாணய சுழற்சியில் தோற்க, போன முறை மெல்பேர்ணில் நடந்த போட்டியில் தோற்ற சிட்னி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 


சிட்னி அணியின் தலைவர் ஜனகனும் எங்கட Col.ஆதியும் முதலில் களமிறங்கி நிதானமாக ஆடினார்கள். 8ஆவது ஓவர் முடிய, slipல் நின்ற என்னை warm up பண்ண captain உத்தரவு பிறப்பித்தார். நானும் கையை சுழற்றி, குனிந்து நிமிர்ந்து, படுத்து எழும்பி.. உடம்பை சூடாக்கினேன். First changeஆக என்னை விட்டிட்டு சிவா என்கிற பாபு கொண்டுவரப்பட்டது, ஏமாற்றமளித்தது. நானும் energy levelஜ காக்க warm upஜ தற்காலிகமாக நிறுத்தினேன்.  லக்கி இதை கண்டிட்டு கடுப்பாகிட்டான், "மச்சான், உன்னை எப்ப கூப்பிடுவன் என்று தெரியாது, கூப்பிடேக்க போடோணும், தெரிஞ்சுதோ" என்றான். 


சிவாக்கு அடி விழ தொடங்க, அவரை நிற்பாட்டி போட்டு, எனக்கு பந்து வீச அழைப்பு வந்தது. நானும் கர்த்தரையும் முருகனையும் துணைக்கழைத்து விட்டு பந்து வீச ஆரம்பித்தேன். தொடர்ந்து மூன்றாவது ஓவர் போட இளைக்க தொடங்கிட்டுது. லக்கி சொன்னான், "டேய், நல்லா போடுறாயடா, ஆறு ஓவரையும் போட்டு முடி".


நாலாவது ஓவரில் ஆதிக்கு outside the off stumpல கொஞ்சம் shortஆ ஒரு பந்தை போட அவன் அதை நேரா எழுப்பி அடித்தான். Mid offல் நின்ற சதீசன் அதை கோட்டை விட வாழ்க்கை வெறுத்தது. அதே ஓவரில் ஆதி run out ஆக Lal களமிறங்கினார். என்னுடைய ஜந்தாவது ஓவரில் முதல் பந்து ஒரு out swinger. Lal முன்னுக்கு காலை வைத்து விளையாட first slipல் லக்கி, இலகுவிலும் இலகுவான ஒரு catchஜ கோட்டை விட்டான். விட்டிட்டு ஒரு sorry கூட சொல்லாமல், மற்ற பக்கம் பார்க்கிறான். (அடப்பாவிகளா !)


ஆறாவது ஓவரின் கடைசி பந்தில் Angel ஒரு அருமையான catch பிடித்து எனக்கு ஒரு விக்கட்டையும் தனக்கு best fielder awardஜயும் சம்பாதித்தான். (நண்பேன்டா !) அவுட்டான அண்ணர் இரவு நடந்த Dinnerல் தன்ட மனிசியிடம் இவர் தான் என்னை அவுட்டாக்கினவர் என்று என்னை அறிமுகப்படுத்தி முறையிட்டதும், அக்கா என்னிடம் செல்லமாக கோபித்து கொண்டதும் சுவாரசியம்.  


சிட்னி அணி முக்கி தக்கி 130 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. மத்தியான சாப்பாடு எங்கட ஜொனியன் விமலன். சிட்னியின் தலைசிறந்த caterer. யாழ்ப்பாண கோழி குழம்பு, கத்தலிக்காய் பிரட்டல், பருப்பு இதோட நெத்தலி பொரியல். சாப்பாடு சூப்பர், நல்ல கட்டு கட்டினோம். 


மெல்பேர்ண் அணி அலட்டி 
கொள்ளாமல் ரன் குவிக்க தொடங்கியது. வழமை போல் லக்கி தான் விளாசினான். லக்கி அவுட்டாகி வெளியேற சதீசன் களமிறங்கினார். 10 ஓவர்கள் 10 ஓட்டங்கள் தேவை 5 விக்கட்டுக்கள் கைவசம். Angelம் சதீசனும் களத்தில்.. சிட்னி அணி ஆதரவாளர்கள் வெளியேற தொடங்கினார்கள். எதற்கும் ஒரு முன்னேற்பாடாக இருக்கட்டும் என்று நான் padஐயும் boxஐயும் மாட்டிக்கொண்டேன்.  

ஆதி போட்ட ஒரு loose ballஐ சதீசன் ஓங்கி அடிக்க boundaryல் யாரோ ஒரு பாவி catch கஷ்டப்பட்டு பிடித்தான். அவசர அவசரமாக Glovesஐ மாட்டிக்கொண்டு தலையில் cap ஓட களத்தில் கால் பதிக்க.. Phil Hughesம் சில வருடங்களுக்கு முன் கன்னத்தில் முத்தமிட்ட பந்தும் கண்ணுக்கு முன்னால் தெரிந்தது. திரும்பி போய் helmet மாட்டினால் நோண்டி என்று நினைத்து துணிச்சலுடன்(?) களமிறங்கினேன்.


என்னுடைய 1987 கனவில் வந்த அதே Angel பிட்சில் நிற்கிறான், "நீ நில்லு.. நான் பார்த்து கொள்ளுறன்" என்ற கனவில் வந்த அதே வசனத்தை சொல்லுறான்.. நான் batஆல் padஐ தட்டி.. இது கனவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி கொள்கிறேன். 


முதல் மூன்று பந்துகளை ஒருவாறு சமாளித்து நான்காம் பந்தில் ஒரு ஓட்டத்தை எடுத்தேன். மற்ற பக்கம் Angel அடித்து ஆட இன்னும் இரு ஓட்டங்களை எடுத்தோம். 7 runs to win. 


அடுத்த ஓவர் ஆதி போட்டான். நான் Angelக்கு சொன்னேன் "மச்சான், இவனுக்கு மட்டும் அவுட்டாயிடாதே, WhatsApp Groupல தாளிச்சிடுவான்". அந்த ஓவரில் மேலும் 1 ஓட்டமெடுத்து வெற்றி இலக்கை 6ஆக குறைத்தோம். 


அடுத்த ஓவரில் Angel தன்னுடைய signature shot.. ஒருவித uppish push drive விளாயாட short coverல் அண்ணன் ஒருத்தர் dive பண்ணி catch பிடித்தார். கனவு தகர்ந்தது. 


சிட்னி பழைய மாணவ சங்க தலைவர் கொடியோடு மைதானத்திற்குள் ஓடி வந்துவிட்டார். சிங்கன் மற்ற முனையில் சிந்தனையில்..மேட்ச் வென்றால் இன்றைக்கு சிங்கன் ஹீரோ.. 


இன்னும் 3 விக்கட்டுக்கள் கைவசம் 6 ஓட்டங்கள் தேவை 5 ஓவர்கள் மீதி. ஒரு கிரிக்கட் ஆட்டத்தில் ஹீரோவாக இதைவிட இலகுவான சூழ்நிலை யாருக்கும் அமையாது. அடுத்து ஆடவந்த Robert தர்கத்திற்குரிய முறையில் ஆட்டமிழக்க, ஆட்டம் இன்னும் சூடு பிடிக்க தொடங்கியது. நாங்க ஜொனியன்ஸ்.. umpire தீர்ப்பே மகேசன் தீர்ப்பாம், திரும்ப கதைக்க மாட்டோம்.


அடுத்த ஓவர் சிட்னி அணியின் அதிவேக பந்துவீச்சாளர் Lal போட ஆயத்தமாக.. Helment கேட்பமா என்று யோசித்தேன். இன்றைக்கு match வென்று ஹீரோவாகும் கனவு அந்த நற்சிந்தனையை தடுக்க.. "Leg stump please umpie"


முதல் பந்து swing & a miss. Lalன் வழமையான sledging.. "Batஐ பாவியும் ஐசே".. அடுத்த பந்து Yorker..ஒரு மாதிரி defend பண்ணினேன்.. Lal "பரவாயில்லை, உமக்கு bat பிடிக்க தெரியும் போல". முன்றாவது பந்து விண் கூவிச்சுது.. அப்படியே விட்டிட்டன்.. Lal கிட்ட வந்து தோளில் தட்டி விட்டு போனார். உடம்பில படாமல் விட்டது கந்தன் கருணை.


நாலாவது பந்தை gullyக்கும் slipsக்குமிடையில் place பண்ண பந்து boundaryஐ நோக்கி பறக்குது.. "ஓடு பந்தே ஓடு" என்று என் மனம் கதற, வெளில நின்ற எங்கட பொடியள் "run harder" என்று கத்துறாங்கள். Boundary lineற்கு கிட்ட பந்து மறிக்கப்பட மேலும் இரண்டு ஓட்டங்களால் வெற்றி இலக்கு அண்மிக்கிறது.


ஐந்தாவது பந்தை மறித்து ஆடிவிட்டு, மற்ற பக்கத்தில் நின்ற தேவாக்கு சொன்னேன் "மச்சான், bowler ஓட walk பண்ணு, பந்து batல பட்டா ஓடு".. கடைசி பந்து நல்ல lengthல் விழ, அழகா ஒரு cover drive.. Mid off fielderடம் நேரா போக நான் அரை பிட்சில் நிற்கிறன்.. தேவா அசையவேயில்லை.. "டேய் ஓடுடா" என்று கத்த.. தேவா run out

Last man Dinesh களத்திற்குள் இறங்கினார்..4 அழகிய ஓட்டங்கள் இன்னும் என்னை பார்த்து நயன்தாராவை போல் சிரித்தது. நெஞ்சம் மட்டும் "this is the day, the lord has made" பாட்டு பாடியது. அடுத்த ஓவர் ஆதியின் நண்பன் அசோக் போட்டார். சிட்னி அணி tensionல நிற்கிறாங்கள். Field set பண்ணவே ஐந்து நிமிடங்கள் எடுத்தாங்கள். 

முதல் பந்தை மறித்து ஆடினேன். அடுத்த பந்து short and wide ஆக off sideல விழ என்றைக்குமே நான் விளையாட தயங்கும் ஒரு shotஜ ஆடினேன்.. அவுட் ஆனேன்.. 


"கனவு காண்பது மனதின் இயற்கை. கனவை உடைப்பது விதியின் இயற்கை"


Thursday, 12 November 2015

CIMA காலங்கள்.. ஒரு Prelude
1992 August மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மத்தியான நேரம், 
A/L கடைசி சோதனை, அளவையியலும் விஞ்ஞானமுறையும் (Logic) பகுதி 2. Maths, Bio காரருக்கு சோதனை முடிஞ்சுது, Commerce காரருக்கு தான் இழுத்தடிச்சு போட்டாங்கள். போன இரு வருடங்கள் logic வினாத்தாள்கள் கடுமையாக இருந்ததில் கனபேருக்கு aggregate உதைச்சுது.


St.Peters பஸ் ஹோல்டிலிறங்கி வெள்ளை நிற பாடசாலை சீருடையில், வாழ்வில் கடைசி முறையாக, மத்தியான வெய்யில் சுட்டெரிக்க Lawrence ரோட்டில் நடக்க இதயம் கனத்தது. பாடசாலை பொழுதுகளின் பசுமையான நினைவுகள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் மனத்திரையில் தோன்றி மறைந்தது. அந்த பகுதிகளில் தரிசித்திருந்த முகங்கள் நினைவலைகளை மீண்டுமொரு உலாவந்தன.


கொழும்பு இந்து கல்லூரிக்குள் நுழைந்தால் ராமா, ராஜு, பண்டா, எலி முரளி,சதா என்று ஒரு குறூப் நின்று எல்லோரிடமும் காசு பறிக்குது. கொழும்பு இந்து கல்லூரி சம்பிரதாயப்படி கடைசி பரீட்சை முடிய முட்டை அடிக்கோணுமாம். ஒரு பச்சை நிற பத்து ரூபா தாளை கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டு, பிள்ளையாருக்கு ஒரு அரோகரா வைத்து விட்டு,  பரீட்சை மண்டபத்திற்குள் நுழைகிறோம்.


Paper நினைத்த அளவிற்கு கஷ்டமாக இருக்கவில்லை. "ரம்போ" ராஜரத்தினமும் கேசவனும் படிப்பித்த பகுதிகளுக்குள் கேள்விகள் வந்திருந்தன..ஒரு B கண்ணுக்கு தெரிஞ்சுது. கர்த்தரே எப்படியாவது Colombo Campus போகோணும், அங்க தான் வடிவான பெட்டயளும் பெரிய மரங்களும் இருக்கு, என்று செபித்து பேப்பரை கையளித்துவிட்டு வெளியில வந்தால்... முட்டை, சேத்து தண்ணி போன்ற  ஆயுதங்களுடன் குறூப் நிற்குது. 


முதல் நின்ற குறூப்போட அமலன், நித்தி, பக்கா, (எம்மை விட்டு பிரிந்த) ஷிரான் சேர்ந்து கொள்ள, தாக்குதல் தொடங்கியது. Head Prefect ரமேஷிற்கு சேறபிஷேகம் நடக்க நாங்கள் கேட்டை நோக்கி ஓட தொடங்கிட்டோம். "வா வா வா" என்று கத்திகொண்டு அங்கேயும் நிற்கிறாங்கள். நானும் வசந்தனும் திரும்ப ஓடிப்போய் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பக்கமுள்ள வகுப்பறைக்குள் பதுங்கினோம். 


நாங்க ஒளிந்திருந்த வகுப்பிற்கு வெளியே பலமான தாக்குதல் சத்தங்களும் அவலக்குரல்களும் கேட்குது. "எல்லா stockம் முடிய வெளிக்கிடுவம்" என்ற எங்கள் திட்டத்தில் மண் விழுந்தது..சதா, எங்களை கண்டு பிடித்துவிட்டான். உடனே சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிட்டு, சுத்தி நின்று கும்மியடிச்சாங்கள். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை முட்டையால் குளிப்பாட்டினாங்கள். 


முட்டை வெடுக்கு மணத்தோட பஸ்ஸில போக ஏலாது, மானப்பிரச்சினை வேற. பின்ரோட்டால போன ஆட்டோவை மறிக்க அவன் எங்களை ஏத்த மறுத்துவிட்டான். இப்படி நாலு ஆட்டோக்காரன்களால் நிராகரிக்கப்பட்டு ஜந்தாவது ஆட்டோவில் கெஞ்சி கூத்தாடி ஏறி வசந்தன் வீட்ட போய் 2 shampoo packet போட்டு குளித்தும் வெடுக்கு நாத்தம் போகவில்லை.


வழமை போல் அன்று பின்னேரமும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோயிலிற்கு தரிசனம் தேடி போனோம். வழமையா கலகலப்பாக பம்பலடிக்கும் எங்கள் குறூப்பில் அன்று ஏதோ ஒன்று மிஸ்ஸிங். Results வர எப்படியும் ரெண்டு மாசம் எடுக்கும், இனி என்ன செய்ய போகிறோம் என்ற எண்ணம் எல்லோர் முகங்களிலும் தெரிந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து ஒரு மாதிரி A/L சோதனை நேரத்திற்கு செய்தாச்சு, Campusல JVP பிரச்சினையால் வந்த backlog வேற. எப்படியும் campus போக 2 வருஷம் காத்திருக்க வேண்டும். வெளிநாடு போற எண்ணம் மட்டும் எங்களில் அப்போது யாருக்கும் இருக்கவில்லை. 


இந்த சூழலில் ஆபத்பாண்டவனாய் வாழ்வில் ஒளியேற்றி வைக்க கிடைத்த வரப்பிரசாதம் CIMA, UKஐ மையாமாக கொண்ட கணக்கியல் qualification. 70களில் ICMA (Institute of Cost and Management Accountants) என்று அறியப்பட்ட இந்த பாடநெறியில் தமிழர்கள் கோலோச்சினார்கள்.


1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரியான தரப்படுத்தலால் தமிழர்களின் பல்கலைகழக நுழைவுகள் தடுக்கப்பட, அநியாயமாக பல்கலைக்கழக நுழைவு மறுக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் ICMA பரீட்சைகளில் தேறி கணக்காளர்களாக தகுதிபெற்று, கொழும்பிலும் பிற நாடுகளிலும் தொழில்வாய்ப்புகளை தமதாக்கிக்கொண்டார்கள்.


90களில், கொழும்பில் மூன்று நிறுவனங்கள் CIMA கற்பித்தன. பம்பலப்பிட்டி Joseph laneல் கொட்டிலில் இயங்கி, வெள்ளவத்தையில் அரைகுறையாய் கட்டிமுடிக்கப்பட்ட நான்கு மாடிக்கட்டிடத்திற்கு குடிபெயர்ந்த Oxonia, பம்பலபிட்டி Jaya Roadல் தண்டவாளத்திற்கு அண்மையில் தடம்பதித்த IAS மற்றும் கொள்ளுபிட்டி சந்திக்கருகில் இயங்கிய CBS. எங்கள் விடுதலை இயக்கங்களை பின்பற்றி, Oxoniaவிலிருந்து பிரிந்து போய் IASம், IASலிலுந்து பிரிந்து போய் CBSம் உருவாகியிருந்தன.


இதில் எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது என்பது அடுத்த சிக்கல். IAS தமிழர்களின் கோட்டை. Stage 1&2க்கு தேர்த்திருவிழா மாதிரி சனம் அள்ளுபடும். முன்னாள் பரி யோவான் ஆசிரியர் பானுதேவன், ASM Perera, லோகநாதன், நகுலேஸ்வரன் என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற விரிவுரையாளர்கள் வசீகரிப்பார்கள். நல்ல காத்தும் நல்ல இதயம் படைத்த ஆசான்களும் நிறைந்த புனிதபூமி..IAS.


Oxonia 50:50 பிரதேசம், கொஞ்சம் சீரியஸான இடம். கிருஷ்ணகுமார், நல்லன்துவன், வரதராஜன், ஆறுமுகம் என்ற பிரபல விரிவுரையாளர்களின் கோட்டை. CBS நமக்கு சரிப்படாது, Ladies Collegeலும் Bridgetsலும் படித்த பெட்டையளின் English சூறாவளிக்கு தாக்குபிடிக்க முடியாது. 


CIMA படிக்க போக ஒரு leather folderம் scientific calculatorம் தேவை என்று ஏற்கனவே படித்துகொண்டிருந்த அண்ணாமார் (அக்காமாரை பழக்கமில்லை) சொல்ல வெள்ளவத்தையில் கடை தேடி folder வாங்கினோம். உள்ளுக்க notesஐ பிடித்து வைக்க ஒரு கிளிப்போட, CR கொப்பியையும் வைத்து Reynolds பேனையையும் செருகலாம். Pettaவில் Casio agencyக்கு போய் Scientific calculatorம் வாங்கி... நாங்கள் ரெடியானோம்.


CIMA முடிச்சால் நல்ல வடிவான வெள்ள பெட்டையா மாட்டலாம், நல்ல கொம்பனியில் Nissan Sunny காரோடு வேலை கிடைக்கும், வெள்ளவத்தையில் ஒரு luxury flat வாங்கலாம், 10 denim வாங்கி மாறி மாறி போடலாம், காசை பற்றி யோசிக்காமல் அடிக்கடி கொத்துரொட்டி சாப்பிடலாம், ஊத்தை கடை ப்ளேன் டீ குடிப்பதை நிற்பாட்டலாம், Libertyயில் காதலியோடு boxக்குள்ளிருந்து படம் பார்க்லாம் போன்ற உன்னத குறிக்கோள்களை மையமாக வைத்து நாங்களும் CIMAகாரன்களானோம்.


வாழ்வை ஒளிமயமாக்க போகும்...நட்பு, காதல், மோதல், கண்ணீர், சிரிப்பு, வெற்றி, தோல்வி, பொலிஸ், அடிதடி, பஸ், library, trips, cricket என்பவற்றை உள்ளடக்கிய இனிமையான ஒரு பயணம் ஆரம்பமாகியது...

Thursday, 5 November 2015

1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:


யாழ் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான Big Matchகள் பரி யோவானில் படித்த காலத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள். 1985 முதல் 1989 வரையான காலப்பகுதிகளில் Big Match, கோட்டை பிரச்சினையால் இடம்பெறாமல் விட்டது. இதுவும் எங்கள் பாடசாலை வாழ்க்கையில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வுகளில் ஒன்று.


1980களில் இடம்பெற்ற இரு ஆட்டங்களை அந்த ஆட்டங்களை கண்டுகளித்த யாரும் மறக்க மாட்டார்கள். தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்ட பரி யோவான் அணி, True Johnian Spiritஐ வெளிப்படுத்தின தருணங்கள் அவை. காலங்கள் கடந்தும் நினைவலைகளை விட்டகலாத போட்டிகள் இவை.


1983ல் மகிந்தா (ராஜபக்ஷவிற்கு சொந்தக்காரனில்லை) தலைமையில்  பல புதிய முகங்களை உள்ளடக்கிய பரி யோவான் அணி களமிறங்கியது. கடந்த ஆண்டில் தவறவிட்ட வெற்றிக்கனியை தட்டிபறிக்கும் வெறியோடு மிகப்பலமான மத்திய கல்லூரி அணி போல் பிரகலாதன் தலைமையில் போட்டியில் குதித்தது. 


முதலில் துடுப்பெடுத்தாடிய பரி யோவான் அணி, மத்திய கல்லூரியின் அபார பந்து வீச்சில் தடுமாற தொடங்கியது. 19 ஓட்டங்களிற்கு 3வது விக்கட்டை இழக்க, களமிறங்குகிறார் Captain Mahinda. "Centralஆல ஏலாது, ஏலுமேன்றா பண்ணிப்பார்" போன்ற கோஷங்கள் அடங்கி பரி யோவான் பாசறையில் ஒருவித மெளனம் குடிகொள்கிறது. மத்திய கல்லூரி அணியை உற்சாகபடுத்தும் வேம்படி மாணவிகளின் இரைச்சல் கலந்த சத்தம் மட்டும் ஓங்கி ஒலிக்கிறது.


42/5...விக்கட்டுக்கள் தொடர்ந்து விழ, விழ, விழ... "what's the matter.. Minor matter" என்ற கோஷமும் சோக கீதமாய் ஒலிக்கிறது. 7வது விக்கட் 69ல் விழ... பரி யோவான் மாணவர்கள் முகத்தில் சவக்களை. 9வது Batsman ஆக 15 வயது நிரம்பிய இளம் வீரனொருவன் களமிறங்குகிறான்.. T. Ragulan..baby of the team.


ஒரு பக்கத்தில் Mahinda அடித்து ஆட, மற்ற பக்கம் Ragulan மறித்து ஆட, கொஞ்சம் கொஞ்சமாக பரி யோவானின் முதலாவது இன்னிங்ஸ் மீள கட்டியெழுப்பப்படுகிறது.."What's the colour.. Red & Black" மீண்டும் முழங்க தொடங்குகிறது.


அணி 138 ஓட்டங்கள் எடுத்த வேளை Mahinda ஆட்டமிழக்கிறார். A true Captain's knock of 73, .. சனம் எழும்பி நின்று கைதட்டுது. Ragulanனின் பொறுமையான ஆட்டம் பரி யோவான் அணியின் முதல் இன்னிங்ஸை 171 ஓட்டங்களை எட்ட வைக்கிறது.


மத்தியகல்லூரியின் முதலாவது இன்னிங்ஸ் அதிரடியாக ஆரம்பிக்கிறது. வேகமாக ஓட்டங்களை குவித்த மத்திய கல்லூரி அணி முதலாவது நாள் ஆட்ட முடிவில் 154/2ஐ எட்டியது. அடுத்த நாள் காலையில் பரி யோவான் அணியினரின் அபாரமான களதடுப்பாலும் நுட்பமான பந்துவீச்சாலும் மத்திய கல்லூரியின் ஆட்டம் தொய்ந்து, 199/8 என்ற நிலையில் declare செய்யப்படுகிறது. பரி யோவான் அணியின் வேகபந்து வீச்சாளர் ஜெயேந்திரனின் 4/50, மத்திய கல்லூரி அணியினரை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பரி யோவான் அணி, மீண்டும் மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் திக்கு முக்காடுகிறது. இரண்டாவது நாள் lunch breakல் 40/3 என்ற நிலையில், தோல்வி..பின்னாளில் மண்டையன் குழுவின் கூடாரமாக மாறிய அசோக் ஹோட்டலடியில் வந்து நின்றது.


Lunchற்கு பிறகும் விக்கட்டுக்கள் மளமளவென சரிகின்றன.. 63/7. இதற்கிடையில் பரி யோவானின் இன்னுமொரு 15 வயது இளம் துடுப்பாட்டக்காரர் Nishyanthan மத்திய கல்லூரியினரின் பந்து வீச்சில் ஏற்பட்ட விரல் முறிவு காரணமாக தொடர்ந்து ஆடமுடியாமல் ஓய்வு பெறுகிறார். "Are we worried.. No no" மட்டும்.. ஈனஸ்வரத்தில் கேட்கிறது.


Teaக்கு முதல் match முடிஞ்சிடும்
என்ற நம்பிக்கையில் மத்திய கல்லூரி ஆதரவாளர்களின் ஆரவாம் விண்ணதிர்கிறது. பரி யோவான் கல்லூரி மாணவர்களோ இலங்கையின் ஆளும் UNP அமைச்சர்களால் எரித்து நாசமாக்கப்பட்ட யாழ் நூலகம் போல் சோபையிழந்து நிற்கிறார்கள். 


83/8... சங்கு சத்தம் பரி யோவான் மாணவர்களின் காதில் கேட்க, தோல்வி.. மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு முன்னேறியது. சில பரி யோவான் ஆதரவாளர்கள் சைக்கிள் தரிப்பிடம் நோக்கி விரைய.. விரல் முறிந்து வெளியேறிய Nishyanthan களமிறங்குகிறார்.. மறுமுனையில் Ragulan. இரு இளம் துடுப்பாட்டக்காரர்களும் துணிவோடு மத்திய கல்லூரி அணியினரின் பந்து வீச்சை எதிர்கொள்கிறார்கள். நொட்டி, தட்டி ஒருவாறு அணியின் எண்ணிக்கையை 103/8ற்கு கொண்டுவர...நடுவர்கள் Tea சொன்னார்கள். 


சுப்ரமணிய பூங்காவில் தண்ணி குடித்து முகம் கழுவி Shirtஆல துடைத்து விட்டு திரும்ப வந்து boundary lineற்கு கிட்ட அமருகிறோம்...போன வருஷம் விக்னபாலனும் விஜயராகவனும் செய்ததை Ragulaனும் Nishyanthaனும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்புடன்...நப்பாசை என்பது தான் சரியான சொல்லாடல். 


ஆனால் நடந்ததோ வேற, இடைவேளைக்கு பின் Nishyanthn அடித்து ஆட தொடங்கினார். Boundaryகள் விளாசினார்.. கொஞ்ச கொஞ்சமாக பரி யோவான் பாசறை பக்கம் சத்தம் வரத்தொடங்கியது.  


அணியின் எண்ணிக்கை 132ஜ எட்டிய போது Ragulan, LBW முறையில் ஆட்டமிழக்க.. மத்திய கல்லூரி அணி வெற்றியை அண்மிக்கிறது. பரி யோவான் அணியின் கடைசி துடுப்பாட்டகாரனான ஜெயேந்திரன் ஒரு typical no 11. அவரை பாதுகாத்தபடி Nishyanthan ஆடுகிறார். "Yanthan.. Yanthan.. Nishyanthan, Johnian yanthan.. Nishyanthan" கோஷங்கள் ஒவ்வொரு ஓட்டத்தையும் மகிமைப்படுத்துகின்றன. 


Nishyanthan பற்றி சில வரிகள். 1982ல் கொழும்பிலிருந்து வந்து பரி யோவானில் இணைந்தவர். Stylishஆக Bat பண்ணுவார், நடப்பார், கதைப்பார், ஓடுவார். அவர் பேசும் தமிழில் இங்கிலீஷ் வாடை அடிக்கும். 


20 mandatory overs வர இன்னும் நேரம் இருக்க, நேரம் கடத்த Nishyanthan கையாண்ட முறைகள் பிற்காலத்தில் இலங்கை அணியின் தலைவர் அர்ஜனா ரணதுங்கவை புனிதராக்க கூடியவை. ஒன்ற விட்ட ஒரு ஓவரிற்கு தண்ணி கேட்பது, padஜ கழற்றி திரும்ப போடுவது, shoe laceஐ கட்ட சொல்லுவது என்று Nishyanthan மத்திய கல்லூரி அணியினரதும் ஆதரவாளர்களதும் பொறுமையை சோதிக்கிறார். எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக ஒவ்வொரு ஓவர் தொடங்க முதலும் மைதானத்தில் 9 fielders தானா நிற்கிறார்கள் என்று confirm பண்ண, விரலால் சுட்டிகாட்டி எண்ணிபார்ப்பார். Nishyanthan விரல் விட்டு எண்ண எண்ண மத்திய கல்லூரி ஆதரவாளர்கள் அவரை தூஷணத்தால் அபிஷேகம் பண்ணினார்கள். மைதானத்தில் tension ஓ tension.. ஆனால் Nishyanthan மட்டும் cool as a cucumber. 


45 நிமிடங்கள் நீடித்த இந்த கடைசி விக்கெட்டுக்கான நாடகம், பரியோவான் அணிக்கு 37 ஓட்டங்களை சம்பாதித்தது.. ஜெயேந்திரன் எடுத்தது 1 ஓட்டம் மட்டுமே. Nishyanthan அற்புதமாக ஆடி 72 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்கும் போது பரி யோவான் அணி தோல்வியிலிருந்து மீண்டிருந்தது.. அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 169. 14 ஓவர்களில் 141 ஓட்டங்களை பெறவேண்டி களமாடிய மத்திய கல்லூரியால் எட்ட முடிந்தது 80/1 மட்டுமே.தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்ட பரி யோவான் அணி கடைசி பந்துவரை போராடும் போர்க்குணத்தையும், பாடசாலையின் சுலோகமான Johnians always play the game என்பதை விளையாட்டு மைதானத்திலும் வாழ்ந்து காட்டியது. 


கிசுகிசு:
பரி யோவான் அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய Nishyanthanற்கு, match முடிய ஜந்து சுண்டுக்குளி பெட்டையள், லவ் லெட்டர் கொடுத்ததாக பாடசாலையில் பரவலாக பேசப்பட்டது. அதிலும் ஒரு கடித்தில் lipstickஆல் "ஜ லவ் யூ நிஷ்"என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாம். 

Johnians always play the Game !

Thursday, 29 October 2015

ஜேகே என்கிற ஜொனியன்

“அவனா, ஒ குமரன், சென்ஜோன்ஸ்ல படிக்கிறாண்டி, கொஞ்சம் திமிர் பிடிச்சவன்”

“இருக்கட்டுமே, அவனிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு, வாடி கொஞ்சம் அவங்கட பக்கமா நகருவம்”

இந்த வசனங்களை தாங்கி வந்த ஒரு பதிவை வாசித்துவிட்டு, அதற்கு சில வாரங்களுக்கு முன்பு அறிமுகமான தம்பி பாலமுருகனை தொடர்பு கொண்டு இந்த ஜேகேயை தெரியுமா அவர் ஜொனியனா என்று கேட்டேன். பாலமுருகனூடாக கிடைத்த ஜேகேயின் நட்பு உண்மையில் ஒரு பொக்கிஷம். 


சென்.ஜோன்ஸில் படித்தவனென்றால் சுட்டு போட்டாலும் தமிழ் வராது என்ற மாயை உடைத்தவர் ஜேகே. பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் தமிழில் பேசினால் பாடசாலை மானத்தை வாங்குகிறோம் என்ற குற்றச்சாட்டு எழும். அதை துணிவுடன் எதிர்கொண்டு முதன்முதலாக மெல்பேர்ண் மண்ணில் தமிழிலும் பேசியவர் பிரேமன் ராஜதுரை. ஜேகே அதற்கும் அப்பால் சென்று பரி யோவான் கல்லூரி காலத்து நினைவுகளை தமிழில் ரசிக்கும்படி பதிவுசெய்து, பதிவிற்கு பதிவு நான் ஜொனியன் என்று முத்திரை பதித்தார். சில பழைய மாணவர்கள் ஜேகே பேசிய கூட்டங்களில் அவரை அணுகி "எப்பிடி இவ்வளவு அருமையாக தமிழ் கற்றீர்கள், உங்களை பார்க்க எங்களுக்கு பொறாமையாக இருக்கு" என்று சொன்னதை காதார கேட்டிருக்கிறேன். 


யாழ்ப்பாண மொழிநடையில் சுவாரசியமாக சொல்லாடி வாசகர்களை கவர்ந்திழுக்கும் கலையறிந்தவர் ஜேகே. அரசியல் முதல் விஞ்ஞானம் வரை பாடல்கள் தொடங்கி புத்தகங்கள் வரை ஜேகேயின் எழுத்துக்கள், வாசிப்போடு நின்று விடாமல் நம்மையும் இன்னும் தேடலுக்குள் தள்ளும் வன்மம் வாய்ந்தவை. ஜேகே அலசும் பாடல்களை நாமும் மீண்டும் ஆராய்வோம், அவர் ஆராய்ந்து எழுதும் புத்தக விமர்சனங்கள் எம்மையும் அதே புத்தகங்களை தேடி வாசிக்க வைக்கும். 


கடந்த ஆண்டு இதே வாரம், ஜேகேயின் "கொல்லைப்புறத்து காதலிகள்" புத்தக வெளியீடு மெல்பேர்ண் மண்ணில், யாழ் பரியோவான் கல்லூரி மெல்பேர்ண் பழைய மாணவர் சங்கம் மற்றும் நண்பன் ஜெயப்பிரகாஷ் சிறிகாந்தாவின் Jeylabs அணுசரணையில் அரங்கேறியது. விழாவும் ஜேகேயின் எழுத்துக்களை போல் புதுமையும் சுவாரசியமும் நிறைந்ததாக அமைத்திருந்தது. அகிலனும் கஜனும் இணைந்து இளையராஜாவின் பாடல்களை வைத்து படைத்த "ராஜாக்களின் சங்கமம்"இசை விருந்து விழாவிற்கு வந்தவர்களை மெய்மறக்க செய்தது. விசேஷமாக "சின்ன கண்ணன் அழைக்கிறான்" பாடலில் அகிலன் செய்த புதுமை அருமை, பலதடவை ருசித்தும் திகட்டாத தேன்.


சென் ஜோன்ஸில் படித்தவனென்றால் முள்ளுக்கரண்டியால் chicken சாப்பிட்டுக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி Johnians always play the game என்று பிதற்றிக் கொண்டு திரியும் கூட்டம் என்ற மாயையை தகர்த்து.. யாழ் பரியோவானில் எமக்கு செந்தமிழும் தமிழ் பற்றும் தமிழ் தேசிய சிந்தனையும் ஊட்டியே வளர்க்கப்பட்டோம் என்பதற்கு சான்றாக ஜேகேயின் கொல்லைப்புறத்து காதலிகள் புத்தகம் மலர்ந்தது.


கொல்லைப்புறத்து காதலிகள் புத்தகம் 1990களின் யாழ்ப்பணாத்தை படம்பிடித்து காட்டும்  வரலாற்று பதிவு. "கடுமையான போர்க் காலத்திலும் யாழ்ப்பாண மக்கள் போரிற்குள்ளும் வாழ்ந்தார்கள் என்ற அந்த நம்பிக்கையை உறுதியை தெளிவுபட சொல்லும் இந்த நூல் போர்க்காலத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறை எப்படி தமது வாழ்க்கையை பார்க்கிறார்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது" என்று கம்பவாரிதி ஜேகேக்கு அனுப்பிய தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். 

தமிழர் வரலாற்றில், குறிப்பாக எமது தலைமுறையை பொறுத்தவரை, 90 களின் யாழ்ப்பாணம் முக்கியம் வாய்ந்தது. இந்த காலப்பகுதியை பல முனைகளில் வரலாறு பதிவு செய்துள்ளது.  

இந்த காலப்பகுதியின் சிறப்பம்சத்தை ஆயுதப்போராட்டத்தின் வளர்ச்சியூடாகவும் அதை தொடர்ந்த யாழ்ப்பாண இடப்பெயர்வு ஊடாகவும் அணுக முற்படுவது அரசியல் முனை. செல்லடி, பொம்மரடி, ஹெலியடி, அந்த operation, இந்த attack, உதயன் ஈழமுரசு special edition  தொட்டு பிரேமதாச போட்ட பீக்குண்டு, அவ்ரோ எனும் சகடை, சந்திரிக்காட யுத்த நிறுத்தம், கிளாலி to தாண்டிக்குளம் வரை என இன்னும் பல நிகழ்வுகள் இன்றும் எம்மை துரத்தும்...உறுத்தும்.


கலை இலக்கிய முனையில் கம்பவாரிதி தலைமையில் கம்பன் கழகத்தின் செல்வாக்கும் உள்ளூர் கலைஞர்களின் எழுச்சியையும் காலம் பதிவு செய்யும். நல்லூர் திருவிழா மற்றும் ஊர்திரு விழாக்கள் நாதஸ்வரம் தவிலோடும் பட்டிமன்றமும் களைகட்டிய கனாக்காலம் அது.


பொழுதுபோக்கு சாதனங்கள், குறிப்பாக தொலைக்காட்சி அற்ற சூழலில், உள்ளூர் பாடசாலை மற்றும் கழக கிரிக்கட் கால்பந்து விளையாட்டு வீரர்கள் நட்சத்திர அந்தஸ்தோடு கோலோச்சிய பொற்காலத்தை யாழ்ப்பாணம் மறந்தும் மறவாது.


வாழ்வியல் கண்ணோட்டத்தில், யாழ்ப்பாணம் என்றால் வீட்டிக்கொரு கிணறு என்ற சிறப்போடு வீட்டுக்கொரு பங்கர் என்ற அடையாளம் எட்டிய கொடிய காலங்கள் அவை. மண்ணெண்ணை விளக்கில் படித்தும் AL சோதனையில் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவனை நினைத்து எங்கள் மண் என்றும் பெருமிதம் கொள்ளும்.


இந்த அனைத்து முனைகளயும் தனது படலைக்குள் அடைத்து கொல்லைப்புறத்து காதலிகள் படைத்திருந்தார் ஜேகே. இந்த கொல்லைப்புறத்து காதலிகள் ஒவ்வொறும் ஒவ்வொரு முனை மட்டுமல்ல, அவர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமும் கூட.

காதல் சொட்ட வைப்பாள் ஒருத்தி
கண்ணீர் வர வைப்பாள் இன்னொருத்தி

வாய்விட்டு சிரிக்க வைப்பாள் பிறிதொருத்தி
வாயடைக்க வைப்பாள் பிறத்தி

இவளோ பளார் என்று கன்னத்தில் அறைவாள்
ஆனால் அதோ அவளோ கன்னத்தில் முத்தமிடுவாள்

வியக்க வைக்க ஒருத்தி 
வியர்க்க வைக்க வேறொருத்தி

பக்கத்தில் பதுமையாய் ஒருத்தி
பதைபதைக்க வைக்க இன்னொருத்தி

சிலிர்க்க வைக்க அவள்
சிந்திக்க வைக்க இவள்

கடந்த ஆண்டில் அவரது புத்தகம் யாழ் மண்ணை அடைந்ததும் நல்லூர் திருவிழாவில் விற்று முடிந்ததும் யாழ் நூலகத்தில் நூலறிமுகம் இடம் பெற்றதும் உதயனில் அவர் பேட்டி வெளியானதும் அவரின் வளர்ச்சியின் அடையாளங்கள். நேற்று ஜேகே பதிவு செய்திருக்கும் ஊரோச்சம் என்ற பதிவில் தமிழ் சமுதாயம் பற்றியும் விடுதலை போராட்டம் பற்றியும் அவர் முன்வைத்திருக்கும் சிந்தனைகள் அவரது சிந்தனை முதிர்ச்சியையும் தமிழ் இனத்தின் சிந்தனையோட்டத்தை சீரியவழியில் துணிச்சலுடன் நெறிப்படுத்த அவர் தயாராகிவிட்டார் என்பதையும் எடுத்துக்காட்டுவதாக கருதுகிறேன். ஜேகே போன்ற சீரிய சிந்தனையாளர்களின் கருத்துக்களை தமிழ் சமூகம் உள்வாங்கும் என்பது எனது அவாவும் நம்பிக்கையும்.

ஜேகே தமிழ் இனத்தின் ஒரு குரலாக தொடர்ந்து ஒலிக்க வேண்டும், அவரது எழுத்துக்கள் எமது இனத்தின் பெருமையயும் விழுமியங்களயும் சான்று பகர வேண்டும். அவரது கருத்துக்கள் எமது தமிழ் இனத்தின் நம்பிக்கையயும் வேட்கையயும் பிரதிபலிக்க வேண்டும்.

தாய்மண்ணை பிரிந்தாலும் மண் மணம் மாறாமல் இனப்பற்று தழும்பால் சுவாரஸியமாகவும் அதேவேளை நிறைவான பொருளோடும் இலக்கிய களமாடும் ஜேகே மேலும் மேலும் படைப்புக்கள் படைக்க வாழ்த்துகள்.Friday, 23 October 2015

நாங்களும் ரெளடிதான்வெள்ளியிரவு இன்பத்தமிழ் வானொலியின் ஆனந்த இரவை மிஸ் பண்ணிட்டு மிஸ்ஸிஸ்ஸோட பார்த்த மிஸ் பண்ணக்கூடாத, கிஸ்ஸை மையமாக கொண்ட படம் நானும் ரெளடிதான்.

நயன்தாராவின் அழகை ஆராதிப்பதா நடிப்பை ரசிப்பதா என்ற மனதுக்குள் பட்டிமன்றம் நடந்து முடிய முதல் படம் முடிஞ்சிட்டுது. அரங்கு நிறைந்த காட்சியில் அழகான வசனங்களிற்கு சனம் வாய்விட்டு சிரிச்சது, இந்த படம் பிச்சுக்கொண்டு ஓடப்போவதை கட்டியம் கூறியது. பெண்கள் மீசையில்லாத வி.சேதுபதியை ரசிக்க ஆண்கள் நயன்தாராவை ஜொள்ளு விட்ட சமரசம் உலாவும் இடம், நானும் ரெளடிதான்.


நயன்தாராவை முத்தமிட போன வி.சேதுபதியை மடக்கி, நெருக்கம் விலக்காமால் நயன் பேசிய வசனம்... ப்பா...கிளாசிக். ஒரு பாடல் காட்சியில் கட்டுமரத்தில் நயன்தாரா ஏறி நிற்க வி.சேதுபதி ஆற்றில் இழுத்து கொண்டு போவார்... ரொமான்ஸ் பாஸ் ரொமான்ஸ்.. உச்சகட்ட ரொமான்ஸ். ஒவ்வொரு முறையும் வி.சேதுபதி "ஆர் யு ஓகே பேபி" என்று நயன்தாராவை பார்த்து கேட்பதும் அதற்கு நயன் கொடுக்கும் reactionம்... Priceless.

நயன்தாரா அடிக்க தேடிய அந்த ரெட் டீஷேர்ட் காரன் , ராதிகாவின் "கொத்தமல்லி கொழுந்து", வி.சேதுபதியின் கண்கள், பார்த்திபனின் ஆணவம் என்று படத்தில் கனக்க அருமையான காட்சிகள். அனிருத்தின் பாடல்கள் அருமை, ஆனால் எல்லா பாட்டையும் அவரே பாடுறது கொஞ்சம் ஓவர். "தங்கமே உன்னை நான்".. பாடல் முணுமுணுக்க வைக்கும்.. இசை பிரியர்களை மட்டும்.


அதே அரண பழைய பழிவாங்கும் கதையை வி.சேதுபதி + நயன்தாரா combo வில் சிம்பிளான சிரிக்க வைக்கும் வசனங்களுடனும் நல்ல ஆஜானுபாகுவான வில்லன்களுடன் கலந்து விருந்து படைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கு வாழ்த்துக்கள்.நயனில் மிரஸலாகி படம் பார்த்திட்டு வீட்ட வந்து iPhoneஜ திறந்தா இரு அதிர்ச்சி செய்திகள் காத்து கிடக்குது, நான் அப்படியே ஷாக்காயிட்டேன்..


"சிங்கள சமூகத்திற்கு புகழ் பெற்ற வரலாறு உண்டு - ஆனால் நான் அந்த சமூகத்தை சேர்ந்தவன் அல்ல. எனக்கு என்னுடைய பாரம்பரியம் உண்டு - அதுவும் புகழ் பெற்ற பாரம்பரியம். நீங்கள் தனிச் சிங்கள அரசு வேண்டும் என்று கூறினால், எங்களை எங்களுக்காக ஒரு தனி அரசை தேட கட்டாயப்படுத்துகிறீர்கள்" தானை தளபதி சுமா முழக்கம்

என் கொத்தமல்லி கொழுந்து !


"தனியான சிங்கள தேசத்தினை உருவாக்குவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளை முனைப்போடு செயற்படுவார்களேயானால், தனித் தமிழ்த் தேசம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது" மாவை அண்ணன் கர்ஜிப்பு.

நாங்களும் ரெளடிதான் !

பனடோல் குடிச்சிட்டு படுத்திருந்த புலிகளை உசுப்பேத்தி எழுப்பி விட்ட சிங்கள பேரினவாத தோழர்களிற்கு நன்றிகள்..

ஆர் யு ஓகே பேபி(ஸ்) !

Thursday, 22 October 2015

IPKFன் தீபாவளி1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது.


48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை புலிகளின் பலத்த எதிர்ப்பை முகம்கொள்கிறது. பல்கலைகழகம், கோட்டை, கோண்டாவில் என்று பல முனைகளில் பலமான இழப்பை இந்திய இராணுவம் சந்திக்கிறது. பலாலி, நாவற்குழி, யாழ் கோட்டை முனைகளில் இந்திய இராணுவம் உலங்குவானூர்திகளின் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சிக்கிறார்கள், கடும் சண்டையில் யாழ் மண் அதிர்கிறது. பல்கலைகழக வளாகத்தில் உலங்குவானூர்திகளில் வந்திறங்கிய சிறப்பு பரா அதிரடிப்படைகளால் புலிகளின் தலைமையை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கையை புலிகள் தீரத்துடன் முறியடிக்கிறார்கள்.


ஓக்டோபர் 21, 1987 தீபாவளி நாள். அன்று காலை கோண்டாவில் பகுதியில் நடந்த சண்டையில் இரண்டு இந்திய தாங்கிகள் அழிக்கப்பட, புலிகள் தரப்பில் லெப்.கேணல் சந்தோஷம் வித்தாகிறார்.
கோட்டையில் இருந்து முன்னேறிய இந்திய படை சாந்தி தியேட்டரை அண்மித்த பகுதிகளில் நிலைகொள்கிறது. 


அன்று காலையிலிருந்து ஆஸ்பத்திரி பகுதியை நோக்கி ஷெல் வீச்சில் இந்திய இராணுவம் ஈடுபடுகிறது. ஒரு ஷெல் 8ம் இலக்க வார்ட்டில் விழுந்து 7 நோயாளர்கள் பலியாகினர். பிற்பகல் நான்கு மணியளவில் இந்திய இராணுவம் ஆஸ்பத்திரியின் முன் வாயிலூடாக கண்டபடி சுட்டுக்கொண்டு உள் நுழைகிறது. 8ம் இலக்க வார்ட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு Radiology அறையில் அடைக்கலம் புகுந்திருந்த நோயாளிகளும் ஊழியர்களும் இந்திய இராணுவத்தின் கொலை தாண்டவத்திற்கு முதற்பலியாகிறார்கள்.


அசுரனை அழித்த திருநாளில், இந்திய இராணுவ அசுரர்களின் கோர தாண்டவம் யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகிறது. தண்ணி குடிக்க எழும்பினவன், காயத்தால் முனகினவன் என்று சத்தம் வந்த பக்கம் எல்லாம் போட்டு தள்ளுகிறது அமைதி காக்க வந்த படை. ஒரு அறையில் இருமல் சத்தம் கேட்க, இந்திய ஆமிகாரன் கிரனேட்டை கிளிப்பை கழற்றிவிட்டு இருமிய நோயாளி பக்கம் வீச, பக்கத்தில் படுத்திருந்த ஆம்புலன்ஸ் சாரதி உட்பட சிலர் பலியாகிறார்கள். 


இதேவேளை யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகள் ஷெல் சத்தத்தால் அதிர்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் ஆமி வெடி கொளுத்தி கொண்டாடுறாங்கள் என்று அவலத்திலும் சனம் நக்கலடித்தது. ஒபரேஷன் லிபரேஷன் காலத்தில் வெட்டிய பங்கர்கள் சமாதானம் வந்திட்டுது என்று நினைத்து சனம் மூட, ஊரில் இருந்த தேவாலயங்கள், கோயில்கள், பாடசாலைகள், மேல்மாடி வீடுகள் என்பன ஷெல் வீச்சிலிருந்து காக்கும் அரண்களாகின்றன. 


விண் கூவிக்கொண்டு பறக்கும் ஷெல்கள் எங்கேயிருந்து வருகின்றன எங்கே விழுகின்றன என்று புரியாமல் யாழ்ப்பாணம் கதிகலங்குகிறது.  ஷெல் குத்தும் சத்தத்தை வைத்து எத்தனை ஷெல்கள் லோட் பண்ணுறாங்கள் என்று எண்ணுவது, பிறகு விழுந்து வெடிக்கும் சத்தத்தை எண்ணி அந்த ரவுண்ட் முடிந்து விட்டது என்று நிம்மதியடைவது, கர்த்தரையும் முருகனையும் துணைக்கழைப்பது, கந்தசஷ்டியும் செபமும் பெலக்க சொல்வது, என்று தீபாவளி இரவை யாழ்ப்பாணம் உயிரை கையில் பிடித்தபடி கழிக்கிறது. 


ஆஸ்பத்திரியில் பிணங்களுக்கு அடியில் படுத்து பிணம் போல் நடித்து உயிர் பிழைக்கிறார்கள் நோயாளிகளும் மருத்துவர்களும் ஊழியர்களும். அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் காயக்காரரை காப்பாற்றும் உன்னத நோக்கோடு" We surrender, we are innocent doctors and nurses" என்று ஆங்கிலத்தில் கத்தியபடி கைகளை உயர்த்தி கொண்டு மூன்று தாதிமார்களுடன் வெளியில் வந்த பிரபல மருத்துவர் சிவபாதசுந்தரம், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிக்கு இரையாகிறார். 


ஒக்டோபர் 22ம் திகதி முற்பகல் வேளை இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் இராணுவ உயரதிகாரியின் வரவுடன் முடிவிற்கு வர, கையில் ஸ்டெதஸ்கோப்பை பிடித்தபடி மருத்துவர் கணேஷரட்னத்தின் உயிரற்ற உடலோடு 70 பேரின் உடல்கள் மீட்கப்படுகின்றன. ஈழநாதமும் முரசொலியும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு உதயன் முடக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த உடலங்கள் உறவினர்களிற்கு கையளிக்கப்படாமல் மரணவிசாரணை நடாத்தப்படாமல் எரியூட்டப்படுகின்றன. 


புலிகளிற்கும் இந்திய படைகளிற்கும் இடையில் நடந்த மோதலில் சிக்குண்டு பொதுமக்கள் இறந்ததாக இந்திய அமைதி படையின் தளபதி திபீந்தர் சிங் அறிக்கை விட்டார். இதைப்போன்ற படுகொலைகளுக்கு பின்னர் இந்திய அமைதி காக்கும் படையான IPKFக்கு, சனம் Indian People Killing Force என்று பெயரிட்டார்கள். இதுவும் Crime against Humanity தான். அன்றிலிருந்து இன்றுவரை கேட்க நாதியற்ற இனமாக நாங்கள் பயணிக்கிறோம்.


ஜெனிவாவை, ஏன் தமிழகத்தையே, எட்டாத இந்த ஆஸ்பத்திரி படுகொலையை நாங்கள் மட்டும் நினைவு கூற, இன்று வரை நீதிக்காக நியாயம் காத்திருக்கிறது.  அந்த நினைவு நாள் இந்த படுகொலை நாள் என்று வருஷம் முழுக்க விளக்கு கொளுத்தவும் அஞ்சலி செலுத்தவும் எங்களுக்கு ஏதாவது ஒன்று இருக்கும். விளக்கு கொளுத்தி கொளுத்தியே விளங்காமல் போன எங்கட இனத்திற்கு நலமான எதிர்காலம் துலங்குவது எப்போது ? 

Thursday, 15 October 2015

Cricketஉம் நானும்ஜந்து வயதில் 
அப்பா வாங்கித்தந்தார் Bat.
நினைவறிந்தவரை, அன்று தான்
"விசர்" கருத்தரித்தது.


Shot wavesல் ABC, BBC தேடி
சாமத்திலும் commentary கேட்டு
Daily Newsல் கடைசி பக்கம் 
முதலில் வாசித்து
Sports Star ஓடி வாங்கி
நாளொரு வண்ணம் "விசர்" வளர்ந்தது


St. John'sல், school
தொடங்க முதல் விளையாடி
முடிஞ்சா பிறகும் விளையாடி
Intervalல் விளையாடி
Book cricketஉம் விளாயாடி
பொழுதொரு வண்ணம் 
 "விசர்" பெருத்தது. 


ஆறு மணியடித்ததும் நண்பர்களின்
ஏச்சுக்கும் நக்கலிற்கும் மத்தியில் 
Match இடைநடுவில், 
வீடு திரும்ப வேண்டிய கட்டுப்பாடு,
இல்லாட்டி "வீடு" groundsற்கு வரும்.


வார இறுதியில், match விளையாட
வீட்டு வேலை செய்து, தேற்றம் நிறுவி
கிழமைக்கொரு ஆட்டம் என்ற quota 
என தியாக வேள்வியானது "விசர்"


விடுமுறை நாட்களில்
காலை மாலை என
ஊர் ஊராய் போய் 
விளாயாடின matchகள்
"வீடு" அறியாது. 


பாடசாலை அணியில் இடம் 
கிடைக்காத விரக்தியும் 
O/L, A/L, CIMA படிப்பு 
என்று வந்ததும்
"விசர்" அடங்கி போனது 
என்னவோ உண்மை தான்.


வேலை கிடைத்து settle ஆனதும் 
"விசர்" மீண்டும் மரமேறியது.
நிஜ honeymoon காணும்வரை
"விசர்" honeymoon
கொண்டாடி மகிழ்ந்தது.


கலியாணம் காட்சி காண
மீண்டும் தியாகங்கள் தொடங்கின.
Mowing, vacuuming, cleaning
Shopping, nappy changing  
என பட்டியல் மாறியது..நீண்டது


"ஆசீர்வாதம்" பெற்று car ஏறி
Stephen Coveyஐயும் வைரமுத்துவையும்
Motivationக்கும் refocusக்கும்
துணைக்கு அழைத்து,
நண்பனின் கடியிலும்
நாலு warmup deliveryயிலும் 
"விசரிற்கு" உற்சாகம் பீறிட
"வீடு" மறந்து 
விளையாட்டு தொடங்கியது.


Ballஐ கையிலெடுத்து, 
ஒருகணம் கண்மூடி 
focus பண்ணினால்
தெரிந்தது தியாகங்கள் 
சோதனைகள் வேதனைகள் தான்.


"விசரிற்கு" விசர் வந்து
முதல் பந்தை ஆக்ரோஷமாய் வீச
Wide ball என்று umpi கடுப்பேத்த
Come on come on என்று 
team கத்தியது


மீண்டும் car ஏறி
இளையராஜாவின் சோகப்பாட்டு,
Deep heat, Hot Bag,
Physio, Sickie என்று
மனம் பதைபதைத்தது..


ஒரு நாள் விசர்த்தனமா 
கிட்ட field பண்ணி,
விசரன் மாதிரி catch பிடிக்க போய் 
மூக்கில் பந்து செல்லமாய் முத்தமிட
ambulance..hospital..fracture..
பட்ட வேதனை இன்னும் மறக்கல்ல


நாட்டுக்காக சிந்தாத ரத்தம் 
"விசரிற்காக" சிந்தியது பெருமை,
ஆனால் பொடியளிடம் கடி வாங்கும் 
போது வலிக்கும்..ஆனா வலிக்காது..


என்றாலும் "விசரிற்கு" 
இது எல்லாம் சகஜமப்பா
நாங்க அப்பவே அப்பிடியாம்..
15ல் வளைக்காததை
40ல் வளைக்க நிற்குது
என்று தணியும் இந்த "விசரின்" மோகம்
அன்று அடங்கும் எந்தன் தேகம் 
என்று வீரவசனம் வேற..

பார்க்கலாம் பார்க்கலாம்