Thursday, 7 June 2018

காலா
தொண்ணூறுகளிலிந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு இந்தா வருவேன் அந்தா வருவேன் என்று தனது திரைப்படங்கள் வெளிவரும் வேளையையொட்டி வெளியிடும் கருத்துக்கள் எதையுமே எப்பவுமே, கணக்கில் எடுப்பதில்லை. இன்னும் வடிவாக சொன்னால், ரஜினிகாந்த் எனும் நடிகனை, வெள்ளித்திரைக்கு வெளியே ரசிப்பதுமில்லை, அவரது அரசியல் பிரவேசத்தை பற்றி அலட்டிக் கொள்வதுமில்லை.

நாங்கள் டிக்கட் வாங்கக் கொடுக்கும் காசிற்கு, மூன்று மணித்தியாலங்கள் கூத்தாடி விட்டுப் போகும் கூத்தாடி தான் ரஜினிகாந்த். கூத்தாடிகளின் அரசியல் சமூகக் கருத்துக்களை தூக்கி பிடித்துக்கொண்டு, போராட்டம், புறக்கணிப்பு என்று புறப்பட்டு எங்களது நேரத்தை வீணடிக்கவும் விருப்பமில்லை, உணர்வுகளை விரயமாக்கவும் போவதுமில்லை.  என்னைப் பொறுத்தவரை, வெள்ளித் திரைக்கு வெளியே ரஜினி ஒரு லூசுப்பயல்!

ரஜினிகாந்தின் படம் திரையில் அரங்கேறும் போது, முதலாவது படக்காட்சியை பார்ப்பது என்பது ஒரு Thrill. Poster வந்து, பாட்டுக்கள் கேட்டு, Teaser பார்த்து, கதை leak ஆகி, நாள் கணக்கிட்டு, மணித்தியாலங்களை கரைத்து, நிமிடங்களை எண்ணி, திரையரங்கின் கதிரையில் போய் அமரும் வரையான அனுபவமே அலாதியானது தான். 

காலா திரைப்படத்தின் எழுத்தோட்டம் ரஜினிகாந்தின் வழமையான படங்களின் ஆரம்பம் போலில்லாமல், “நிலம் எங்கள் உரிமை” எனும் தலைப்போடு, ஒரு ஆவணப்படத்தின் முன்னோட்டம் போல ஆரம்பிக்க, “என்னடா இது.. திரும்பவும் ரஞ்சித் ரஜினியை வச்சு செஞ்சிட்டானோ” என்று நெஞ்சம் படபடக்கிறது.

எழுத்தோட்டத்திற்கு சற்றும் குறையாத அலப்பறையுடன் ஆரம்ப காட்சிகள் நகர்ந்து, cricket batஐ தூக்கிக் கொண்டு ரஜினிகாந்த் திரையில் நிமிர எழுந்த பரபரப்பு, ரஜினி clean bowled ஆனதோடு, மீண்டும் அடங்குகிறது. ஜீப்பில் அநாயசதாக ஏறி தலையை சாதுவாக ஆட்டியபடி ரஜினி வலம் வர, பின்னனி இசையின் அதிரவைக்காத அதிர்வு, ஜீப்பில் ரஜினியின் காட்சிகளை ரசிக்க வைக்கிறது

படத்தில் ரஜினியையும் சமுத்திரகனியையும் வில்லன் சம்பத்தையும் தவிர வேறு முகங்கள் பரிச்சயமற்றவையாக இருப்பது சலிப்பைத் தருகிறது. அதுவும் ரஜினிகாந்திற்கு இரு கிழவிகள் ஹீரோயின்கள். ராதிகா ஆப்தே, சொனாக்‌ஷி சின்ஹா, நயன்தாரா, ஸ்ரேயா, ஜஸ்வர்யா ராய் என்று ஆட்டம் போட்ட ரஜினிகாந்த், கிழவிகளோடு காதல் பண்ணுவது, ரஜினிக்கு மட்டும் வயசாகவில்லை, “ரஜினி படத்திற்கும்” வயதாகிவிட்டது என்பதை இயக்குனர் ரஞ்சித் அழுத்தமாக பதிவு செய்கிறார். 

காலாவின் இடைவேளை வரை இயக்குனர் ரஞ்சித்தின் படம் தான். திரை நிரம்ப கூட்டம் கூட்டமாக நடிகர்கள் நிறைந்திருக்க, ஆவணப்படத்திற்கான அனைத்து (அவ)லட்சணங்களுடன் கமரா தாராவியின்
சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி காட்சிகளை நகர்த்துகிறது. மூச்சை பிடித்துக்கொண்டு எல்லோரும் ரஜினியை வைத்துக் கொண்டு முக்கி முக்கி புரட்சி வசனங்கள் பேசுகிறார்கள், முஷ்டியை முறுக்குகிறார்கள். 

ரஜினிகாந்த் தோன்றும் காட்சிகளில், ரஜினிகாந்தின் ஸ்டைல் அல்லது முத்திரை அழுத்தமாக வெளிவந்தது கொண்டேயிருப்பதால், ஏதொவொரு எதிர்பார்ப்பு நம்மோடு கூடவே பயணித்துக் கொண்டேயிருக்கிறது. மழை பெய்து கொண்டிருக்க, ஒரு மேம்பாலத்தில், தனியாக ஜீப்பில் குடையை பிடித்துக் கொண்டு வந்திறங்கி, குடையால் வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சியில் ரஜினிக்கு கட்டாயமாக ஒரு விசில் அடிக்கலாம்.

தூத்துக்குடி போராட்டத்தில் காயப்பட்ட ஒரு இளைஞன் ரஜினிகாந்தைப் பார்த்து “நீங்க யாரு” என்று கேட்ட வீடியோ சில நாட்களிற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலா படத்தில் “யாரு இவரு..” என்ற ரஜினிகாந்த் வசனம் பேசும் காட்சி சிரிப்பை மட்டுமல்ல, மேற்கூறிய சம்பவத்தையும் ஞாபகத்தில் வரவழைத்தது. 

சந்தோஷ் நாராயணனின் காலா பாடல்கள் முதலில் கேட்கும் போது, பெரிதாக பிடிக்கவேயில்லை. திரைப்படத்தில் பாடல்கள் நன்றாக பொருந்தி படத்திற்கு அழகாக மெருகேற்றுகிறது.  அதுவும் தனது பழைய காதலியை ரஜினிகாந்த் சந்திக்கும் போது வரும் “கண்ணம்மா..” பாட்டும் அந்த BGMம், நெருடல். 

ரஜினிகாந்தும் வில்லன் நானா பட்டேக்கரும் திரையில் சந்திக்கும் காட்சிகள் அனல் பறக்கின்றன. ரஜினியும் பட்டேக்கரும் சந்திக்கும் முதல் காட்சியும், பட்டேக்கரின் வீட்டில், வெள்ளை சோஃபாவில் கறுப்பு வேட்டியும் ஷேர்ட்டும் அணிந்து கொண்டு, காலிற்கு மேல் கால் போட்டுக் கொண்டு, ஸ்டைலாக இருந்து கொண்டு பட்டேக்கரோடு வார்த்தைகளால் மோதும் காட்சிகள் ரஜினிகாந்த் படங்களிற்கேயுரிய தனித்துவம் மீண்டும் மிளிர்கிறது. 

காலா திரைப்படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய பகுதி முழுவதுமாக ரஜினிகாந்த் படம் தான். ரஜினிகாந்தின் கண்களில் ஒரு காந்தம் இருக்கும், ஒன்றரை கண்ணால் ரஜினி கண்ணில் கோபம் கொப்பளிக்க பார்க்கும் காட்சிகள், ரஜினி ரசிகர்கள் மட்டுமே உணர்ந்து ரசிக்கும் அற்புத கணங்கள். ரஜினியின் அழுத்தமான அந்தக் கோப காட்சிகள் காலாவில் நிறையவே நிரம்பிக் கிடக்கின்றன.  

காலாவில், ஷங்கர் மகாதேவன் பாடிய “வாடி என் தங்க சிலை” பாட்டு, திரைப்படம் முடிந்து வெளியே வந்த பின்பும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. காலாவில் இருக்கும் ஒன்பது பாடல்கள் ரஜினிகாந்தின் படத்திற்கு அதிகம் தான், ஆனால் எல்லா பாடல்களும் குறுகிய நேரமாக இருப்பதாலும், காட்சிகளோடு நன்றாக பொருந்துவதாலும், திரைக்கதையை தொய்ய விடாமல் கொண்டோடுகின்றன.

காலா படத்தின் வசனங்கள் எழுதியது ஆதவன் தீட்சண்யாவாம். சில இடங்களில் வசனங்கள் சற்று நீளமாக இருந்தாலும், திரைக்கதையில் வாறவன் போறவன் எல்லாம் வசனங்களை முழங்கி விட்டுப் போனாலும், பல இடங்களில் வசனங்கள் ஆழமாகவும் ஆணித்தரமாவும் அமைந்திருக்கின்றன. அதுவும், ரஜினிகாந்தும் நானா பட்டேக்கரும் சந்திக்கும் காட்சிகளின் வசனங்கள் நாளங்களை சூடேற்றுகின்றன. 

திரைக்கதையில் சரியான தருணத்தில் இதிகாச இராமாயணத்தை செருகும் இயக்குனர் ரஞ்சித், திரைப்படத்தை இராமாயணத்தின் முடிவை அடியொட்டி முடிக்க மட்டும் துணியாதது ஏமாற்றம். “தளபதி” யில் மணிரத்னம் விட்ட அதே குறையை “காலாவில்” ரஞ்சித்தும் தொடர்ந்ததால், திரைப்படத்தின் கடைசி ஐந்து நிமிடங்கள் வீணடிக்கப்படுகின்றன. 

காலா... கன காலத்திற்குப் பிறகு பார்த்த, ரஜினிகாந்த் நடித்த.. ரஜினி படம். 

Friday, 1 June 2018

தர்மேந்திரா...
“மரணம், எமது வாழ்வு முழுவதும் கூடவேயிருந்து துரத்துகின்ற நிழல்” என்று தம்பி ஜேகே எழுதிய பதிவை பள்ளிக்கால தோழன் நகுலனின் மறைவையொட்டி வரைந்த பதிவில் பதிவிட்டிருந்தேன். இந்தக் கிழமை அந்தக் கொடிய நிழல் எமது SJC92 நண்பர்களில் மிகவும் நெருங்கிப் பழகிய அன்பு நண்பன் தர்மேந்திராவைக் காவு கொண்டு விட்டது.

1985ம் ஆண்டு, ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வினூடாக இணைந்த Year 7D வகுப்பில் தான் தர்மேந்திராவும் இணைந்து கொண்டான். படிப்பில் கெட்டிக்காரன்களாகவும் கிரிக்கெட்டில் விண்ணன்களாகவும் இருந்த 7D பெடிளோடு பழகி பம்பலடிக்க,  பரி யோவானின் ஆரம்பப் பிரிவிலேயே இணைந்த எங்களிற்கு கொஞ்ச காலம் எடுத்தது. 

பாடசாலை இடைவேளை நேரம், பரி யோவான் மைதானத்தில் ஒரே நேரத்தில் அரங்கேறும் வகுப்புக்களிற்கிடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் தான் தர்மேந்திராவை முதலில் சந்தித்ததாக ஞாபகம். St John Bosco பள்ளியில் ஆரம்பக் கல்வியை கற்றுவிட்டு, பரியோவானில் இணைந்த நெடிய கரிய உருவம் தான் தர்மேந்திரா.

“மச்சான், ஜெயந்திகுமார் மாஸ்டரின் ட்யூஷனில், அவர் வாங்கில் ஏறி நிற்கச் சொன்னால், இவன்ட தலை கூரையில் முட்டுமடா” என்று நண்பனொருவன் நினைவு கூர்ந்தான். சுரேன், இன்பன், ஜெயரூபன்,, அருள்மொழி என்று பரி யோவானின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணிவகுத்த 7D வகுப்பு கிரிக்கெட் அணியின் Captain தர்மேந்திரா தான்.

“அது வந்து மச்சான், தர்மி தான் schoolற்கு bat கொண்டு வாறவன், அவன்ட suitcase தான் விக்கெட், அதால தான் அவனை Captain ஆக்கினாங்கள்” என்று அந்த வகுப்பு நண்பனொருவன் பழைய கதையை பகிடியாக்கினான். தர்மேந்திரா நன்றாகவே கிரிக்கெட் விளையாடுவான், அவனது கண்ணில் எப்போதும் ஒருவித ஆக்ரோஷம் குடிகொண்டிருக்கும், யாரும் வலிய போய் அவனோடு கொழுவ மாட்டார்கள். 

தாயக மண்ணில் அரங்கேறிய யுத்தம் எங்களை ஒவ்வொரு திக்காக சிதறடிக்க, தர்மேந்திராவும் கனடாவிற்கு குடியேறினான். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தர்மேந்திராவுடன் எங்களில் பலருக்கு தொடர்புகள் இருக்கவில்லை, கனடாவில் இருந்த பலருக்கே தர்மேந்திரா ஒட்டாவாவில் வாழ்ந்தது தெரிந்திருக்கவில்லை. 

ஒட்டாவாவில் தர்மேந்திராவின் வாழ்க்கையை இந்துக் கல்லூரி நண்பன் ஆதவன் அழகாக பதிவு செய்து நாங்கள் அறியாத தர்மேந்திராவின் ஒட்டாவா பக்கங்களை எங்களுக்கு அறியத் தந்துவிட்டான்.

2014ம் ஆண்டளவில் ஒட்டாவாவிற்கு விஜயம் செய்த நண்பன் ரமோஷனை சந்தித்த நண்பர்கள் குழுவில் தர்மேந்திராவும் காட்சியளித்தான். “மச்சான் இவனை ஞாபகமிருக்கா” என்று ரமோ WhastsAppல் தர்மேந்திராவின் படத்தை போட, தர்மேந்திராவின் சிறுபராயத்து படத்தை யாரோ போட, தர்மேந்திரா, DM ஆகி எங்களது SJC92ன் அன்புத் தோழனாக வலம் வரத் தொடங்கினான். 

“டேய் DM, கறுவல், என்னடா பம்முறாய்” என்று DMஐ வம்புக்கிழுத்தால், “இஞ்ச வா.. சொல்றதை கேளு.. நான் கறுப்பென்றால் நீ என்ன நிறம்” என்று பதில் தாக்குதல் வரும்.


DM சிலவேளைகளில் உணரச்சிவசப்பட்டு சண்டையும் பிடிப்பான், “டேய் emotional ஏகாம்பரம்” என்று அவனை பழித்து, நக்கலடித்து, DMஐ சமாளித்த கணங்களை நாங்கள் இனி அனுபவிக்க போவதில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை மெல்பேர்ணில் இரவு நேரம் DM, WhatsApp ஊடாக தொடர்பில் வந்தான். அவனது மனைவி கெளதமி சுகவீனமுற்ற நேரம் WhatsApp குழுவிலிருந்து விலகியருந்த தன்னை மீளவும் இணைக்குமாறு கேட்டான். அவனை குழுவில் இணைத்து விட்டு , தொலைபேசியில் தொடர்பெடுத்து கதைத்துக் கொண்டிருந்தேன்.

“மச்சான் Sheshan கனக்க கேள்வி கேட்கிறான்டா.. என்ன சொல்லுறது என்று தெரியேல்லடா” DMன் குரல் உடைந்தது. “கெளதமின்ட படத்தை பார்த்து, mummy come back என்று சொல்லுறான்டா”. அவனை முடிந்தளவு தேற்றினேன். 

வீடு முழுக்க கெளதமியின் நினைவுகள் நிறைந்து போய் இருப்பதாகவும், அன்று காலை எல்லாமே மறந்து போய் கெளதமிக்கு கோப்பி எடுத்துக் கொண்டு மேல்மாடிக்குப் போனது பற்றி சொன்னான். ஒட்டாவாவில் இருந்து டொரோன்டோற்கு இடம்பெயரப் போவது பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தான். கெளதமியின் இறப்பு தொடர்பான paper workஐ பூர்த்தி செய்ய, கெளதமியின் முன்னாள் முகாமையாளர் உதவி செய்வது பற்றியும், சொல்லிக் கொண்டே போனான்.

“மச்சான், எனக்கு வாய் விட்டு அழோணும் போல இருக்குடா” DM உணர்ச்சிவசப்பட்டான். “மகனுக்கு முன்னால அழது அவனை upset ஆக்க விரும்பேல்லடா” என்றான். “என்ர அப்பா செத்த போது, இப்படித்தான் மச்சான், காரை எடுத்துக் கொண்டு தூர இடத்திற்கு போய் அழுதிட்டு வந்தனான்டா.. இப்ப அதுவும் ஏலாது.. என்னட்ட car licenseம் இல்லைடா” என்ற DMன் குரல் உடைந்தது.

புதன்கிழமை காலை நெஞ்சையடைக்கும் அந்த துக்க செய்தி பல திக்குகளிலுருந்தும் அவரசரமாக வந்தடைந்தது. “டேய் உனக்கு அவன்ட வீடு ஞாபகம் இருக்கு தானே” போன செப்டம்பர் மாதம் DMன் வீட்டிற்கு போனதை நகு ஞாபகப்படுத்தி விட்டு, நகு DMன் இறுதி கணங்களை என் கண்முன் மீண்டும் கொண்டு வந்தான்.

டேய் DM, கறுவல்.. தனியாக அழ இடம் தேடித் தானோ நீ வெகு தூரம் ஓடி விட்டியாடா மச்சான்?.. 
ஏன்டா மச்சான்.. உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்?
இனி யாரோடு மச்சான் நாங்க தனகுவோம்? 

பாலகுமாரன் உடையார் நாவலில் மரணம் என்பது கனவுகளிலிருந்து விடுதலையாகி நனவுகளிற்கு திரும்புதல் என்பார். உனது நனவுகளே உனக்கு கடினமானதாக அமைந்து விட, கனவுகள் காணத் தான் அவரசர அவசரமாக ஓடிப் போய் விட்டீயா?

Thursday, 24 May 2018

நிலாவும் ஜெருசலேமும்
ஜெருசலேம் நகரும் “சொப்பன சுந்தரி” மாதிரி என்று சொன்னால் மதவாதிகளும் பழமைவாதிகளும் அடிக்க வருவார்கள். ஆனால் உண்மையில் ஜெருசலேமும் ஒரு வகையில் சொப்பன சுந்தரி  தான், நீண்ட நெடிய வரலாற்றில் ஜெருசலேம் நகரை பலர் “வைத்து இருந்திருக்கிறார்கள்”. 

ஜெருசலேம் நகரம், 52 முறைகள் தாக்கப்பட்டு, 23 தடவைகள் முற்றுகையிடப்பட்டு, 44 தரம் மாறி மாறி வெவ்வேறு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு, கைவிடப்பட்டு, மீளக் கைப்பற்றப்பட்ட, ஒரு குறுகிய நிலப்பரப்பு. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த ஜெருசலேமில் என்று அறிய வேண்டுமானால் வரலாற்றில் பயணிக்க வேண்டும். 


எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு வந்த மோசேக்கு, ஆண்டவர்  வாக்குத்தத்தம் பண்ணிய “பாலும் தேனும் ஓடும்” , யூதர்களின் மூதாதையர்களின் தேசத்தின் (Promised Land) அதிமுக்கிய நகரம்  ஜெருசலேம். 


கடவுளால்  வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நிலத்தையும் ஜெருசலேமையும் 
காணாமலே மோசே பாலைவனத்தில் மோட்சம் போய்விட, மூதாதையரின் நிலத்தை மீட்கும் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யோசுவா ஏற்கிறார். 

ஏழு பழங்குடிகளையும் வென்று, தாயக நிலப்பரப்பை மீட்கும் யோசுவாவால் ஜெருசலேமை மட்டும் எபூசியர்களிடமிருந்து முழுமையாக விடுவிக்க முடியாமல் போக, அவருக்கு பின் வந்த யூதர்களின் புகழ்பூத்த மன்னரான தாவீது ராஜாவால் (King David), ஜெருசலேம் முழுமையாக கைப்பற்றப்பட்டு, யூதேயாவின் தலைநகரமாக ஜெருசலேம் பிரகடனப்படுத்தப்படுகிறது.

தங்கள் தேசத்தை மீட்டுத் தந்த கடவுளுக்கு நன்றி செலுத்த, தாவீதின் மகனான சாலமன் மன்னன் (King Solomon), ஜெருசலேமின் கோயில் மலை (Temple Mount) எனும் இடத்தில், கிமு 957ல், கட்டிய பலிபீடமே, முதலாவது ஜெருசலேம் ஆலயம். இதே இடத்தில் தான் ஆபிரகாம் தனது மகனான ஈசாக்கை கடவுளுக்கு பலிகொடுக்க பலிபீடம் கட்டினான் என்பது யூதர்களின் நம்பிக்கை.


முதலாவது ஜெருசலேம் ஆலயம் கட்டப்பட்டு பத்து ஆண்டுகளிலேயே, ஜெருசலேம் மீது படையெடுத்த பபிலோனிய கோடுங்கோலனான நெபுக்கட்னெசரால் ஆலயம் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகிறது. 

கிமு 538 ஆண்டளவில், ஜெருசலேமை கைப்பற்றியிருந்த பாரசீக மன்னன் சைரஸின் ஆசியுடன், இரண்டாவது ஜெருசலேம் கோயில் மீண்டும் கட்டப்பட்ட தொடங்கி, 23 ஆண்டுகளில் அந்தப் பணி நிறைவடைகிறது. 


அடுத்த 200 ஆண்டுகளில் மாமன்னன் அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது மீண்டும் கோயில் அழிக்கப்படலாம் என்றெழுந்த அச்சுறுத்தலை, யூதர்கள் சாணக்கியமாக மென்வலு கொண்டு முறியடித்து, ஜெருசலேம் ஆலயத்தை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள்.  

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் ஐம்பதாண்டுகளிற்கு முன்னர், ரோம சாம்ராஜ்ஜியத்தின் கவர்னரான ஏரோது மன்னன், இரண்டாவது ஜெருசலேம் தேவாலயத்தை விரிவாக்கி அழகுபடுத்துகிறான். 
யேசு நாதரின் 33 ஆண்டு வாழ்க்கை வரலாற்றில், ஜெருசலேம் கோயில் அடிக்கடி வந்து போகும். 12 வயதில் ஜெருசலேம் ஆலயத்தில் அவர் தொலைந்து போனது தொட்டு, அவர் இறக்கும் போது ஜெருசலேம் ஆலயத்தின் திரைச்சீலை கிழிந்தது வரை பல சம்பவங்கள் வேதாகமத்தில் உள்ளடங்கும். 

அன்பையும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் போதித்த யேசுநாதர், சிலுவையில் அறையுண்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், கோபம் கொண்டு சவுக்கை எடுத்து விளாசி “இது என்னுடைய தந்தையின் வீடு, இதை கள்வர் குகையாக்காதீர்கள்” என்று யேசு சத்தமிட்ட சம்பவம் அரங்கேறிய இடமும் ஜெருசலேம் தேவாலயம் தான். 

கிபி 70ம் ஆண்டளவில் யூதர்களின் இரண்டாவது ஜெருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட, கிபி 7ம் நூற்றாண்டில் ஜெருசலேத்தை கைப்பற்றிய இஸ்லாமியர்களால் Dome of Rock என அழைக்கப்படும் குவிமாட வடிவிலமைந்த மசூதி, ஜெருசலேம் தேவாலயம் அமைந்திருந்த  அதே Temple Mount பகுதியில் நிர்மாணிக்கப்படுகிறது. ஜெருசலேமில் இருந்தே அல்லா, விண்ணுலகிற்கு பயணமானார் என்பது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை. மக்கா, மெதீனாவிற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்களின் புனித தலமாக ஜெருசலேம் கருதப்படுகிறது. 

தாய் நாட்டை இழந்த யூதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து வாழ்கிறார்கள். உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மீண்டும் ஒரு நாள் தாயகம் திரும்புவோம் என்ற ஓர்மத்தை அடுத்தடுத்த தலைமுறைகளிற்கு ஊட்டி விடுகிறார்கள். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் சிதறுண்டிருந்த யூத இனத்திற்கு விடிவு கிடைக்கும் நிகழ்வுகள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரங்கேறத் தொடங்குகின்றன.


முதலாவது உலக மகாயுத்தத்தின் முடிவில், 1917ம் ஆண்டு யூதர்களிற்கு என்று ஓரு தனிநாடு, ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் அங்கமான அன்றைய பாலஸ்தீன நிலப்பரப்பில், அமைக்கப்படுவதை அங்கீகரித்து, பிரித்தானிய அரசு Balfour declaration எனும் பிரகடனத்தில் கைச்சாத்திடுகிறது. 
  
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்து, 1948ல் பிரித்தானிய வல்லரசு தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்க, பதினைந்து அரபு நாடுகளை தனியனாக எதிர்த்து நின்று தனது தாயகத்தை மீட்டு இஸ்ரேல் எனும் யூதர்களின் தேசம் உருவாகிறது. 1948ம் ஆண்டு போரில், ஜெருசலேத்தின் ஒரு பகுதியை மட்டுமே யூதர்களால் கைப்பற்ற முடிந்தது. 

இஸ்ரேல் பிறந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட Dominique Lapierre & Larry Collins எழுதிய O’Jersualem எனும் புத்தகம், இதுவரை வாசித்த புத்தகங்களில் மிகச் சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. 

அழிந்து போன இரண்டாவது ஜெருசலேம் தேவாலயத்தின் சிதைவுகள் இருந்த Western wall இருந்த பகுதியை, 1967ல் நிகழ்ந்த ஆறு நாள் அதிரடி யுத்தத்தில் இஸ்ரேல் கைப்பற்றி, ஜெருசலேம் நகரை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது. சர்வதேச சமூகமோ ஐநா சபையில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு தனது கடப்பாட்டை கட்டுப்படுத்திக் கொண்டது.

நிலவுக்கு ஒரு குணமுண்டு, அந்தக் குணம் அது தோன்றும் மண்ணைப் பொறுத்து மாறுபடும். ஜெருசலேம் நிலவு ஒரு குழப்படி நிலவு, அதுவும் Blood Moon எனப்படும் செந்நிலா யூதர்களின் நான்கு பிரதான பண்டிகைகளையொட்டி வானில் உலாவரும் போது, யூதேயாவில் வில்லங்கம் தலைவிரித்தாடும். 


கிறிஸ்துவுக்கு பின்னரான வரலாற்றில் இதுவரை எட்டு  தடவைகள் இந்த Tetrad of Blood Moons (நான்கென்தொகுதியின் செந்நிலாக்கள்) எனும் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.  இந்த எட்டு தடவைகளில்  கடைசி நான்கு தடவைகள் இந்த செந்நிலாக்கள் நான்கும் ஜெருசலேமிற்கு மேலால் தோன்ற, நான்கு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

1493-94 காலப்பகுதியில் ஸ்பெயின் தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்களே, பாதுகாப்பான நிலம் தேடி கொலம்பஸின் கப்பலில் ஏறி அமெரிக்காவை அடைந்தார்களாம். 1949-1950ல் செந்நிலாக்கள் தோன்ற இருந்த காலத்தில் தான் 1948ல் இஸ்ரேல் எனும் யூத தேசம் உருவானது.

1967-68ல் தோன்றிய செந்நிலாக்கள், முழு ஜெருசலேமையும், 6 நாள் யுத்தத்தின் பெறுபேறாக, யூதர்களிற்கு தாரைவார்த்து விட்டு சென்றது. 2015-16ல் வந்த செந்நிலாக்கள், அமெரிக்காவில் Trumpஐ பதவியில் ஏற்றி, உலக வல்லரசை இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க வைத்துள்ளதாம். 

அடுத்த முறை இந்த நாலு செந்திலாக்களும் யூதர்களின் பண்டிகைக் காலத்தில் தோன்றும் காலம் 2033. இந்தக் இடைப்பட்ட காலப்பகுதியில் தான் அழிக்கப்பட்ட ஜெருசலேம் ஆலயத்தை, முன்றாவது ஜெருசலேம் கோயிலை, மீளக்கட்டியமைக்க இஸ்ரேல் தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்டிட அமைப்பிலிருந்து பலிபீடத்திற்கு தேவையான 20 கலசங்கள் வரை எல்லாம் தயாராகி விட்டதாம். 

யூதர்கள் பழைய இடத்தில் ஜெருசலேம் கோயில் கட்டினால், அதே இடத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின் புனித மசூதிகளிற்கு என்ன நடக்க போகிறது, அதனால் விளையப் போகும் விளைவுகள் என்ன என்பதைத் தான் அரபுலகமும் சர்வதேசமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. 
மூன்றாவது ஜெருசலேம் ஆலயம் கட்டியெழுப்பப்பட்ட்ட பின்னர் யேசுவின் இரண்டாவது வருகை இடம்பெறும் என்ற வேதாகம எதிர்வுகூறலை பல கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கிறிஸ்துவை மீட்பராக (Messiah) ஏற்காத யூதர்களோ, ஜெருசலேம் ஆலயத்தின் மூன்றாவது மீள்நிர்மாணத்துடன் தங்களது முதலாவது மீட்பரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். 

யூதர்களின் நம்பிக்கைகளில் 50 ஆண்டுகளின்  (Jubilee years) நிறைவும் 70 ஆண்டுகளின் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு 50வது ஆண்டும் அடிமைகள் விடுவிக்கப்பட்டு, கடன்கள் தள்ளுபடி செய்யப்பட, கடவுளின் அனுக்கிரகம் தங்கள் மேல் இறங்கும் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.

1917ல் Balfour declaration நடந்து 50 ஆண்டுகளில், 1967ல் ஜெருசலேம் முழுமையாக கைப்பற்றப்பட்டது, அது நடந்து 50 ஆண்டுகள் கடந்து 2017ல் அமெரிக்கா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது. 

May 14,1948ல் சுதந்திரம் கிடைத்து சரியாக 70 ஆண்டுகள் கழித்து அதே நாளில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதுவராயலயம் திறக்கப்பட்டது. அதே நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 58 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் அநியாயமாக சுட்டுக் கொன்றது. 

ஜெருசலேமைப் பற்றி மேலும் மேலும்  அறியும் போதும் வாசிக்கும் போதும், என்றாவது ஒரு நாள் ஜெருசலேம் நகரை நேரில் பார்க்க வேண்டும், வரலாற்றில் இடம்பிடித்த இடங்களை தரிசிக்க வேண்டும் என்ற அவா எழுந்து கொண்டேயிருக்கும். செந்நிலாக்கள் தோன்றாத காலங்களில் அங்கு போவது தான் சிறந்தது போலிருக்கிறது, அப்போது தான் ஜெருசலேம் நகரை அதன் பெயருக்கு தக்கதாய் அமைதியே உருவமாக, அழகான நிலவொளியில் கண்டு ரசிக்கலாம்.


பி.கு

இந்தப் பதிவை மீளாய்வு செய்த SJC92 நண்பன் ஒருவன் கேட்டான்.

“மச்சான்,  அப்ப 2033ல் பிரச்சினை வருமென்றிரியா?”

“அப்படி போலத் தான் இருக்கு”

“ஐயோ..”

“ஏன்டா? “

“அப்ப 2033ல் எங்கட SJC92ன் 60th Birthday Bashக்கு அரோகரா தான் போலிருக்கு”

Friday, 11 May 2018

நிலவோடு பயணம்..
எதோவொரு படத்தில், இரவு நேரம் செந்தில் நிலத்தில் படுத்திருந்து வானத்து நிலாவை சீரியஸாக பார்த்துக் கொண்டு படுத்திருப்பார். செந்திலைப் பார்த்து ஊர்ச் சனமும் வானத்தை அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருக்க, கவுண்டமணி அந்த வழியாக வருவார்.

“டேய், கருவாயா, என்னத்தையடா அப்படி பார்க்கிறாய்” என்று கவுண்டமணி கேட்க, செந்தில் தனக்கேயுரிய நிதானத்துடன் “ஒண்ணுமில்லை அண்ணே, இதே நிலாவை எங்கட ஊரிலும் பார்த்திருக்கிறேன், அதான் எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறன்” என்று பதிலளிப்பார்.

கவுண்டமணி செந்திலின் அந்த நகைச்சுவைக் காட்சி இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். ஆனால் அந்தக் காட்சியில் செந்தில் பகிடியாக சொன்ன கருத்தில் நிலா பற்றிய ஒரு ஆழமான விஷயம் இருக்கிறது. 

நிலவிற்கு ஒரு குணமுண்டு, அந்தக் குணம் அது தோன்றும் மண்ணைப் பொறுத்து மாறுபடும். நிலவின் குணம் அதை பார்ப்பவரின் மனநிலையை பொறுத்தும் வேறுபடும். இரவிற்கு ஆயிரம் கண்கள் என்று கண்ணதாசன் எழுதினார், அந்த இரவினில் தோன்றும் நிலவிற்குள்ளும் வெவ்வேறு  குணங்கள் புதைந்திருக்கும்.


யாழ்ப்பாணத்து நிலவில் எப்போதும் ஒரு சோகம் குடிகொண்டிருக்கும். அமைதியாக காட்சி தரும் நிலவில், நாளை என்ன நடக்குமோ, எங்கே ஷெல்லடி விழுமோ, எங்கே பொம்மர் அடிக்குமோ, யாரை ஆமி சுடுமோ, எந்தப் புலி எங்கு ஆகுதியாகுமோ என்ற ஏக்கம் நிறைந்த சோகம் யாழ்ப்பாண நிலவில் அன்று குடிகொண்ருந்தது.

1990ல் ஒரு நாள், இரண்டாவது ஈழ யுத்தம் தொடங்கி கோட்டை சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். சண்டை தொடங்க, மின்சாரமும் தடைபட்டு விட்டது. காலம்பற வெயிலில் காய வைத்து எடுத்த eveready batteryயில் இயங்கும் National Panasonic வானொலி பெட்டியில், நிலவொளியில் 7:45ற்கு வெரித்தாஸ் வானொலி செய்தி கேட்டுக் கொண்டு, அம்மா சுட்ட மஞ்சள் போட்ட யாழ்ப்பாண தோசையை, உரலில் இடித்த செத்த மிளகாய் சம்பலோடு வெளி விறாந்தையில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், வானத்திலிருந்த நிலவிற்கும் வாயூறியது.

மண்டைதீவு பக்கமிருந்து ஊய் என்ற சத்தத்தோடு வந்த ஷெல், எங்கள் தலைக்கு மேலால் பறந்து போய் இரண்டு வளவு தாண்டி வெறும் வளவுக்குள் விழுந்தது. கொஞ்சம் தள்ளி இங்கால விழுந்திருந்தால் யாழ்ப்பாண தோசையோடு நாங்களும் சிதறியிருப்போம். அடுத்த பத்து பதினைந்து நிமிஷத்தில், ஷெல்லடியில் இருந்து தப்ப நாங்கள் இருபாலை நோக்கி சைக்கிள்களில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். சங்கிலியன் தோப்பு தாண்டி, மந்திரி மனையடியில் ஹெலி வருகிறது போலிருக்கு என்று வானத்தை பார்க்க, நிலவும் எங்களோடு பயத்தோடு பயணித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

2009 மே மாதம் 9ம் திகதி பெளத்தர்களின் வெசாக் கொண்டாடிய முழு நிலவும், முள்ளிவாய்க்காலில் அரங்கேறும் இனப்படுகொலைக்கு சாட்சியாகப் போகும் நிலவும் வேறு வேறாகத் தானிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த மனித அகோரத்தில் சிதறிய தமிழ் மக்களின் ரத்தம், தேய்ந்து கொண்டிருந்த நிலத்தின் கன்னத்தில்  கட்டாயம் ஒட்டிக் கொண்டிருக்கும்.  நிலவின் சாட்சியமும் ஒரு நாள் சர்வதேச நீதிமன்றில் ஏறும், ஏற வேண்டும். 

இன்றும் யாழ்ப்பாண நிலவில் சோகம் தான் புதைந்து போயுள்ளது. தன் கண்முண்ணே வன்னியில் நடந்தேறிய இனப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையே என்ற கோபம் நிறைந்த சோகமும், மெல்ல மெல்ல தமிழினம் தனது தனித்துவத்தையும் பலத்தையும் இழந்து கொண்டிருக்கும் அவலத்தை நினைத்தும் நிலவு படும் வேதனையின் சோகம் இன்றைய யாழ்ப்பாண நிலவின் முகத்தில் தெரியும். 

 கொழும்பில் படிக்கும் காலங்களில், மினி பஸ்ஸின் யன்னலிற்கு வெளியே ஒரு பாதுகாவலனைப் போல நிலவும் கூடவே வரும். குண்டு வெடிப்புக்களும் கைதுகளும் அறம்புறமாக கொழும்பில் அரங்கேறிக் கொண்டிருக்க, கூடவே பயணிக்கும் நிலவின் நிழலில் ஏதோவொரு அரவணைப்பும் ஆறுதலும் கிடைக்கும்.

காதலிக்கும் காலங்களில் நிலவு இன்னும் கொஞ்சம் அழகாக தெரியும். லூசுத்தனமாக நிலவோடு பேச பழகியது காதலிக்கும் பொழுதுகளில் தான். அப்படி பேசப் பழகிய  பழக்கத்தில் இன்றும் நிலவோடு உறவாடல் தொடர்கிறது.  

டுபாய்க்கு போகும் போது நிலவை பார்க்க, அந்த நிலவில் ஒரு தனிமையும் இறுக்கமும் புலப்பட்டது. பாலைவனத்திற்கு மேலால், வெம்மை கலந்த காற்றோடு உறவாடும் நிலவு, டுபாய் நகரத்தின் வானுயர்ந்த அழகிய கட்டிடங்களிற்கு மேலால் மெல்ல மெல்ல அசைந்து போகும். கட்டிடங்களை பார்க்கும் நிலவு, அந்த கட்டிடங்களை கட்ட, கடும் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்த, உழைக்கும், தொழிலாளர்களை நினைத்து கொள்ளும் ஏக்கம் தான் டுபாய் நிலவில் பதிந்திருக்கும். 


மெல்பேர்ண் நிலவில் குதூகலமும் குளிர்மையும் நிறைந்திருக்கும். உலகின் மிகச்சிறந்த நகரம் என்ற இறுமாப்பும் கர்வமும் மெல்பேர்ண் நிலவின் முகத்தில் அப்பட்டமாக தெரியும். அந்த அகம்பாவத்தில், கேட்டுக் கேள்வி இல்லாமல் காரின் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ளும், தனித்த நீண்ட பயணங்களை இனிமையாக்கும். 

Blue Moon, Red Moon, Super Moon, சந்திர கிரகணம் என்று விதம் விதமாக நிலவு தோன்றும் போதும், சூரியனோடு இணைந்து அவதாரங்கள் எடுக்கும் போதும் வானியலாளர்கள் அதை பெரிதுபடுத்த, ஊடகங்கள் அதை பூதாகரமாக்க, முழு உலகமும் இணைந்து, இரவிரவாக விழித்திருந்து நிலவை பார்க்கும். 

நிலவோடு பயணிப்பது ஒரு இனிமையான சுகம். வளர்ந்து தேய்ந்து, பெளர்ணமியில் முழுமையடைந்து, அமாவாசையில் காணாமல் போய், வடிவங்கள் மாறி, நிறங்களும் மாறி, முகிலில் மறைந்து, வானில் எழுந்து, ஒளித்து பிடித்து விளையாடும் நிலவோடு பயணிக்கும் பயணத்தை அனுபவித்து ரசித்தவர்களிற்குத் தான் அதன் அருமை விளங்கும்.

Friday, 4 May 2018

Group Photo @ PhuketFebruary 22, 2018
SJC92 Bash @ Phuket
இரண்டாம் நாள்

“எல்லாரும் வராமல் படம் எடுக்கேலாது” 

சிறிபிரகாஷ் முழங்கினான். மூன்று மணிக்கு Group Photo எடுக்க போறம், எல்லோரும் இந்த Bashற்கு என்று பிரத்தியேகமாக அடித்த T’Shirt அணிந்து கொண்டு வாங்கடா என்று திரும்ப திரும்ப சொல்லியும் இரண்டு பெடியளை காணவில்லை. பரி யோவானின் விழுமியங்களில் ஒன்றான punctuality, புனித Phuket மாநகரில் சந்தி சிரித்தது. 

“மச்சான், அடிக்கிறன் அடிக்கிறன்.. கோலை எடுக்கிறான்கள் இல்லைடா” சத்தி மாஸ்டர் ஒரு பக்கத்தால பதற, “எந்த ரூம் நம்பர் மச்சான்.. நான் போய் அடிச்சு கூட்டிக் கொண்டு வாறன்” என்று லண்டன் ஜெய்  களத்தில் இறங்கினான்.

மனிசி மாரிடம் திட்டு வாங்கி, பிள்ளைகளை கொஞ்சி குலாவி கண்ணீர் மல்க விடை பெற்று, தேசங்கள் கடந்து, பல மணித்தியாலங்கள் பயணம் செய்து, ஒன்று கூடல்களிற்கு வரும் நண்பர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் தருணம் இந்த Group photo தான். 

பெடியள் எல்லோரும் எந்தவித பரபரப்பும் அவசரமும் காட்டாமல் பொறுமையாக ஒருவரோடு ஒருவர் அலட்டிக் கொண்டு Novotel Resortன் வாசலில் காத்திருக்க, லண்டனிலிருந்து வந்திருந்த சஞ்சீவனையும் சஞ்சேயையும் தேடும் படலம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டிருந்தது. 

வேலைப் பளு காரணமாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் சில பெடியள் பிந்தி வந்தார்கள், வேறு சிலர் அதே காரணங்களுக்காக முந்தி வெளிக்கிட்டார்கள். வந்தவர்கள் அனைவரும் ஒன்றாய் நிற்கும் நாள் நேரம் பார்த்துத் தான் Group Photo எடுப்பதற்கான முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்தது.

எங்களுடைய ஒன்று கூடலின் இரண்டாவது நாளான அன்று காலையில் Group Cooking, மத்தியானம் Group Photo, இரவு Seven Course Group Dinner என்று திட்டம் தீட்டப்பட்டிருந்தது. 

“மச்சான் , எழும்பிட்டீயா” என்று கேட்டு அன்று காலம்பற ஆறரை மணிக்கே சத்தி மாஸ்டரிடம் இருந்து அழைப்பு வந்தது. பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த “பாகவதர்” யாதவன் விட்ட குறட்டை சத்தத்திலும் தாள கதி தவறவில்லை. 

பல்லு மினிக்கி, குளித்துவிட்டு, Breakfast சாப்பிட வந்தால், சிக்காகோ சாமியும் டாக்குத்தர் கோபியும் சத்தி மாஸ்டரோடு பாணும் முட்டைப் பொரியலும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாங்கள்.

“டேய் மச்சான், நேத்து வாங்கின நாலு கிலோ மட்டன் காணாது என்று கிளி சொல்லுறான்” சத்தி மாஸ்டர் தொடங்கினார். “மச்சான், நான் சொல்லுறன்.. கனடால நான் ஆயிரம் பேருக்கு சமைக்கிறனான்.. நாப்பது பேருக்கு இருபது கிலோ ஆட்டிறைச்சி வேணும்” கோப்பிக் கோப்பையைத் தூக்கிக்கொண்டும்,  தொப்பையைத் தள்ளிக் கொண்டும் “கிளி” சுரேஷ் எங்கிருந்தோ பறந்து வந்தான்.

“ஐயோ, மச்சான்...பட்ஜெட் இடிக்குமடா” என்று அலற, கோபியும் சுவாமியும் தலையிட்டு பேச்சுவார்த்தைற்கு உதவி செய்ய, இன்னுமொரு நாலு கிலோ ஆட்டிறைச்சி  வாங்க இணக்கம் எட்டப்பட்டது. “சொன்னா கேளுங்கடா... உது காணாது” என்று கிளி பழையபடி மரத்தில் ஏறினான்.

“சரி..சரி.. கணவாய், சிக்கன், மரக்கறி.. வேறென்னடா வாங்கோணும்” என்று சத்தி மாஸ்டர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தான். தட்டை வானில், கிளியை வெட்டி விட்டு, சத்தி மாஸ்டரையும் டாக்குத்தர் கோபியோடு சிக்காகோ சுவாமியையும் ஏற்றி ஃபுகட் சந்தைக்கு அனுப்பிவிட்டு வர, கிரிஷாந்தன் தேத்தண்ணி கலக்கித் தந்தான். 

Novotel Hotelகாரன்கள் எங்களுக்கென்று பிரத்தியேகமாக சகல வசதிகளுடன் கூடிய குசினியையும், உதவிக்கு ஒரு அழகான தாய்லாந்து சமையல்காரியையும் அனுப்பியிருந்தார்கள். சமையல்காரியை அன்பாக கலைத்து அனுப்பி விட்டு, எங்கட SJC92 பெடியள் சமைக்கத் தொடங்கினார்கள். 

ஒரு பக்கம் gloves அணிந்து இறைச்சி வெட்டினாங்கள், மற்றப் பக்கம் Sunglass போட்டுக் கொண்டு வெங்காயம் வெட்டினாங்கள், அடுப்பை ஒருத்தன் ஸ்டைலாக பற்ற வைத்தான், பெரிய சட்டியை லாவகமாக ஒருத்தன் அடுப்பில் ஏற்றினான் என்று குசினியில் சமையல் களைகட்டத் தொடங்கினது.

“மச்சான், எங்கட மனிசிமார்...” என்று தொடங்கி பெடியள் கூறிய அரிய பல கருத்துக்கள் அவர்களின் நலன் கருதி இந்தப் பதிவிலிருந்து தவிர்த்து விடுகிறோம்.


“பெருஞ் சீரகம் போடாமல் சமைக்கிறாங்க மச்சி” என்று கிளி, சமையல் அறையிலிருந்து வெளிநடப்பு செய்தான். “மச்சான், கருவேப்பிலை இருக்காடா” என்று யாரோ ஒருத்தன் கத்தினான். தளபதிகள் கோபியும் சத்தி மாஸ்டரும் சமையல் படையணியை, களத்தில் களமாடிக் கொண்டே வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். லண்டனிலிருந்து வந்திருந்த கபிலன் மாஸ்டர் சத்தமேயில்லாமல் எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார். 

“மச்சான், டேய் நீ கடைக்கு போய் தயிரும் உப்பும் வாங்கியாடா.. ” என்று ஊர் மணத்தையும் சிறுபிராய ஞாபகத்தையும் மீளவும் வரவழைத்தார்கள். மளமளவென்று வெட்டினார்கள், கொத்தினார்கள், பிரட்டினார்கள், பாத்திரங்கள் கழுவினார்கள், வெளியே பலர் குழுமியிருந்து கதையும் அளந்தார்கள். கதைத்துக் கொண்டிருந்த வாதுலன் குசினிக்குள் வந்து சமைக்கிற மாதிரி நடித்து படம் எடுத்துக் கொண்டிருந்தான். 

முதலில் bitesற்கு யோகதாஸின் தலைமையில் சமைத்த றால் பொரியலை சுடச்சுட கொண்டு வந்து பரிமாறத் தொடங்க, அந்த ருசியே பலரை உச்சுக் கொட்ட வைத்தது. “இது தான்டா றால் பொரியல்” என்று விட்டு, அடுப்பிலிருந்து எடுத்துச் சாப்பிட சிறிபிரகாஷ் குசினிக்குள் புகுந்து விட்டான். 

மத்தியானச் சாப்பாட்டிற்கு கணவாய் குழம்பு, ஆட்டிறைச்சி பிரட்டல், கத்தரிக்காய் வெள்ளைக்கறி, கெக்கரிக்காய் + தக்காளி சம்பலோடு, வாழையிலையில் எங்கட பெடியள் படைத்த விருந்தை வாழ் நாளில் மறக்கேலாது. சாப்பிட்டு முடிய, அரவிந்தன் ஓடிப் போய் கடையில் எல்லோருக்கும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்தான்.
“டேய், வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு போய் பிரண்டு படுத்துடாதீங்கோடா.. மூன்டு மணிக்கு Group Photo” என்று அன்பாக வெருட்டி அனுப்பியிருந்தோம். அப்படி எச்சரித்திருந்தும், நேர மாற்றம் காரணமாக அறையில் போய் பிரண்டு படுத்திருந்த லண்டன் பெடியள் சஞ்சீவனையும் சஞ்சேயையும், அறைக் கதவை தட்டி, படுக்கையால் எழுப்பி, Group Photo எடுக்க கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள்.

“ஒரு camera, ரெண்டு நல்ல phone, அவ்வளவு தான், WhatsAppல் படம் வரும் எல்லோரும் download பண்ணலாம்” என்று சத்தி மாஸ்டர் கறாராக சொல்ல, எல்லோரும் தங்களது தொலைபேசிகளை பொக்கற்றுக்குள் வைத்தார்கள். 

“மச்சான், கொஞ்ச பேர் இந்த படி வழிய இருங்கடா, மிச்ச பேர் நிக்கலாம்” சிறிசெல்வா Group Photo எடுக்க பெடியளை வழிநடத்தினான். பரி யோவானில் வாத்திமாரிற்கும் prefects மாரிற்கும் கட்டுப்பட்டு பழகியவர்கள் சொல்பேச்சு கேட்டார்கள். 

“முதல்ல இந்தப் பக்கமா எடுப்பம்.. பிறகு மலையும் கடலும் வாற மாதிரி அந்தப் பக்கம் எடுப்பம்” என்று சிறிசெல்வா கட்ட்டளைகளை மளமளவென பிறப்பித்தான். பள்ளியில் Sea Scoutsல் கலக்கியவனிற்கு கட்டளை பீடத்தில் அமர்வது அல்வா சாப்பிடுற மாதிரி இலகுவாக இருந்தது,  தானாக அமைந்தது.

வந்திருந்த எல்லோரும் இணைந்து Group Photo எடுத்து முடிய, தனிய தனியவும், இருவர் இருவராகவும் குழுக்கள் குழுக்களாகவும், பெடியள் படம் எடுக்க தொடங்கினார்கள். “Boscoவில் படித்தவன்கள் எல்லாம் இஞ்சால வாங்கடா” என்று குரல் வர ஒரு கூட்டம் அங்கால போனது. 

பின்பு பரி யோவானில் பாலர் வகுப்பில் சேர்ந்த குறூப், Hostel Boys, London Group, Australian Gang என்று  SJC92 என்று இணைந்த கூட்டத்தை, மாறி மாறி கட்சி பிரித்தார்கள்.  உரும்பிராய் “கிழங்குகள்” மட்டும் ஊர் பெயரைச் சொல்லி ஒன்றாய் இணைந்து படம்பிடித்து ஃபிலிம் காட்டினார்கள். 

காலங்கள் கடக்கும் போதும் ஆண்டுகள் மறையும் போதும் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும் நினைவுகளின் சாட்சியாக மிளிர்வது இந்த Group photo தான்.

Friday, 27 April 2018

பம்பல் @ Phuket
“மச்சான், ஷெல்டன்ட bagஜ காணேல்லயாம்” எனக்கு வெறுப்பேற்றவென்றே சிரிலங்கா இலச்சினை பொறிக்கப்பட்ட T’Shirt அணிந்து கொண்டு வந்த அருள்மொழி, முறைப்பாட்டை பதிவு செய்யும் போது மதியம் ஒரு மணியிருக்கும்.

பெப்ரவரி 21, 2018 புதன்கிழமை அன்று காலை எங்களது SJC92 நண்பர்கள் குழாம், Phuketல் ஒன்று கூடத் தொடங்கியிருந்தோம். அன்று காலை, கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹொங்கொங், டுபாய் நகரங்களிலிருந்து Phuket சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறு குழுக்களையும், கம்போடியாவிற்கு கோயில் பார்க்கப்போன பக்த கோடிகளையும் காவிக் கொண்டு நான்கு வாகனங்கள் நாங்கள் தங்கியிருக்கும் Novotel Phuket Resortஐ வந்தடைந்ததும், எங்களது ஒன்றுகூடல் களைகட்டத் தொடங்கியது.

“மச்சான், உனக்கு தெரியுமா ஷெல்டன்ட bagஐயும் அடிச்சிட்டாங்களாம்” சிவனேயென்று தன்பாட்டில் எலுமிச்சம் பழச்சாறு குடித்துக் கொண்டிருந்த ரோய் பிரதீபனிற்கு “அம்மான்” ராஜரட்னம் கதை விட்டுக் கொண்டிருந்தான்.

Novotel Hotelன் Bar எங்களை வரவேற்கவென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்க, முதல் நாளே வந்திறங்கிய சிலரும், அன்று காலை லண்டனிலிருந்து நேரடியாக வந்திறங்கிய நண்பர்களும், வாகனங்களில் வந்திறங்கிய பட்டாளத்தை ஆரத் தழுவி வரவேற்றோம்.

“டேய், யாராவது ஷெல்டன்ட bagஐ கண்டால் சொல்லுங்கடா, ப்ளீஸ்.. அவன் அழுறான்டா” சிக்காகோவிலிருந்து வந்திருந்த DJ சுவாமி, கத்தியே சொன்னான். 

வாழ்வில் ஏற்படும் வெவ்வேறு விதமான சந்தர்ப்ப சூழல்களில் எத்தனையோ விதமான நட்புக்கள் நம்மை தொற்றிக் கொண்டாலும், பள்ளிக்கால நட்பில் இருக்கும் சிறப்புப் பந்தம் தனித்துவமானது. பள்ளித் தோழனோடு நட்பு பாராட்டும் போதும், பழங்கதை பேசி பம்பலடிக்கும் போதும், இன்றைய வாழ்வின் சவால்களும், குடும்ப பாரமும் அந்தக் கணங்களில் மறைந்து, நாங்கள் மீண்டும் இனிய இளமைக் காலங்களிற்கு பயணித்து விடுவோம். காலங்களை கடக்கும் வல்லமையும், காலங்கள் கடந்து நிலைக்கும் வலிமையும், பள்ளிக் கால நட்பிற்கு மட்டுமேயுண்டு. 

“மச்சான், we may have to lodge a complaint about shelton’s bag” சிங்கப்பூலிலிருந்து முதல் நாளிரவு வந்திறங்கியிருந்தும், கண் முட்ட நித்திரை வழிந்த அரவிந்தன், கடுமையான முடிவெடுக்க தயாரானான்.

கடலும் மலையும்  முட்டி மோதி காதல் கொள்ள, அதை ஓரமாக நின்ற நெடுந்துயர்ந்த தென்னை மரங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் Phuket தீவின் ஒரு கரையில் தான் எங்களது ஒன்றுகூடலிற்கான களம் அமைந்திருந்தது. 

“டேய், ஷெல்டன்ட bagஐ யாரோ எடுத்திட்டாங்களாம்” சிட்னியிலுருந்து பறந்து வந்திருந்த சத்தி மாஸ்டரும் காணாமல் போன Bagஐ கண்டுபிடிக்கும் படலத்தில் தீவிரமாக இறங்கினார். 

ஐந்தாண்டுகளின் பின்னர், பரி யோவான் கல்லூரியின் 1992ம் ஆண்டு நண்பர்களின் இரண்டாவது ஒன்றுகூடலிற்கு, ஒரு சிறிய குன்றில் அமைந்திருந்த Novotel Phuket Resortஐ களமாகத் தெரிவு செய்திருந்தோம். ஹொட்டலின் முன்னாலுள்ள வீதி கடந்தால், மறுபக்கம் அழகிய கடல்.  குன்றின் ஏற்றத்திலிருந்த ஹொட்டலின் வாயிலுக்கு வர வீதியிலிருந்து ஒரு தட்டை வான் shuttle service ஓடிக்கொண்டிருந்தது.

“மச்சான்.. யாரும் ஷெல்டனின் Bagஐ மாறி எடுத்திருப்பியல்.. ஒருக்கா check பண்ணுங்கடா” தொண்ணூறுகளின் பிரிந்து, இந்தமுறை லண்டனிலிருந்து வந்து எம்மோடிணைந்த நண்பன் நந்தகுமார் கோரிக்கை வைத்தான். 

45வது அகவை கொண்டாட்டம் என்று மனிசி மாருக்கு சாட்டு சொல்லி, நாள் குறிப்பதில் புடுங்குபட்டு, “தாய்லாந்தா..?” என்று ஒரு மாதிரியாக எழுந்த கேள்விக் கணைகளை சமாளித்து, T’Shirtஐ Red & Blackல் அடிப்பதா இல்லை வெள்ளை நிறத்தில் அடிப்பதா என்று அடிபட்டு, என்ன program எப்படி செய்வது என்று கண்டங்கள் கடந்து பேச்சுவார்த்தை நடாத்தி, “தண்ணியடிக்கவும் கூத்தடிக்கவும் தானேடா get together” என்ற நிகழ்விற்கு வராத நண்பர்களின் இழி சொற்களை புறந்தள்ளி, நட்பை கொண்டாட நாங்கள் 44 பேர்அழகிய Phuket நகரில் தரையிங்கியிருந்தோம். 

“டேய் ஷெல்டன்ட bagஐ யாரடா வச்சிருக்குறீங்க.. வச்சிருந்தது காணுமடா..” காலையில் கனடாவிலிருந்து பறந்து வந்த “கிளி” சுரேஷ், சொப்பன சுந்தரியை ஞாபகப்படுத்தினான். 

வெள்ளிக்கிழமை 23 பெப்ரவரி அன்று Phuketல் சுனாமி அடிக்கும் என்று, எங்களது WhatsApp குறூப்பில், பஹ்ரேயனிலிருந்து டானியல் பீ ஷியாமள்ராஜ் என்ற தீர்க்கதரிசி எதிர்வு கூறியிருந்தது, சாதுவாக பயத்தை தந்திருந்தது உண்மை. 2004 சுனாமியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் Phuketம் ஒன்று என்பதால் அந்த பயத்திற்கு கொஞ்சம் நியாயமும் இருந்தது. ஹொட்டலில் எங்கு திரும்பினாலும் “Tsunami evacuations way” என்ற பதாதைகள் வேறு பயத்தை அதிகரித்தன.

“மச்சான் உன்ட Bagல் என்னடா இருந்தது” அழுவாரைப் போல மூஞ்சியை தூக்கி வைத்திருந்த ஷெல்டனை கேட்டேன். எல்லோரும் கனகாலத்திற்கு பின்னர் சந்தித்த நண்பர்களோடு பம்பலாக கதைத்துக் கொண்டிருந்த அற்புத தருணத்தை குழப்பும் கெட்ட கிருமியாக ஷெல்டனின்  “காணாமல் போன bag” விவகாரம் உலா வந்து கொண்டிருந்தது.


“அ...அ.. bagல மச்சான் ... என்ர tooth pasteம் brushம் இருந்தது” ஷெல்டன் அனுங்கினான். “வேற என்னவாவது இருந்ததா?.. உன்ட passport ?” ஷெல்டனை துலாவினேன். “ச்சீ.. passport பத்திரமா இருக்கு..வேறொன்றும் இருக்கேல்ல” ஷெல்டனின் அப்பாவித்தனமான பதிலைக் கேட்டு தலை சுற்றியது.

“டேய் உதுக்கு போயாடா இவ்வளவு ஆர்ப்பாட்டம்..எல்லோரையும் போய் தேட வைத்துக்கொண்டு..” ஷெல்டனை கடிந்து கொண்டேன். “ஹொட்டலில் கேட்டால் pasteம் brushம் தருவாங்களே.. லூசுப் பயலே” என்று விட்டு திரும்ப, கொழும்பிலிருந்து ஷெல்டனோடு ஒன்றாய் பயணித்த நிஷான் தன்னுடைய phoneல் இருந்த படத்தை கஜனிற்கு காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

“என்னவாம் மச்சான்” என்று கஜனைக் கேட்க. கையை உதறி விசிறிக் கொண்டே கஜன் கத்தினான், “இந்த நாய் அப்படி ஒரு bagஏ கொண்டு வரவில்லை மச்சான்.. இங்க பாரடா” என்று கொழும்பு விமான நிலையத்தில் ஷெல்டனும் மற்ற நண்பர்களும் பயணப்பொதிகளுடன் நிற்கும் படத்தை காண்பித்தான். 

கொண்டு வராமலே “காணாமல் போன” Bagஐ கலைத்து கலைத்து தேடிக் களைத்து போன காமெடி நாடகத்துடன், எங்களது SJC92 Batchன் இரண்டாவது Bash, பம்பலாக களை கட்டத் தொடங்கியது.

தொடரும்

Group Photo @ Phuket

Thursday, 19 April 2018

மரவெள்ளி...
“ஐசே... கிழங்கு.. எழும்பும்.. நீர் தான் ஐசே..எழும்பும்”, 

அருளானந்தம் Blockல் இருந்த எங்களது வகுப்பறையின், பிரதான வீதிப் பக்கம் இருக்கும் வாங்கு வரிசைகளிற்கு இடையால், உடம்பை ஒரு பக்கமாக சரித்து, வேகமாக நடந்து, வகுப்பறையின் முற்பகுதிக்கு வந்து, அடுத்த வரிசை வாங்குகளிற்கு நடுவே புகுந்து கொண்டே, பிரபாகரன் மாஸ்டர் உறுமாவார்.

பிரபாகரன் மாஸ்டர் கூப்பிட்ட “கிழங்கு”, உரும்பிராயிலிருந்து பாடசாலைக்கு வரும் நண்பன் ஆதவன், நடுங்கிக் கொண்டே எழும்புவான்.

“ஐசே.. பகுதிபட காய்ச்சி வடித்தல்.. சுருக்கமா விளங்கப்படுத்தும்” பிரபாகரன் மாஸ்டர், ஆதவனிற்கு பக்கத்தில் வந்து நின்று கேள்வியை கேட்க, எங்களுக்கு பதறும். ஆதவன் சயன்ஸ் பாடத்தில் வலு கெட்டிக்காரன், அவன் சரியாக பதில் சொல்லி விடுவான், எங்களிடம் கேள்வி வராது, நாங்கள் அன்று பிரபாகரன் மாஸ்டரிடம் அடி வாங்காமல் வீடு போய் சேருவோம். 

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியான சிவக்குமரன் அவதரித்த, உரும்பிராய் மண்ணிலிருந்து வரும் பிரபாகரன் மாஸ்டரும் அதே ஊரவனான ஆதவனிற்கும் இடையிலான இந்த கிழங்கர்கள் ஊடலை எங்களது வகுப்பில் படித்த எவரும் மறந்திருக்க மாட்டார்கள். உரும்பிராய் மண்ணில் தாராளமாக விளையும் மரவெள்ளிக் கிழங்கை அடித்தளமாக வைத்தே இந்த “கிழங்கு நாடகம்” பரி யோவான் வகுப்பறையில் அரங்கேறும்.

தங்க பஸ்பம் போன்ற நிறத்துடன், நல்ல மொறு மொறுப்பாக மரவெள்ளியை பொரித்து, உப்பும் மிளாகாய்த் தூளும் போட்டு பிரட்டி, கொழும்பு கோட்டை ரோட்டோரம் வைத்து விற்ற தள்ளு வண்டில்காரனை என்றும் மறக்கேலாது. மரவெள்ளி பொரியல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் அதை சுவைபட தயாரித்து சிரிப்போடு பரிமாறியவனை எப்படித்தான் மறப்பது?

தொண்ணூறுகளின் மத்தியில், CIMA படிக்கும் காலங்களில், பம்பலப்பிட்டியில் இருந்து பஸ் பிடித்து வந்து கொழும்பு கோட்டை பிரதான தொலை தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கு (Telecom) முன்னால் இருக்கும் பஸ் தரிப்பிடத்தில் இறங்கும் போது மணி இரவு ஒன்பதை தாண்டியிருக்கும்.

வத்தளைக்கு வீட்டிற்கு போக அவ்விடத்திலிருந்து புறப்படும் 187 ஜா-எல பஸ் பிடிக்க வேண்டும். வெள்ளைநிற Telecom கட்டிடத்திற்கும் மற்றப் பக்கமிருந்த பழுப்பு நிற YMCA கட்டிடத்திற்கும் இடையில் இருந்த இடைவெளியடியில் நின்ற சிறிய மரத்திற்கு கீழ் தான், இந்த இரவுநேர மரவெள்ளி பொரியல் தள்ளு வண்டிக்காரன் தனது கடையை நடாத்திக் கொண்டிருப்பான். 

தள்ளு வண்டிக்காரனிற்கு சரி பின்னால், உயரமான பரணில் ஆமிக்காரன் ஒருத்தன் சென்ரிக்கு நிற்பான். 1980களில் Telecom கட்டிடத்தை குறிவைத்து ஈரோஸ் இயக்கம் நடாத்திய குண்டுத் தாக்குதலின் விளைவாக, அந்த பிரதேசமே உயர் பாதுகாப்பு வலயம் தான். 

“கொஹமத மல்லி” என்று அன்பாக விசாரிக்கும் தள்ளு வண்டிக்காரனிடம், பத்து ரூபாய்க்கு ஒரு சின்ன bag நிறைய சுடச்சுட மரவெள்ளி பொரியல் வாங்கி, ரோட்டோரம் இருக்கும் இரும்பு தடுப்புச் சுவரில் சாய்ந்து கொண்டே, ஒவ்வொரு கிழங்காக பதறாமல் எடுத்து, உறைப்பு மரவெள்ளிக் கிழங்குப் பொரியலை வாய்க்குள் போட்டு, மெல்ல மெல்ல சரக் சரக் என கொரித்துக் கொண்டு, இரவையும் நிலவையும் ரசிக்க, பரணிலிருந்து ஆமிக்காரன் பாடும் ஏதோவொரு சிங்களப் பாட்டும் ரசனை மிகுந்ததாகவே இருக்க, அற்புதமான அந்த சில கணங்களின் மகிழ்வை குறுக்கறுக்க, ஜா-எல பஸ் கொந்தாவின் காட்டுக் கத்தல் பறந்து வரும்..

“பாலியகொட..வத்தள..மாபொல்ல..மாபாகெய, கதான..ஜா-எல...ஜா-எல”
கொழும்பு தள்ளு வண்டிக்காரன் பொரித்த மாதிரி, வீடுகளில் பொரித்த மரவெள்ளி திறமாக அமைவதில்லை. வீடுகளில் பொரிக்கும் மரவெள்ளி சரியான அளவில் பொரி படாததால், ஒன்றில் மிருதுவாக வாழைக்காய் பொரியலைப் போலிருக்கும், இல்லாட்டி அதிகமாக பொரிந்து கடிக்க கஷ்டப்படும். மரவெள்ளியை இதமா பதமா பொரிப்பதே ஒரு கலை தான் போலிருக்கிறது.

இந்தியன் ஆமிக்காரன்களுடனான சண்டைக் காலங்களில் யாழ்ப்பாணமெங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. அந்தக் காலங்களில், சில நாட்களில் காலை உணவாக மரவெள்ளியை அவித்து, கட்டைச் சம்பலோடு சாப்பிட்ட ருசி இன்றும் வாயில் மொய்த்துக் கொண்டிருக்கிறது. 

ஒரு நாள், அவித்த மரவெள்ளியையும் கட்டைச் சம்பலையும் உரலில் போட்டு இடித்து, இரண்டையும் கலக்க வைத்து, குண்டு குண்டு உருண்டையாக உருட்டி,  அப்பா செய்து தந்த அந்த மரவெள்ளி கிழங்கு உருண்டை இன்றும் நினைவில் நிழலாடுகிறது. 

மரவெள்ளிக் கிழங்கு கறி என்றால் எப்பவுமே தனியாக தான் கறியாக்க வேண்டும். பூசணியரோடு மரவெள்ளியரை இணைத்து கறி வைப்பது என்பது, ஒட்டுக் குழுக்களோடு இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணையானது, ஏற்கவும் முடியாது உண்ணவும் முடியாது.

ரெண்டு பச்சை மிளகாயும் வெட்டிப் போட்டு, மரவெள்ளிக் கிழங்கை பால்கறி வைத்தால், சொல்லி வேலையில்லை. தள தள என்று களி போன்ற மரவெள்ளிக் கறியை, சோற்றிக்கு பக்கத்தில் தரையிறக்க, மரவெள்ளியை விரலால் கிள்ளி தனியே ஒரு ருசி பார்த்து விட்டு தான் சோற்றைப் பிசைய மனம் வரும்.  

மரவெள்ளியை உறைப்பு கறியாக வைக்கலாமோ தெரியாது, குழம்பாக சாப்பிட்டதாக ஞாபகமுமில்லை, உறைப்புக் கறியாக சாப்பிட விருப்பமுமில்லை. மரவெள்ளியை பொரியலாகவும் அவியலாகவும் பால் கறியாகவும் ருசித்து ரசித்து சாப்பிட்டே பழகியாகிவிட்டது, அதை மாற்ற மனம் வராது. 

1970களில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க, வெளிநாட்டு இறக்குமதிகளிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  தென்னிலங்கையில் பஞ்சம் நிலவிய காலமாக இது கணிக்கப்பட, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் விவசாயிகளின் பொற்காலமாக இந்தக் காலப்பகுதி கொண்டாடப்படுகிறது. 

தமிழர் தாயகத்தில் தாராளமாக விளைந்த மரவெள்ளிக் கிழங்கின் அருமை அந்த நாட்களில் இலங்கை நாட்டிற்கே நன்றாக புரிந்த காலமது. மரவெள்ளிக்கிழங்கை வித விதமான உணவுவகைகளாக மாற்றி சாப்பிட்ட காலத்தை அண்ணர் ஒருத்தர் உட்பெட்டியில்,
“அப்பயடா, மரவெள்ளியில் அவியல், கறி, றொட்டி, தோசை, பொரியல், கள்ளுக்கு பிரட்டல், மரவெள்ளிமா கூள், புட்டு, துவையல் என்டு விதம் விதமா செஞ்சு சனம் சாப்பிட்டது” என்று நினைவு கூர்ந்தார்.

மரவெள்ளிக்கு மண்ணின் மணம் கமழும் நல்ல ருசி மட்டுமல்ல, செழிப்பான பொருளாதார வரலாறும் நிறையவே இருக்கிறது.